வாழ்வில் சங்கமிக்கும் கலைப் படைப்பு

வாழ்வில் சங்கமிக்கும் கலைப் படைப்பு

2 mins read
சிங்கப்பூர் - மலேசியக் கலைஞர்களின் கலைக் கலவை
e8dab6b0-a2fe-4650-86fc-5558b2d2c49d
பரதநாட்டியத்தையும் சமகால நடனத்தையும் இணைத்து வழங்கிய நடனமணிகள். - படம்: தத்வா கலைக் குழு

தத்வா கலைக் குழுவின் கலை இயக்குநரான 36 வயது லோகேந்திரா சந்திரசேகர், தமது பத்தாண்டுக் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக ‘ஸ்பந்தா’ எனும் தனித்துவமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.

உள்மனத்தின் அதிர்வு மற்றும் குண்டலினி ஆற்றலின் எழுச்சியை மையமாகக் கொண்ட அந்த நிகழ்ச்சி, கலை மற்றும் நல்வாழ்வை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாகும்.

மேற்கத்திய கலாசாரத்தில் நல்வாழ்வு என்பது தற்காலத்தில் பிரபலமாக இருந்தாலும் அது தமிழர்களின் யோகக் கலையில் ஆழமாக வேரூன்றி இருப்பதை லோகேந்திரா சுட்டிக்காட்டினார்.

“நல்வாழ்வு என்பது இன்று மேற்கத்தியமயமாகிவிட்டது. ஆனால், அது நமது யோகக் கலாசாரத்திலும் உள்ளது; நாம் நம்மையே நிலைநிறுத்திக் கொள்ளவும், மீண்டும் நம் வேர்களுக்குத் திரும்பவும் இந்தக் கருப்பொருளை நான் கொண்டு வந்தேன்,” என்று அவர் கூறினார்.

உடலில் உள்ள ஏழு ஆற்றல் மையங்களான சக்கரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு சக்கரத்தின் குணாதிசயங்கள், வண்ணங்கள் மற்றும் பஞ்சபூதத் தொடர்புகளை நடனத்தின் வாயிலாக அவர் விளக்கினார்.

மனநலமும் உடல்நலமும் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தியானத்தின் அவசியத்தை இளைய தலைமுறைக்கு அழகியல் உணர்வுடன் கொண்டுசேர்ப்பதே அந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

பரதநாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டு, நவீன நடனக் கூறுகள், தண்டியா, ராஸ் லீலா போன்ற துள்ளலான வடிவங்களை உள்ளடக்கி அந்த மேடைப் படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அதிகத் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்; நாம் அதிகமாகப் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டால் மட்டுமே நமது சிந்தனைகளை வளர்க்க முடியும்,” என்று லோகேந்திரா தமது கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

அந்த பிரம்மாண்ட படைப்பிற்காக சிங்கப்பூரின் தத்வா குழு, மலேசியாவின் ‘லாஸ்யா ஆர்ட்ஸ்’ கலாசார மையத்துடனும் ‘அண்டர் தி பிரிட்ஜ்’ சிங்கப்பூர் சமகால நடனக் குழுவுடனும் கைகோத்துள்ளன.

சிங்கப்பூர்க் கலைஞர்களின் நெகிழ்வுத்தன்மையும், ‘லாஸ்யா ஆர்ட்ஸ்’ கலைஞர்களின் பந்தநல்லூர் பாணியிலான பரதநாட்டியமும் இணைந்து அனைத்துலகத் தரத்திலான கலைப்படைப்பு வழங்கப்பட்டது.

மலேசியக் கலைஞரான 31 வயது திவேந்திரன் சின்னதம்பி, தமது குழு, ஏழு சக்கரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப ராகங்களையும் தாளங்களையும் மிக நுணுக்கமாகத் தேர்ந்தெடுத்து இசை அமைத்துள்ளதாகக் கூறினார்.

இந்தப் பல்லினக் கலாசாரச் சூழலில், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் பல்வேறு நடன முறைகளை இணைத்திருப்பது இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்துப் பேசுகையில், “நடனத்தைத் தாண்டி, நாடுகளுக்கு இடையே கலாசார உறவு உருவாகியுள்ளது. சிங்கப்பூரும் மலேசியாவும் அண்டை நாடுகளாக இருந்தாலும், இந்தக் கலாசாரத்தின்மூலம் கைகோப்பது ஒரு மிகப்பெரிய நிகழ்வு,” என்றார் திவேந்திரன் சின்னதம்பி.

இந்த நிகழ்ச்சியைக் கண்ட பார்வையாளர்களில் ஒருவரான 27 வயது ரூபா ஸ்ரீ சேகர், “கலைஞர்களின் அசைவுகள் சக்கரங்களை வெளிப்படுத்திய விதம் என்னைப் பிரமிக்க வைத்தது,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நடனங்களைக் கண்டுமகிழ்ந்த 26 வயது ஸ்வரூபா சென், “ஒவ்வொரு நடனக் கலைஞரும் ஒவ்வோர் ஆற்றல் மையத்தையும் தெய்வீகத்தன்மையுடன் இணைத்த விதம் மனத்தைக் கவரும் வகையில் இருந்தது. இந்த நடனத்தில் சுவாரசியமான பல கூறுகள் இருந்தன,”  என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்