சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 127வது நிகழ்ச்சி நடந்தேறியது.
‘சிங்கப்பூர் இந்தியர் சமூகத்துக்கு பெரும் சவாலாக இருப்பது காசு சேர்ப்பதா, கலைகள் வளர்ப்பதா’ என்ற தலைப்பில் நடந்த இந்தப் பட்டிமன்றத்தில் ‘கலைகள் வளர்ப்பதே’ என்ற அணியில் திருவாட்டி இசக்கிசெல்வி, செல்வன் ப்ரபவ் சுந்தரவடிவேல், செல்வன் ரகுநந்தன் ஆகியோரும் ‘காசு சேர்ப்பதே’ என்ற அணியில் முனைவர் ராஜிஸ்ரீநிவாசன், திருவாட்டி வானதிபிரகாஷ், டாக்டர் குந்தவை ஆகியோரும் வாதிட யூசுப் ராவுத்தர் ரஜித் நடுவராக இருந்து நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
கலையால் ஒருவன் அறிமுகப்படுத்தப்படுவதே அவனுக்குப் பெருமை என்றும் ஒரு கலையைக் கற்று அதில் பல சாதனைகள் புரிவது எளிதான காரியமன்று என்றும் சிங்கப்பூரில் அப்படி வாழும் மனிதர்களே பேசப்படுகிறார்கள் என்றும் கலைகள் அணி சிறப்பாக வாதிட்டது.
காசு சேர்க்கும் அணியில் பேசியவர்கள், கலைகள் கற்பதற்கே காசு வேண்டும். காசு இல்லாவிட்டால் எதுவுமே இல்லை என்றும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்றுதான் சொன்னார்களே தவிர கலைகள் தேடு என்று சொல்லவில்லை என்றும் எதிர்வாதம் தொடுத்தார்கள்.
சவால் என்பது எந்த நிலையிலும் விடவே முடியாத ஒன்று என்றும் கலைகளை விட்டுவிடுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதில்லை என்றும் காசு சம்பாதிக்காவிட்டால் இரத்தல் என்ற இழிநிலைக்கு ஆளாக வேண்டும் என்றும் சொல்லி, ‘காசு சேர்ப்பதே பெரும் சவால்’ என்ற தீர்ப்பை வழங்கினார் நடுவர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் கலந்துகொண்டார்.

