குறைபாடுகளைக் களைய உதவும் நவீன கண்டுபிடிப்புகள்

குறைபாடுகளைக் களைய உதவும் நவீன கண்டுபிடிப்புகள்

3 mins read
82a7783e-9e0b-4361-bae1-9425a27a9c98
‘நியூரல் டிரைவ்’ இணை நிறுவனர் கம்பாட்டி முகமது ஹுசெஃபா. - படம்: நியூரல் டிரைவ் 
Google News Preferred Icon

உணவுப் பாதுகாப்பு, தண்ணீர், கல்வி போன்ற உலகின் முக்கியமான சமூகச் சவால்களுக்குத் தீர்வுகளை முன்வைக்க மாணவர்களுக்கு ஊக்கமளிக்கிறது ‘ஹல்ட் பரிசு’ எனும் வருடாந்தர அனைத்துலகப் போட்டி.

சென்ற ஆண்டு (2025) சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஸ்டிக் எம்’ எனும் கற்றல் தொழில்நுட்ப நிறுவனம், முதல் நிலையில் வந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை வென்றது.

இவ்வாண்டு சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக (எஸ்யுடிடி) மாணவர்களுக்கிடையே தகுதிச் சுற்று இடம்பெற்றது. போட்டியிட்ட மாணவர்களின் படைப்புகளில் சில, சென்ற மாதம் (ஏப்ரல்) 17ஆம் தேதி நடைபெற்ற ‘இன்ஸ்பயர்கோன்’ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. 

தகுதிச் சுற்றின் வெற்றிப் படைப்பான ‘நியூரல் டிரைவ்’, பேச்சாற்றலை இழந்தவர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்ளும் கருவி. நோயாளிகளின் கண் இமைப்புகளையும் மூளைச் சமிக்ஞைகளையும் அதனால் குரலாக மாற்ற முடியும். திறன்பேசி, மடிக்கணினிகளையும் இக்கருவியைக் கொண்டு இயக்கலாம். இதன்மூலம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரால் ‘வாட்ஸ்ஆப்’ மூலம் பிள்ளைக்குக் குறுஞ்செய்திகூட அனுப்ப முடியும்.

‘நியூரல் டிரைவ்’ இணை நிறுவனர்கள் கம்பாட்டி முகமது ஹுசெஃபா (இடக்கோடி), கெளஷிக் மணியன், ரேமண்ட் லூங் இங் (வலக்கோடி) உடன் டான் டொக் செங் மருத்துவமனையில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கும் மூத்த முதன்மை நிபுணர் சென் திங்.
‘நியூரல் டிரைவ்’ இணை நிறுவனர்கள் கம்பாட்டி முகமது ஹுசெஃபா (இடக்கோடி), கெளஷிக் மணியன், ரேமண்ட் லூங் இங் (வலக்கோடி) உடன் டான் டொக் செங் மருத்துவமனையில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கும் மூத்த முதன்மை நிபுணர் சென் திங். - படம்: நியூரல் டிரைவ்

“எங்கள் கருவியைப் பத்து வினாடிகளிலேயே செயல்படுத்தலாம். அதைப் பயன்படுத்த நிபுணத்துவப் பயிற்சி எதுவும் தேவையில்லை. இதன் விலை, மற்றக் கருவிகளைவிடப் பத்து மடங்கு குறைவு,” என்றார் ‘நியூரல் டிரைவ்’ இணை நிறுவனரான ‘எஸ்யுடிடி’ மாணவர் கம்பாட்டி முகமது ஹுசெஃபா. 

வரும் ஜூன் மாதம் முதல், டான் டொக் செங் மருத்துவமனையில், கிட்டத்தட்ட 30 நோயாளிகளிடம் 18 மாதங்களுக்கு இக்கருவி சோதிக்கப்படும். 

பக்கவாதத்திலிருந்து மீண்டுவருவோரின் நிலையைக் கண்டறிய தரவுகளைக் கண்காணிக்கும் ‘நுபாயின்ட்’ எனும் கைப்பட்டை, மாணவர்களின் மேடைப் பேச்சுத்திறனை மேம்படுத்தும் ‘பிட்ச் மி’ எனும் ‘ஏஐ’ தளம், மாணவர்களின் கற்றல் பயணத்தைப் பின்தொடரும் ‘டைனி ஈக்குவே‌ஷன்ஸ்’ எனும் ‘ஏஐ’ தளம் ஆகியவை அந்த வரிசையில் அடுத்த மூன்று நிலைகளைப் பிடித்தன. பல்கலைக்கழகத்தின் ‘பேபிஷார்க்’ அல்லது ‘கிரியேட்4குட்’ மானியங்கள் அவற்றுக்கு ஆதரவளிக்கின்றன.

பார்வைக் குறைபாடுள்ள பலரும் வார்த்தைகளைப் பேச்சாக மாற்றும் திரை வாசிப்பான்கள்மூலம்தான் திறன்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பல செயலிகளும் இத்தகைய திரை வாசிப்பான்களுக்கு உகந்ததாக இல்லை என்பதைத் தம் உறவினரின் அனுபவத்திலிருந்து உணர்ந்தார் ‘எஸ்யுடிடி’ முதலாமாண்டு மாணவர் ரே பிரவீன். 

