சிறார்க்குப் பண்பாட்டு வேர்களை நினைவூட்டிய கிராமத்துப் பயணம்

சிறார்க்குப் பண்பாட்டு வேர்களை நினைவூட்டிய கிராமத்துப் பயணம்

படம்: யோகிதா அன்புச்செழியன்

19 Sep 2026 - 5:00 am

3 mins read

சிங்கப்பூரின் நவீன நகர வாழ்க்கையில் வளரும் சிறார்க்குப் பாரம்பரிய கிராமத்து வாழ்க்கை முறையை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை சிறகுகள் அமைப்பு அண்மையில் ஏற்படுத்திக் கொடுத்தது.

‘நம்ம ஊர், நம்ம பண்பாடு, நம் பெருமை’ என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்க (சிண்டா) மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற ‘கிராமத்துப் பயணம்’ நிகழ்ச்சி, இளைய தலைமுறையினருக்கு அவர்களின் பண்பாட்டு வேர்களை அனுபவம் சார்ந்து அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்தது.

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சிறகுகள் அமைப்பின் மகளிரணியினரால் கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“இன்று நம் பிள்ளைகள் நாக்கால் சுவைத்தும், கண்ணால் கண்டும், கையால் தொட்டும், காதால் கேட்டும், மூக்கால் நுகர்ந்தும் ஐம்புலன்களாலும் கிராமத்தை உணர்கிறார்கள். இது புத்தகங்கள் தர முடியாத பாடம்.

“நம் பண்பாடு, மொழி, இசை, உணவு ஆகியவை பழைமையின் சின்னங்கள் அல்ல. அவை நம் வேர்கள். வேர் ஆழமாக இருந்தால் மட்டுமே மரம் உறுதியாக வளரும்,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

குழந்தைகளைக் கவரும் வகையில் நிகழ்ச்சியில் பல்வேறு அனுபவம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் பெட்டிக்கடை ஒன்றும் இடம்பெற்றது. அதில் குழந்தைகள் எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி பொருள்களை வாங்கும் அனுபவத்தைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

வாழை இலையில் உணவு பரிமாறும் முறையை அறிந்துகொண்டதோடு, ‘பிளேடோ’ கொண்டு சாம்பார், பொரியல் போன்ற உணவு வகைகளை உருவாக்கியும் குழந்தைகள் மகிழ்ந்தனர். பல்வேறு வயதினருக்கு ஏற்ற கோலப் பயிற்சிகளும் நடத்தப்பட்டன. சிறு விவசாயிகளாக மாறிய குழந்தைகள் தாமே விதைகளை விதைத்து அவற்றைப் பராமரிக்கும் அனுபவத்தையும் பெற்றனர்.

‘பிளேடோ’ கொண்டு வாழை இலையில் உணவு பரிமாறும் முறையை குழந்தைகள் அறிந்துகொண்டனர்.
‘பிளேடோ’ கொண்டு வாழை இலையில் உணவு பரிமாறும் முறையை குழந்தைகள் அறிந்துகொண்டனர். - படம்: யோகிதா அன்புச்செழியன்

“சிங்கப்பூரில் வளரும் குழந்தைகளுக்கு கிராமப்புறங்களைப் பார்க்கும் வாய்ப்பு மிகவும் அரிது. எனவே, கிராமத்து வாழ்வியலையும் எளிய தமிழ்ச் சொற்களையும் அனுபவபூர்வமாக அவர்களிடம் கொண்டுசேர்ப்பதே எங்கள் நோக்கம்,” என்றார் சிறகுகள் அமைப்பு உறுப்பினர் சௌமியா சென்னகிருஷ்ணன்.

தமிழ் கதைசொல்லும் அங்கம், வீரமங்கை கலைக்குழுவினரின் பறை முழக்கம், ரிதம் நடனக் குழுவினரின் விறுவிறுப்பான ஜிக்காட்டம் முதலியவை நிகழ்ச்சிக்கு உற்சாகம் சேர்த்தன.

வீரமங்கை கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி.
வீரமங்கை கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி. - படம்: யோகிதா அன்புச்செழியன்

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, கிராமத்து உடை அலங்காரப் போட்டியில் சிறார் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடைபெற்ற கிராமத்து உடை அலங்காரப் போட்டி.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடைபெற்ற கிராமத்து உடை அலங்காரப் போட்டி. - படம்: யோகிதா அன்புச்செழியன்

தம் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 36 வயது ர. குகனேஸ்வரி, கணவர் விக்னேஷ் நாயர், பிள்ளைகள் தன்விக், ரிதனயா ஆகியோருடன் வந்திருந்தார்.

“வார இறுதிகளில் பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். அவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டை அறிமுகப்படுத்த இந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் தங்கள் பண்பாட்டையும் வேர்களையும் எளிதாக அறிந்துகொள்ள இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன,” என்றார் அவர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ர. குகனேஸ்வரியும் விக்னேஷ் நாயரும் அவர்களது பிள்ளைகள் தன்விக், ரிதனயா ஆகியோரும்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ர. குகனேஸ்வரியும் விக்னேஷ் நாயரும் அவர்களது பிள்ளைகள் தன்விக், ரிதனயா ஆகியோரும். - படம்: யோகிதா அன்புச்செழியன்

சிறகுகள் அமைப்பின் செயல்பாடுகளைப் பாராட்டிய சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், லாப நோக்கமின்றி தாய்மார்கள் ஒன்றிணைந்து நடத்தும் இவ்வமைப்பு, நமது தமிழ் அடையாளமும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

“ஊர் கூடி தேர் இழுப்பதுபோல அமைந்த இத்தகைய சிறிய முயற்சிகளே வருங்காலத்தில் மிகப்பெரிய சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்ற அவர்.

குறிப்புச் சொற்கள்