சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய ‘மீலாது சிறப்புச் சொற்பொழிவு’

சமய நல்லிணக்கத்தை வலியுறுத்திய ‘மீலாது சிறப்புச் சொற்பொழிவு’

படம்: தமிழ் முஸ்லிம் ஜமாத்

07 Oct 2026 - 11:31 am

2 mins read

சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தைச் சிறப்பிக்கவும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை போதனைகளை உள்ளூர்த் தமிழ் முஸ்லிம்களிடம் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் ‘மீலாது சிறப்புச் சொற்பொழிவு’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் முஸ்லிம் ஜமாத், சுல்தான் பள்ளிவாசல் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல இந்திய முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவுடன் அந்நிகழ்ச்சி அரங்கேறியது.

செப்டம்பர் 26ஆம் தேதி சுல்தான் பள்ளிவாசல் அரங்கத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் 350க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட, சென்னையில் உள்ள ரஹிமா பள்ளிவாசலின் இமாம் உஸ்தாத் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவி, நபிகள் நாயகத்தின் வாழ்க்கை போதனைகளை எடுத்துரைத்தார்.

“நபிகள் நாயகம் கற்றுத்தந்த சமூக ஒற்றுமை, இன நல்லிணக்கம், அன்பு போன்ற அம்சங்களைப் பகிர்ந்துகொண்டேன். சவால்கள் மிகுந்த இன்றைய உலகத்தில் இவை தேவையான பண்புகள் என்று நினைவூட்டும் வகையில் மீலாது சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றினேன்,” என்று கூறினார் இமாம் உஸ்தாத் ஏ.எஸ். ஸதக்கத்துல்லாஹ் பாகவி, 39.

செப்டம்பர் 26ஆம் தேதி சுல்தான் பள்ளிவாசல் அரங்கத்தில் நடைபெற்ற  சொற்பொழிவில் 350க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர்.
செப்டம்பர் 26ஆம் தேதி சுல்தான் பள்ளிவாசல் அரங்கத்தில் நடைபெற்ற சொற்பொழிவில் 350க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். - படம்: தமிழ் முஸ்லிம் ஜமாத்

தமிழ் முஸ்லிம் ஜமாத் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசினார் தமிழ் முஸ்லிம் ஜமாத் தலைமைச் செயலாளர் செய்யது அஹமது கபீர் மரைக்கார், 63.

“தமிழ் முஸ்லிம் ஜமாத் மற்ற முஸ்லிம் அமைப்புகளுடன் சேர்ந்து வழக்கமாக ரத்த தான முகாம் போன்ற பல பயனுள்ள சமூக நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த மீலாது சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக்கு மூன்று மாதங்கள் பிடித்தன.

இந்தியாவிலிருந்து இமாமைப் பேச அழைத்தோம். இந்நிகழ்ச்சியில் அனைத்து வயதினரும் பங்கேற்றனர். கலந்துகொண்ட அனைவருக்கும் மண்டி உணவு வழங்கப்பட்டது. பலர் தங்களின் பிள்ளைகளுடன் குடும்பமாகக் கலந்துகொண்டனர். எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டம் வைத்துள்ளோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
சமூகம்முஸ்லிம்பள்ளிவாசல்சமய நல்லிணக்கம்