அதனால், அவரும் அவரின் நண்பர் க.ராஜாவும் இணைந்து, திறன்பேசிப் பயன்பாட்டைப் பார்வையற்றோருக்கு எளிதாக்கும் மென்பொருளை உருவாக்கியுள்ளனர்.

‘சண்டே’ எனும் அந்த மென்பொருள், பயனரின் கட்டளைக்குச் செவிசாய்த்து, அதை நிறைவேற்றும். இணையத்தில் பொருள்கள் வாங்குவதுமுதல், டாக்சி பயணக் கட்டணத்தைக் கேட்டறிவது வரை பலதரப்பட்ட வழிகளிலும் இது கைகொடுக்கும். இந்தத் தீர்வு, ஐந்தாம் நிலையைப் பிடித்தது.

பார்வைக் குறைபாடுள்ளோர் திறன்பேசிகளைச் சுலபமாகப் பயன்படுத்த உதவும் மென்பொருளை உருவாக்கியுள்ள க.ராஜா (இடம்), ரே பிரவீன்.
பார்வைக் குறைபாடுள்ளோர் திறன்பேசிகளைச் சுலபமாகப் பயன்படுத்த உதவும் மென்பொருளை உருவாக்கியுள்ள க.ராஜா (இடம்), ரே பிரவீன். - படம்: தீரன் குணநாதன்

ஆறாம் நிலையைப் பிடித்தது, ‘ஃப்ளேர்’ எனும் மருத்துவ நிர்வாகத் தளம். “ஒருவரின் நோயெதிர்ப்பாற்றல் அவரது சொந்தத் திசுக்களையே தாக்கும் நோய் கொண்டிருப்போர் தங்கள் உடல்நிலை குறித்த பல அறிகுறிகளையும் தரவுகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அவற்றை நினைவில் வைத்திருப்பதோ கடினம். ஒரு மாதத்துக்குப் பின்பு மருத்துவரைக் காணச்செல்லும்போது அவர்கள் அவற்றை மறந்துவிடக்கூடும். 

“அதனால், வலி ஏற்படும் அந்தக் கணமே எங்கள் தளத்துக்குச் சென்று, எங்கு வலி ஏற்பட்டது என்பதை முப்பரிமாண உடல் மாதிரியில் குறிப்புகளோடு சுட்டலாம். ‘குரல் உதவியாளர்’, ‘சேட்போட்’ போன்ற அம்சங்களும் உள்ளன. நாளடைவில், ‘ஏஐ’ மூலம் அந்தத் தரவுகளை ஆராய்ந்து நோயை இன்னும் சிறப்பாகக் கையாளவும் உதவுகிறோம்,” என்றார் சன்யுக்தா.

‘ஃப்ளேர்’ எனும் மருத்துவ நிர்வாகத் தளத்தை உருவாக்கியுள்ள திஸ்யா சத்யன் லுலா, சன்யுக்தா சரவணன், ஹர்ஷிதா பாட்டியா (இடமிருந்து).
‘ஃப்ளேர்’ எனும் மருத்துவ நிர்வாகத் தளத்தை உருவாக்கியுள்ள திஸ்யா சத்யன் லுலா, சன்யுக்தா சரவணன், ஹர்ஷிதா பாட்டியா (இடமிருந்து). - படம்: தீரன் குணநாதன்

‘நாடி பரிக்‌ஷா’ நாடித் துடிப்பின் மூலம் உடல் ஆரோக்கியத்தைக் கண்டறியும் உத்தியை ‘ஏஐ’ உடன் இணைக்கிறது, ‘ஆயுபல்ஸ்’ எனும் நவீன கைப்பட்டை.

“தற்போதுள்ள பல கைப்பட்டைகள் மேலோட்டமான தரவுகளையே வழங்குகின்றன. எங்கள் தீர்வு, பாரம்பரிய ‘நாடி பரிக்‌ஷா’ உத்திகள் போல வெவ்வேறு ஆழத்திலிருந்து சமிக்ஞைகளை எடுக்கும் ஆற்றல் பெற்றது,” என்றார் அணியின் தேஜாஸ்வின்.

(இடமிருந்து) ‘ஆயுபல்ஸ்’ அணியைச் சார்ந்த தேஜாஸ்வின், வத்சல்யா, ரக்ஷா, ஹியா.
(இடமிருந்து) ‘ஆயுபல்ஸ்’ அணியைச் சார்ந்த தேஜாஸ்வின், வத்சல்யா, ரக்ஷா, ஹியா. - படம்: தேஜாஸ்வின்

பார்வையற்றோருக்கு ஏற்புடைய கற்றல் மேலாண்மைத் தளம் மூலம், அவர்களை ‘ஸ்டெம்’ துறைகளில் நுழைய ஊக்குவிக்கிறது, ‘ஸ்குவிகுல்ஸ்’ அணி.

செவித்திறன் குறைபாடுடையோருடன் உரையாட உதவும் கையுறை போன்ற மற்றத் தீர்வுகளும் மக்களைக் கவர்ந்தன.

தேசிய நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் அனைத்துலக அளவில் போட்டியிடும். 

குறிப்புச் சொற்கள்