மூத்த மகனுக்கு ‘டிரம்ஸ்’ வாசித்தல் மீது அதிக நாட்டம். இரண்டாவது மகனுக்கு ‘டைனசோர்’ விலங்கினம் என்றால் உயிர். தம் இரு மகன்களின் விருப்பங்களும் அடங்கிய கருப்பொருள்களைக் கொண்டு, ஒரு கதை எழுத முற்பட்டார் திருவாட்டி விக்னேஸ்வரி ராஜு, 38.
சென்ற மே மாதம் 1ஆம் தேதியில் ‘கவினோசொரஸ் தி டிரம்மிங் டினோ’ எனும் ஆங்கில சிறுவர் கதைநூலை எழுதி வெளியிட்டார் திருவாட்டி விக்னேஸ்வரி. 2023ஆம் ஆண்டில் கதை எழுதத் தொடங்கிய இவருக்கு, தன் இரு மகன்களும் அதற்கு ஒரு பெரிய உந்துதலாக அமைந்தனர் எனக் குறிப்பிட்டார்.
“சிரமமான நேரங்களில் எல்லாம் என் மகன்கள் இருவரும் எனக்கு மிக ஆதரவாக இருந்தனர். அதனால் நான் இந்த புத்தகத்தை அவர்கள் இருவருக்கும் சமர்ப்பித்தேன்,” என்றார் திருவாட்டி விக்னேஸ்வரி. மூத்த மகன் கவினேஷ் சரவணன், 10, அவருடைய ஐந்து வயதில் ‘டிரம்ஸ்’ இசைக்கருவியை முறைப்படி வியன்னா இசைப் பள்ளியில் பயிலத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளுக்குமுன் கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் வகுப்புகள் இணையம் வழியாக நடந்தேறியபோதும், அவர் மனம் தளராது தொடர்ந்து வகுப்புகளில் சிறந்து விளங்கினார்.
டிரம்ஸ் வாசிக்கும் ஆசையை கவினேஷ், தன் தந்தையின் மூலம் பெற்றார் என்று உறுதியாக நம்புகிறார் திருவாட்டி விக்னேஸ்வரி.
“சிறு வயதிலிருந்தே கோவில்களிலும் இல்லங்களிலும் நடக்கும் பஜனைகளுக்கு என் கணவர், எங்களுடைய இரு மகன்களையும் அழைத்துச் செல்வதுண்டு. அதனால், சிறுவயதில் இருந்தே இசைமீது கவினேஷுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் அவர்.
ஒரு டைனசோர் எப்படிச் சவால்களைத் தாண்டி டிரம்ஸ் வாசிக்கிறது என்பதே மூலக்கதை. சிறப்புக் கல்வி ஆசிரியராக பணிபுரியும் திருவாட்டி விக்னேஸ்வரிக்கு ஒரு கதைப் புத்தகத்தை எழுதி வெளியிடுவது பல நாள் கனவாக இருந்தது. அதற்காக அவர் தன் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ பயிற்சி உதவி நிதியை பயன்படுத்தி, லாசால் கலைக் கல்லூரியில் சிறுவர்களுக்கான கதைப் புத்தகம் எழுதும் வகுப்பில் பங்கேற்றார்
ஓர் ஆசிரியராக பணிபுரியும் அனுபவம், இந்த கதைப்புத்தகப் பயணத்தில் தனக்கு மிக உதவியாக இருந்தது என்றும் அதனால் தன் இரு மகன்களுடனான உறவும் மேலும் வலுப்பெற்றது என்றும் திருவாட்டி விக்னேஸ்வரி சொன்னார்.
அடுத்ததாக, சீனம், மலாய், தமிழ் மொழிகளிலும் நூல் வெளியிட வேண்டும் என்பது இவரது விருப்பம்.
தொடர்புடைய செய்திகள்
ஆசை என ஒன்று இருந்தால், அதனை அடையும் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறார் திருவாட்டி விக்னேஸ்வரி.
“குறிப்பாக, உங்கள் கனவு எதுவாயினும், உங்கள் முயற்சிகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஒரிரு உள்ளங்கள் இருப்பார்கள். அவர்களை என்றும் மறக்காதீர்கள்,” என்கிறார் இவர்.

