ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள்

2 mins read
f20425ce-1359-489b-a7d3-e1f3af89b02b
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் இவ்வாண்டு ரமலான் மாதத்தின்போது தராவீஹ் தொழுகை அமர்வில் முஸ்லிம் அன்பர்கள். - கோப்புப் படம்: செய்யது இப்ராகிம்
multi-img1 of 3

இறைவனின் கட்டளையை ஏற்று, தன் அன்பு மகனைத் தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் (அலை) ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மேற்கொள்ளும் புனித ஹஜ் யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையிலும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாள் சிங்கப்பூரில் மே 27 (புதன்கிழமை) அமைகிறது.

இங்குள்ள பள்ளிவாசல்களில் அன்று காலை பெண் தொழுகையாளர்கள் உட்பட, மூன்று தொழுகை அமர்வுகள் வரை ஏறத்தாழ 240,000 இடங்கள் கிடைக்கும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்திருந்தது.

இம்முறை ஜூன் பள்ளி விடுமுறைக்காலத்தை முன்னிட்டு ஹஜ்ஜுப் பெருநாள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

டன்லப் ஸ்திரீட்டில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் வழக்கம்போல பெருநாள் தொழுகைக்காக மூன்று அமர்வுகளை நடத்துகிறது.

முதல் அமர்வு காலை 7.15 மணிக்கு ஆண்களுக்காக இடம்பெறும். அதனைத் தொடர்ந்து, காலை 8.15 மணியளவிலும் 9.15 மணியளவிலும் இடம்பெறும் இரண்டு அமர்வுகளில் பெண்களும் கலந்துகொள்ளலாம்.

கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் தொழுகைக்காக போதுமான இடவசதியை ஏற்படுத்தித் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டது.

முதல் அமர்வில், பிரசங்கம் தமிழில் நிகழ்த்தப்படும். எதிர்காலம் குறித்த நம்பிக்கையைச் சமூகத்தினரிடையே வளர்த்தல், அனைவரிடமும் அன்போடு பழகுதல் போன்ற அம்சங்கள் அதில் இடம்பெறும்.

பெருநாளுக்கு முந்தைய நாளான அரஃபா நாளில் நோன்பு நோற்போருக்கு 600 பேர் வரை நோன்பு துறக்க கஞ்சி, பேரீச்சம்பழம், சிற்றுண்டிகள் வழங்கப்படும்.

பென்கூலன் பள்ளிவாசலில் ஒரேயோர் அமர்வாக காலை 8 மணிக்குப் பெருநாள் தொழுகை நடைபெறும். இதில் ஏறக்குறைய 800 பேர் கலந்துகொள்வதற்கான இடவசதி உள்ளது. அதற்கு முன்பாக, காலை 6.30 மணிக்கு அங்கு ஃபஜ்ர் தொழுகை நடைபெறும்.

“காலை 7.30 மணியளவில் தக்பீர் சொல்லும் நிகழ்வு ஆரம்பமாகும்,” என்று குறிப்பிட்டார் பள்ளிவாசலின் தலைவர் ஹாஜி மு.யூ.முஹம்மது ரஃபீக்.

மலபார் பள்ளிவாசலில், கூட்டத்தைச் சமாளிக்க காலை 7.20 மணிக்கு முதல் அமர்வும் 8.15 மணியளவில் இரண்டாம் அமர்வும் நடைபெறவுள்ளன.

முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு, அரஃபா நோன்புக்காக இஃதார் ஏற்பாடுகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக மலபார் பள்ளிவாசல் தலைவர் எம்.கே.ஜமீல்.

சென்ற ஆண்டு ஏறத்தாழ 100 பேருக்கு இஃப்தார் உணவு தயார்செய்யப்பட்ட நிலையில், இவ்வாண்டு 250க்கும் மேற்பட்டோருக்கு அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலைச் சுத்தப்படுத்துவது, தொழுகைக்கான இடவசதியை ஏற்படுத்தித் தருவது போன்ற பணிகளில் தொண்டூழியர்கள் ஈடுபட்டதாக திரு ஜமீல் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
ஹஜ்ஜுப் பெருநாள்பள்ளிவாசல்நோன்பு