பள்ளிப் பருவத்திலிருந்தே தனது மூத்த சகோதரரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து கொண்டு வருகிறார் கரசி சந்திரமோகன், 34.
கரசியின் மூத்த சகோதரர் பாலாவுக்கு 37 வயது ஆகிறது. அவருக்கு மதியிறுக்கம், அறிவுசார் இயலாமைக் குறைபாடு உள்ளது.
பாலாவால் சரளமாகப் பேச முடியாது. அவரின் சைகைகளின் மூலம் அண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்பதை கரசி புரிந்துகொள்கிறார்.
தன்னுரிமை நடத்தை சிகிச்சையாளராகப் பணியாற்றும் கரசி தனது வாழ்நாள் முழுவதும் அண்ணனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே கையாள வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்.
கரசியின் தாயாருக்கு நீரிழிவு நோய் காரணமாக காலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. இதனால் அவர் எந்நேரமும் சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும்.
ஈராண்டுகளுக்கு முன்னர் கரசியின் தந்தையும் காலமானதால் தனது அண்ணனையும் தாயாரையும் கவனித்துக்கொள்ளும் முதன்மை பராமரிப்பாளராகக் கரசி உள்ளார்.
அண்ணனுக்குத் தேவையான மாத்திரைகளைத் தருவது, உணவைத் தயார் செய்வது, குளிப்பாட்டுவது போன்றவற்றில் கரசி ஈடுபாடு காட்டுகிறார்.
“தங்கையாக இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் நான் என் அண்ணனுக்கு அக்காவைப் போல தான் இருக்கிறேன்,” என்றார் கரசி.
தொடர்புடைய செய்திகள்
திருமணமான கரசிக்கு தனது கணவரின் ஆதரவும் பக்கபலமாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில் பெற்றோர், பிள்ளை அல்லது பிள்ளை, பெற்றோர் பராமரிப்பாளர் கதைகளைத் தான் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள்.
ஆனால் சகோதரர்கள் பராமரிப்பாளர்களாக இருக்கும் கதைகள் வெகுசில தான் உள்ளன.
இதனால், கரசி முழுநேரமாக வேலைக்குச் செல்லாமல் தன்னுரிமைத் தொழிலாளராக இருக்க வேண்டிய நிலை.
‘எனேபலிங் வில்லேஜ்’ நடுவத்தில் ‘சிப்ஸ்யுனைட்’ எனும் திட்டத்தில் உறுப்பினராக இருக்கும் கரசி, அத்திட்டம் ஏற்பாடு செய்யும் வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தனது அண்ணனை அழைத்துச் செல்வது வழக்கம்.
பொறியாளராகப் பணிபுரிந்து வந்த கரசி பிறகு தனது பராமரிப்பாளர் அனுபவத்தை வைத்து வேறு பாதையை எடுக்க திட்டமிட்டார்.
அரசாங்கம் அண்மையில் உடற்குறையுள்ளோர் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் பணிக்குழு ஒன்றை அமைத்தது.
அதை வரவேற்கும் கரசி அரசாங்கத்திடம் பராமரிப்பாளர்களாக இருக்கும் சகோதரர்களுக்கு அதிக ஆதரவு குறித்து பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

