தாய்மொழி மலாய். ஆனால் தமிழில், இசையமைப்பாளராகவும் சொல்லிசைக் கலைஞராகவும் மிளிர்கிறார் முகமது ஷஃபிக் சையது இப்ராஹிம், 28.
தனிப்பட்ட இசைத்துறையில் (Independent music) முழுக்க முழுக்கத் தமிழில் பாடல்களைப் படைக்கிறார் இவர்.
இவரது இருமொழித் திறனைப் பாராட்டும் வகையில் பலரும் இவரைத் ‘தம்பி நாட்டா’ என்று அன்பாக அழைப்பதுண்டு. அதுவே இவருடையே மேடைப் பெயராக நிலைத்துவிட்டது.
இசை மீதான ஆர்வம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குமுன் தொடங்கியதாகக் கூறுகிறார் ஷஃபிக்.
“குறிப்பாக எனக்கு ஆங்கிலம், மலாய், தமிழில் சொல்லிசைப் பாடல்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது,” என்கிறார் இவர்.
நண்பர் அளித்த ஊக்கத்தில் முதன்முதலாகத் தனிப்பாடல் ஒன்றைப் பாடி, இன்ஸ்டகிராமில் பதிவு செய்தார். அதன் மூலம் இசைத் துறையில் ஷஃபிக் காலடி எடுத்துவைத்தார்.
தனது தமிழ்ப் புழக்கம் வீட்டில் தந்தையுடனும் பாட்டியுடனும் தொடங்கியது என்றும் நண்பர்கள் பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள் என்றும் சொன்னார் ஷஃபிக்.
“அதனால் எனக்குத் தமிழ்ச் சொல்லிசையில் ஈடுபட நம்பிக்கை வந்தது,” என்கிறார் இவர்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமன்றி தனிப்பட்ட முறையில் தமிழ் இசை இவருக்கு ஓர் ஆறுதலாக அமைவதாகவும் கூறினார்.
“குறிப்பாக, மேடையேறித் தமிழிசை படைப்பது எனக்கான ஓர் அடையாளம், நோக்கமாக உள்ளது,” என்றா ஷஃபிக்.
2022ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மலேசிய இசைக் கலைஞர் யோகி பியைச் சந்தித்தது மனத்தை நெகிழ வைத்த தருணம் என்று நினைவுகூர்ந்தார் ஷஃபிக்.
“அவர் என்னுடன் உரையாடியது மிகுந்த ஊக்கமளித்தது,” என்றார் ஷஃபிக்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்பர் ஒருவரிடமிருந்து பிரிந்தார் ஷஃபிக். உறவிலிருந்து வெளிப்படும் எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்த இசையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம், தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘மலரே’ என்ற தனிப்பாடலை எழுதிப் பாடினார் ஷஃபிக். அவருடன் உள்ளூர்ப் பாடகி சுதாசினி ராஜேந்திரன் இணைந்து குரல் கொடுத்தார்.
“இந்தப் பாடலை உருவாக்கக் கிட்டத்தட்ட ஓராண்டு எடுத்தது,” என்றார் ஷஃபிக்.
அதுமட்டுமன்றி, எந்தக் கலை வடிவத்திலும் உணர்வுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேபோல் இந்தப் பாடலுக்கும் ஆழமான உணர்வுகளை வெளிகொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார்.
ஷஃபிக்கின் சொல்லிசைப் பாணி பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கைப் பயணத்தின் எந்தவொரு கட்டத்திலும் இசை, சொல்லிசையிலிருந்து விலகமாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறார் இந்த இளங்கலைஞர்.
“சொல்லிசை என்பது ஒரு புரட்சி. செவிசாய்க்கப்பட வேண்டிய, எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான குரல்,” என்று பெருமையுடன் கூறுகிறார் ஷஃபிக்.

