ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வரலாற்றைப் பறைசாற்றும் சிறப்புக் கண்காட்சி

ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வரலாற்றைப் பறைசாற்றும் சிறப்புக் கண்காட்சி

படம்: பே. கார்த்திகேயன்

27 Oct 2026 - 6:15 am

2 mins read

சிங்கப்பூரின் ஆகப் பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோயில் 2027ஆம் ஆண்டில் 200 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்த மைல்கல்லையொட்டி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான தீபாவளித் தேநீர் நிகழ்ச்சியில் சிறப்புக் கண்காட்சி இடம்பெற்றது.

கோயிலின் 200 ஆண்டுகால வரலாற்றையும் சிங்கப்பூரின் குடிமை, பண்பாட்டு, சமய வாழ்க்கைக்கு அது ஆற்றிய நீடித்த பங்களிப்புகளையும் கண்காட்சி எடுத்துரைத்தது.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில் எட்டாவது முறையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டார்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ள நடமாடும் சிறப்புக் கண்காட்சியின் ஒரு சிறு முன்னோட்டம்தான் இது என்று வாரியத்தின் தலைவர் சேகரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு இந்த நடமாடும் கண்காட்சி, நிலையத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு ஐந்து தேசிய நூலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

“மேலும், ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் இருநூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிறப்புச் சமய வழிபாடுகள், பாரம்பரியக் கண்காட்சிகள், நினைவு மலர் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தின் ஆதரவாலேயே 200 ஆண்டுகள் சாத்தியமாகியுள்ளது என்று ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தலைவர் த.கோ.கிரிதரன் கூறினார்.

“இது மிகவும் உற்சாகமளிக்கும் ஒரு மைல்கல்,” என்றார் அவர்.

சீனக் கலாசார நிலையத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கிட்டத்தட்ட 10 சமயங்களைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகத் தலைவர்கள், அடித்தளப் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

‘புனித ஒலிகள்’ என்றழைக்கப்படும் ஒரு பகுதி, இந்து இளையர் கட்டமைப்பால் தொகுக்கப்பட்டது.

இஸ்லாமியத் தொழுகைக்கான அழைப்பு, இந்து மதத்தின் நாதசுர, தவில் இசை, பௌத்த சமயத்தின் மந்திர உச்சாடனம், தேவாலயத்தில் ஒலிக்கும் குழுப்பாடல்கள் ஆகியவை விளக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க ஒலிகள் ஆகும்.

நிகழ்ச்சியில் ஆடல், இளையர் உரையாடல் அங்கங்களுடன் சுவையான உணவு, பானங்களும் வந்திருந்தோருக்குப் பரிமாறப்பட்டன.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளித் தேநீர் நிகழ்ச்சியில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வரலாற்றைப் பறைசாற்றும் சிறப்புக் கண்காட்சியைப் பார்வையிட்டார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளித் தேநீர் நிகழ்ச்சியில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் வரலாற்றைப் பறைசாற்றும் சிறப்புக் கண்காட்சியைப் பார்வையிட்டார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங். - படம்: பே. கார்த்திகேயன்
குறிப்புச் சொற்கள்