தொடர்புத்திறன் குறைபாடு உள்ளோருக்காக நிதி திரட்டு

விழிப்புணர்வுக்காக மலையேற்றம் மேற்கொள்ளும் குமரேசன்

தொடர்புத்திறன் குறைபாடு உள்ளோருக்காக நிதி திரட்டு

3 mins read
8e8bbae1-1283-4dd0-8c41-34beb8e7b0b3
ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை ‘ரிஞ்சானி’ (Rinjani) மலையேற்றப் பயணத்தில் தமது அணியினருடன் குமரேசன் தனபாலன். - படம்: குமரேசன் தனபாலன்
Google News Preferred Icon

தமது கனவில் தோன்றிய காட்சியை அழைப்பாகக் கருதி ‘ஆட்டிசம்’ தொடர்புத்திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மலையேற்றம் மேற்கொள்ளவுள்ளார் குமரேசன் தனபாலன்.

‘பயோடெக்’ (Biotech) நிறுவனத்தில் பணிபுரியும் அவருக்கு மலையேற்றம் முக்கியப் பொழுதுபோக்கு. கடந்த 2024ஆம் ஆண்டு, அவர் நேப்பாளத்தில் உள்ள ‘லபுச்சே’ (Labuche) மலையில் ஏறினார்.

மலை உச்சியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருந்தபோது தொடர்புத்திறன் குறைபாடுள்ளோருக்கான செயின்ட் ஆண்ட்ரூஸ் நிலையம் (St. Andrew’s Autism Centre) அவருக்குக் கனவில் தோன்றவே, அந்த நிலையத்துக்கு ஆதரவளிக்கும் அறப்பணியைச் செய்வதற்காகவே விடுக்கப்பட்ட இறை அழைப்பாக அதைக் கருதினார் குமரேசன்.

“நான் 2022ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மலையேற்றங்களை மேற்கொள்கிறேன். இதுபோன்ற அனுபவம் இருந்ததில்லை. தொடர்புத்திறன் குறைபாடு குறித்தும் அந்த நிலையம் குறித்தும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், பெரும் ஈடுபாடு ஏதும் இருந்ததில்லை. அந்தக் கனவு வந்தபிறகு என்ன செய்யலாம் எனச் சிந்திக்கத் தொடங்கினேன்,” என்று பகிர்ந்துகொண்டார் குமரேசன்.

அதைத் தொடர்ந்து, வீடு திரும்பியவுடன் நிலையத்தைத் தொடர்புகொண்ட அவர், தாம் உதவி செய்யக்கூடிய வழிகள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கினார்.

தமக்கு அதிக ஆர்வம் உள்ள மலையேற்றத்தின்மூலம் நிதி திரட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

அதற்காக இரண்டு மலையேற்றப் பயணங்களில் ஈடுபட முடிவெடுத்தார். முதலில் ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை ரிஞ்சானி (Rinjani) மலையை ஏறவும் அதனைத் தொடர்ந்து மே 4 முதல் மே 17 வரை ‘அமா டப்லாம்’ (Ama Dablam) சிகரத்தை ஏறவும் முடிவெடுத்தார்.

இரண்டும் விழிப்புணர்வுப் பயணமாக அமையும் நிலையில், இரண்டாவது பயணம் நிதி திரட்டுக்கான அதிகாரபூர்வப் பயணமாகும்.

“ஆண்டுதோறும் பல்வேறு சிகரங்களை ஏறுகிறேன். அதற்கான செலவுகளை நானே ஏற்கிறேன். இப்பயணத்துக்கான பயண நிறுவனக் கட்டணம் மட்டும் குறைந்தது ஆறாயிரம் அமெரிக்க டாலர்வரை செலவாகலாம். இது தவிர தனிப்பட்ட செலவுகளும் இருக்கும். நான் மேற்கொள்ளும் பயணத்தினால் நிதி திரட்டப்பட்டால் அதுவே மனநிறைவு,” என்றார் குமரேசன்.

ஆண்டுதோறும் தொடர்ந்து மலையேற்றப் பயணங்களில் ஈடுபடும் குமரேசன் தனபாலன்.
ஆண்டுதோறும் தொடர்ந்து மலையேற்றப் பயணங்களில் ஈடுபடும் குமரேசன் தனபாலன். - படம்: குமரேசன் தனபாலன்

அவரது பயணத்தின்மூலம், ‘கிவிங்க்.எஸ்ஜி’ இணையத்தளம் வழியாக 15,000 வெள்ளி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 13,000 வெள்ளிக்கும் மேல் திரட்டப்பட்டுள்ளது. அந்த நிதி, நிலையத்தின் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

“நிதி திரட்டுவதைத் தாண்டி, மக்களுக்குத் தொடர்புத்திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்ற குமரேசன், “பரபரப்பாக இயங்கும் சமூகத்தில் தொடர்புத்திறன் குறைபாடு கொண்டோர் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை மக்கள் கவனிப்பதோ புரிந்துகொள்வதோ இல்லை. ரயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தொடர்புத்திறன் குறைபாடுள்ள ஒருவரைக் காணும்போது மக்கள் பெரும்பாலும் எரிச்சலடைகிறார்களே தவிர, அவர்களுக்குப் பின்னால் இருக்கும் கதையையோ போராட்டத்தையோ புரிந்துகொள்ளத் தயாராக இல்லை,” என்றார்.

மலையேற்றத்துக்காக வாரந்தோறும் இடைவிடாதப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் குமரேசன்.

“இந்தியச் சமூகத்திலிருந்து கூடுதலான மலையேற்ற வீரர்கள் உருவாக வேண்டும் என விழைகிறேன்,” என்று கூறிய அவர், “தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக மட்டும் மலையேறுவதில் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. ஏதோ ஒரு சமூக மாற்றத்திற்காகவோ விழிப்புணர்வுக்காகவோ செய்யும்போது அது அர்த்தமுள்ளதாக மாறுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்