சமயப் பணிகளுடன் சமூகப் பணிகள்

சமயப் பணிகளுடன் சமூகப் பணிகள்

3 mins read
8cbd653a-987b-4a64-bb30-f151cc80e36c
வரும் பக்தர்களுக்கு வயிறார உணவளிப்பதை முக்கியப் பணியாக ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் கருதுகிறது. - படம்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்

சமய வழிபாட்டுத் தலமாகத் தொடங்கிய ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் தற்போது பல்வேறு சமூகப் பணிகளுடன் அனைவருக்குமான கோயிலாகத் திகழ்வது பெருமையளிப்பதாகச் சொன்னார் கோவில் தலைவர் கருணாகரன்.

சிங்கப்பூரின் முக்கியமான, சிறந்த அங்கமாகத் திகழும் பல இன, சமூக ஒன்றிணைவுக்கு ஏற்ப இக்கோவிலின் நடவடிக்கைகள் அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

அன்றாடம் உணவு

ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பேருக்குக் கோவில் உணவளிக்கிறது. வாரயிறுதி நாள்களில் 2,000 பேர் வரை உணவு உண்கின்றனர். கோயில் உணவுக்கூடத்தில் அன்றாடம் மாலை 7.30 மணிக்கு உணவு வழங்கப்படுகிறது.

“இதற்காக மாதந்தோறும் $80,000 செலவிடப்படுகிறது. இது குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியாக அமைகிறது,” என்றார் திரு கருணாகரன்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் உள்ள ஊழியர்கள் பலருக்கு இது வீடு போன்ற அரவணைப்பை வழங்குகிறது.

வேலை முடிந்து களைப்பாக வரும் ஊழியர்களுக்கு வயிறார, சுவையான உணவை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகச் சொன்ன அவர், அவர்களும் இக்கோவிலைத் தங்களுடையதாக எண்ணிப் பங்களிக்க முன்வருவதாகக் கூறினார்.

இந்தக் கோயில், கோவில் நிர்வாகம், சிங்கப்பூரர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரை இணைக்கும் பாலமாகத் திகழ்வதாகவும் சொன்னார் கருணாகரன்.

சிவனடியார்களுக்கு உணவளிப்பது பக்தியின் அடிப்படை மதிப்பு. அதன் நீட்சியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

பல இனச் சமூக ஒன்றிணைப்பு

-

கடந்த ஏழாண்டுகளாக, சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு இக்கோயில் ஆதரவளித்து வருவதைச் சுட்டினார் கோவிலின் நிர்வாகத்தில் பணியாற்றும் சஞ்சீவன் பகீரதி.

சிங்கப்பூரின் பிரபலமான ‘ரிவர் ஹங்பாவ்’ விழாவுக்குக் கோவிலைச் சேர்ந்த தொண்டூழியர்கள் பங்களிக்கின்றனர். “நான் உட்பட கோவிலைச் சேர்ந்த 24 பேர், ஒன்பது நாள்களும், நள்ளிரவு வரை இப்பணிகளில் ஈடுபடுகிறோம்,” என்றார் அவர்.

சீனப் புத்தாண்டு விழாக்களில், ‘வளங்களுக்கான கடவுளாக’ (God of Wealth) வேடமிட்டுக் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வரை பல்வேறு நடவடிக்கைகளில் வேறுபாடின்றிப் பங்கேற்பதையும் அவர் குறிப்பிட்டார்.

சமய வேறுபாடுகளைக் களைந்து தேவையுள்ளோர்க்குச் சரியான நேரத்தில் உதவிகளையும் இக்கோயில் வழங்குவதை விவரித்த அவர், சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டார்.

பல்லின சமூக ஒன்றிணைவுக்கு எடுத்துக்காட்டன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்.
பல்லின சமூக ஒன்றிணைவுக்கு எடுத்துக்காட்டன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில். - படம்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்.

வீட்டைவிட்டு வெளியேறிய சூழலில், சீனப் பெண் ஒருவருக்குக் கோயில் நான்கு மாதங்கள் உணவும் இருப்பிடமும் வழங்கியது.

தீச்சம்பவத்தில் பாதிப்படைந்த மலாய்க் குடும்பத்திற்குச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளும் காலத்தில் கோவில் வளாகத்தில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இயூ டீ வட்டார வெளிநாட்டு ஊழியர் விடுதி தீக்கிரையானபோது, அங்குத் தங்கியிருந்த இந்தியா, மியன்மார், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்குத் தங்குமிடமும் உணவும் தொடர்ந்து வழங்கப்பட்டது.

நன்கொடைப் பங்களிப்பு, சமூக ஆதரவு

தீபாவளி, சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள் ஆகிய முக்கியப் பண்டிகைக் காலங்களில் குறைந்தது ஒன்பது சமூக நிலையங்களுக்குக் கோயில் ஆதரவளிக்கிறது.

ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சி.
ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சி. - படம்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்.

ஆண்டுதோறும் இரண்டு அல்லது மூன்று முறை ரத்த தான நிகழ்ச்சிக்குக் கோயில் ஏற்பாடு செய்கிறது.

சிண்டாவுக்கு நன்கொடையளிப்பு.
சிண்டாவுக்கு நன்கொடையளிப்பு. - படம்: ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்துக்குத் (சிண்டா) தொடர்ந்து கோயில் நன்கொடையளிக்கிறது. சைவ சமய வகுப்புகளுக்காக ஆண்டுதோறும் $20,000 நன்கொடை வழங்கப்படுகிறது.

புக்கிட் பாஞ்சாங் சமூக நிலையத்தின் சார்பில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிக்குக் கடந்த 15 ஆண்டுகளாக கோயில் ஆதரவளித்து வருகிறது. பொங்கல் பானைகள், குறைந்தது 2,000 பங்கேற்பாளர்களுக்கு இந்திய பாணிச் சிற்றுண்டி, பானம் ஆகியவற்றைப் பிற அமைப்புகளுடன் இணைந்து கோயில் வழங்கி வருகிறது.

குறிப்புச் சொற்கள்