தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேசிய அளவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வென்றார் சிவகுமார்

2 mins read
ef2bf183-f755-43b8-8cf1-27cfafbf9cea
சிங்கப்பூர் நடிகர் சிவகுமார் பாலகிரு‌‌ஷ்ணன். - படம்: காஸ்மிக் அல்டிமா பிக்சர்ஸ்
multi-img1 of 2

ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள 16 நாடுகளின் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஏஷியன் அகாடமி கிரியேட்டிவ்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டுக்கான வெற்றியாளர்கள் பட்டியல் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், உள்ளூர் நடிகர் சிவகுமார் பாலகிரு‌‌ஷ்ணனுக்கு தேசிய அளவில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ‘காத்து கருப்பு’ எனும் நகைச்சுவை நாடகத் தொடரில் கதாநாயகனாக திரு சிவகுமார் நடித்திருந்தார். ஒற்றைப் பெற்றோர் கதாபாத்திரத்தில் நகைச்சுவையும் காதலையும் கலந்து அவர் நடித்திருந்தார்.

“பொதுவாக, தமிழ் நாடகங்களில் யதார்த்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நான் நடிப்பேன். ஆனால், முதல்முறையாக நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. இந்த நாடகத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளேன்,” என்று தமிழ் முரசிடம் திரு சிவகுமார், 49, கூறினார்.

“நாடகத்தில் நடித்தபோது விருது குறித்து யோசிக்கவில்லை. ஆங்கிலம், மாண்டரின், மலாய் மொழிகளில் வெளியாகும் நாடகங்களில் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். அவர்களை விஞ்சி எனக்கு விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திரு சிவகுமார்.

மாண்டரின் நாடகத்தில் வெற்றி

கடந்த ஆண்டு மாண்டரின் மொழியில் வெளியான ‘கோடட் லவ்’ எனும் நாடகத்தில் திரு சிவா நடித்திருந்தார். அந்த நாடகத்திற்கும் சில விருதுகள் கிடைத்துள்ளன.

மாண்டரின் மொழியில் திரு சிவா நடித்துள்ள முதல் நாடகம் ‘கோடட் லவ்’ ஆகும். இந்த நாடகத்திற்காக அவர் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்டது சிறப்பம்சம்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நாடகத் துறையில் அனுபவமுள்ள திரு சிவகுமார், ஆங்கில நாடகங்கள் பலவற்றில் நடித்து அசத்தியுள்ளார்.

“ஆங்கில நாடகத்தில் உள்ள வாய்ப்புகளை நான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். பின்னாளில் இது, சிங்கப்பூர் இந்தியர்கள் பலர் ஆங்கில நாடகத் துறையை நோக்கிப் பயணம் செய்ய உதவியது,” என்றார் அவர்.

ஈராண்டுகளுக்கு முன்னர் உளவியலில் பட்டம்பெற்ற திரு சிவகுமார், நாடகத்தில் நடித்துக்கொண்டே இந்தியச் சமூகத்தில் உள்ளோருக்கு மனநல ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

காஸ்மிக் அல்டிமா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 27 பாகங்களைக் கொண்ட ‘காத்து கருப்பு’ நாடகத்தை எஸ்.எஸ்.விக்னேஷ்வரனும் கோகி செல்வமும் தயாரித்தனர். எஸ்.எஸ். விக்னேஷ்வரனும் கபிலன் புலேந்திரனும் அந்த நாடகத்தை இயக்கினர்.

‘மீவாட்ச்’ தளத்தில் இந்த நாடகத்தைப் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்