தமிழுக்குச் சிறப்பாகப் பங்களித்த ஆறு பேருக்கு மீடியாகார்ப் தமிழ் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் தமிழ்ச் சுடர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சனிக்கிழமை (ஜூலை 5) நடைபெற்ற நான்காவது தமிழ்ச் சுடர் விருதளிப்பு நிகழ்ச்சியில் திரு மா. இளங்கண்ணன், 86, திரு ஜே. எம். சாலி, 86, இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
தமிழ்மொழியின் மேம்பாட்டிற்குப் பங்களித்துள்ள தனிநபர்களையும் அமைப்புகளையும் அங்கீகரிக்கும் தமிழ்ச் சுடர் விருதுகள், ஈராண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
மீடியாகார்ப்பும் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து நடத்தும் இவ்விழாவில், செம்பவாங் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவருமான திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக நிலை நிறுத்த அயராமல் உழைத்து, சமூகத்திற்குப் பெரும் பங்காற்றுவோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
“சிங்கை மா இளங்கண்ணன்” என்ற புனைபெயரில் சிங்கப்பூரர்களின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களைப் பிரதிபலித்து, தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான அனுபவங்களைத் தன் விரிவான இலக்கியப் பணியின் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார் திரு மா. இளங்கண்ணன்.
அவர் எழுதியுள்ள ஏறத்தாழ 60 சிறுகதைகளில், பல இனச் சமுதாயத்தில் பல கலாசாரப் பின்னணியில் வாழும் சிங்கப்பூரர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் இன்னல்களையும் எடுத்துரைத்திருக்கிறார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மற்றொருவர், 1964ஆம் ஆண்டு தமிழ் முரசில் இணை ஆசிரியராகப் பணியாற்றச் சிங்கப்பூருக்கு வந்த திரு ஜே எம் சாலி.
தொடர்புடைய செய்திகள்
அன்றுமுதல் சிறுகதை எழுத்தாளர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல பரிமாணங்களில் சிங்கப்பூரை அனைத்துலகத் தமிழ் இலக்கிய மேடையில் இடம்பெறச் செய்வதில் பெரும் பங்காற்றி வருகிறார் திரு சாலி.
தமிழ்த்தோழர் விருது
தமிழ் மொழியை மேம்படுத்த, சமூகத்தில் முன்முயற்சிகளைச் சிறப்பாக வழிநடத்துபவருக்கு வழங்கப்படும் தமிழ்த்தோழர் விருதைத் திரு வடிவழகன் பிவிஎஸ்எஸ் பெற்றுள்ளார்.
மேடை, சமூக ஊடகம், வானொலி, தொலைக்காட்சி எனப் பல்லூடகங்களில் கலைஞராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக, இயக்குநராக, சிங்கப்பூர் தமிழ்க் கலைத் துறையில் தடம் பதித்துள்ளார் திரு வடிவழகன்.
தமிழ்க்கலை விருது
மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியின் புகழ்பெற்ற நட்சத்திரமான திருமதி விக்னேஸ்வரி வடிவழகன் தமிழ்க்கலை விருதைப் பெற்றுள்ளார்.
அண்மையில் ‘ஆறாம் அறிவு’ என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ள இவர், நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் பல மேடைகளில் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.
புத்தாக்க விருது
‘மின் அகரம்’ என்ற தமிழ் மின் அகராதி செயலியை உருவாக்கிய திரு ஷாஹுல் ஹமீது புத்தாக்க விருதைப் பெற்றுள்ளார்.
தமிழ்மொழி கற்றல், தகவல் தொடர்பை ஊக்குவிக்கும் கருவிகளையும் தளங்களையும் உருவாக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதை பெற்ற ஷாஹுல், மாணவர்கள் தேர்வுகளில் பயன்படுத்த உதவும் வகையில் இந்த மின் அகராதியை உருவாக்கியுள்ளார்.
50,000 தமிழ்ச் சொற்களைக் கொண்டுள்ள இந்த அகராதி, பல புகைப்படங்கள், உச்சரிப்புகள், ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ளது.
இளம் சாதனையாளர் விருது
இம்முறை இளம் சாதனையாளர் விருதை மருத்துவர் மா. பிரெமிக்கா, 30, பெற்றுள்ளார்.
தமிழ்மொழியின் கற்றல், பயன்பாடு, முன்னேற்றத்திற்குச் சிறப்பாகப் பங்களித்த 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
மருத்துவம், சமூகத் தொண்டு, கல்வி ஆகிய துறைகளில் தமிழ்ச் சமூகத்திற்கான பிரெமிக்காவின் அர்ப்பணிப்பையும் உள்ளடக்கத்தை வளர்ப்பதில் அவரது தலைமைத்துவத்தையும் இவ்விருது அங்கீகரிக்கிறது.
“இந்த ஆறு பேரைக் கொண்டாடுவதன் மூலம், அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, சமூகத்திற்குத் தொண்டாற்றவும் புத்தாக்கத்தைக் கையாளவும் சமூகத்தினரை ஊக்குவிக்கும் விதமாக இவ்விழா அமைகிறது,” என்றார் மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவுத் தலைவர் ந. குணாளன்.