இசைக்கண் திறக்கும் இளையரின் பாட்டுத்திறன்

இசைக்கண் திறக்கும் இளையரின் பாட்டுத்திறன்

3 mins read
c47d4c73-4005-45cb-a4fb-217dd18600d3
இசைக்கல்விக்காக கிரிஷம் சந்து நிப்ரி,  பிரெய்ல் சாதனத்தைப் பயன்படுத்துகிறார். - படம்: கி. ஜனார்த்தனன்

பார்வைத்திறனற்ற மாணவர் கிரிஷம் சந்து நிப்ரி, எதிர்பார்ப்புகளை மிஞ்சிப் பாடலிலும் பல்வகைத் திறன்களிலும் உயர்ந்து நிற்கிறார்.

வட இந்தியரான 18 வயது கிரிஷம், தென்னிந்தியக் கலையான கர்நாடகச் சங்கீதத்தைக் கற்றதுடன் தமிழிலும் நன்றாகப் பாடுவார்.

தமிழ் தெரியாவிட்டாலும் பாபநாசம் சிவனின் ‘கபாலி’ என்ற மோகன ராக கீர்த்தனையைத் தமிழில் பிழையின்றிப் பாடுகிறார். உள்ளூர்க் கலைஞர் ஷபீரின் ‘சிங்கை நாடு’ பாடலும் கிரிஷமுக்குப் பிடித்த தமிழ்ப் பாடல்களில் ஒன்றாகும்.

கடந்த ஏப்ரல் இறுதியில் நடைபெற்ற சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) ‘இன்ஃபைனைட் ரசா’ கலை விழாவின் ‘பூமி’ என்ற இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலைஞர்களில் இவரும் ஒருவர்.

இசைக்கல்விக்குச் சிறப்பு ஏற்பாடு

கிரிஷம் தனது எட்டாவது வயதில் இருந்தபோது, லைட்ஹவுஸ் பள்ளியின் பாடகர் குழு ஆசிரியர் ஒருவர் இவரது திறமையைக் கண்டறிந்த பின்னரே இந்த இசைப் பயணம் தொடங்கியது.

வட இந்தியப் பின்னணி கொண்ட தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கிரிஷம், இந்துஸ்தானி சங்கீதத்தைத் தெரிவு செய்திருக்க வேண்டும் என்று கிரிஷமின் தாயார் திருவாட்டி மஹிமா சந்துரு மீர்புரி தெரிவித்தார்.

ஆனால், கர்நாடக இசை அவரது குரலைச் செம்மைப்படுத்துவதற்குச் சிறந்ததாக இருக்கும் எனக் கருதி குடும்ப நண்பர்கள் பரிந்துரைத்ததாகத் திருவாட்டி மஹிமா கூறினார்.

கர்நாடக சங்கீதம் இறுதியில் மிகச் சரியான தேர்வாக அமைந்ததாகத் தாயும் மகனும் கூறுகின்றனர். தற்போது அவர், சிஃபாசில் வாய்ப்பாட்டு ஆசிரியர் ஜானகி சடகோபனின் மாணவராக உள்ளார்.

“மேற்கத்திய இசையைவிட எனது குரலுக்கு இந்தியப் பாரம்பரிய இசை அதிகம் பொருந்துவதால் அது எனக்குச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

பார்வையற்ற மாணவர்களுக்கு ஆதரவளிப்பதில் புகழ்பெற்ற பிடோக் சவுத் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, இந்த இளையரின் தாயார் கல்வி அமைச்சை அணுகி, அவரது ஓ’ நிலைத் தேர்வுக்காகக் கர்நாடக இசையைப் பாடமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டிருந்தார்.

அதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து கிரி‌ஷம் அந்தப் பாடத்தில் 2023ல் ‘ஏ2’ பெற்றிருந்தார்.

பயிற்சியுடன் விடாமுயற்சி

கர்நாடக இசையை முறையாகக் கற்றுத் தேர்ச்சி அடைவது எளிதன்று. கண்பார்வை இன்றி அதனைக் கற்பதில் தனித்துவமான சவால்கள் இருக்கின்றன.

கிரிஷம் தனது கல்விப் படிப்பில் வரைபடங்களைப் புரிந்துகொள்ளச் சிறப்புத் தொடு உணர்வு பிரெய்ல் சாதனத்தையும் தடித்த புள்ளித் தாள்களையும் பயன்படுத்தினாலும், அவரது இசைப் பயிற்சி முற்றிலும் தீவிரமான செவிவழிக் கற்றலையே நம்பியுள்ளது.

அவரது ஆசிரியை பாடங்களைப் பகுதி பகுதியாக பதிவுசெய்து, கிரிஷம் கேட்டுப் பழகுவதற்காகச் சில வரிகளை மட்டுமே ஒவ்வொரு முறையும் அனுப்பி வைப்பார்.

தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நாக்கைச் சரியாகச் சுழற்றி உச்சரிப்பதில் உள்ள சிரமங்கள், மொழித் தடையின் காரணமாக மற்றொரு சவாலாக உருவெடுக்கிறது என்று கிரிஷத்தின் தாயார் தெரிவித்தார்.

ஒலியை மட்டுமே கொண்டு கிரிஷத்தின் உச்சரிப்பை வழிகாட்ட அவரது ஆசிரியை மேற்கொண்ட இடைவிடாத, கடினமான முயற்சிகளைப் பாராட்டினார்.

மேற்கத்திய, ஜெர்மானிய, சீன மரபுகளைச் சேர்ந்த பாடல்களையும் கிரிஷம் வெற்றிகரமாகப் பாடியுள்ளார்.

“சொற்களின் உச்சரிப்பை நன்கு கவனித்து அடிக்கடி பயிற்சி செய்வேன். தமிழில் பாடும்போது லகர ளகர வேறுபாட்டைக் கவனிப்பேன். இடைவிடாத பயிற்‌‌சி முடிவில் வெற்றியைத் தரும்,” என்றார் கிரி‌‌ஷம்.

குறிப்புச் சொற்கள்