சிங்கப்பூரில் பணிபுரியும் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புரட்டாசி மாத வாழையிலை விருந்தை இந்து அறக்கட்டளை வாரியம் (HEB), வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC), இல்லப் பணியாளர்கள் நிலையம் (CDE) ஆகிய அமைப்புகள் இணைந்து படைத்தது.
இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்து நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 13ஆம் தேதி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் பிஜிபி மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது.
“இந்துகளுக்கு மிகவும் விசேஷமான புரட்டாசி மாதத்தன்று பொதுவாக அனைத்து இந்துக் கோவில்களிலும் சனிக்கிழமை அன்னதானம் நடைபெறும்.
“ஆனால், பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் சனிக்கிழமை வேலை செய்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களுக்கு ஓய்வுநாள் என்பதால் நமது சகோதர, சகோதரிகளும் புரட்டாசி அன்னதானத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் புரட்டாசி விருந்தை ஏற்பாடு செய்து வருகிறோம்,” என்றார் ஏற்பாட்டாளரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழுத் தலைவருமான சுசீலா கணேசன்.
மேலும், கட்டடத் தொழில்கள், போக்குவரத்து, வீட்டுவேலை போன்றவற்றில் முக்கியப் பங்கு வகித்து, சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சேவை புரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு தைப்பூசம், தீமிதி, சிவராத்திரி போன்ற விழாக்கள் ஒரு தருணமாக அமைவதாகவும் அவர் கூறினார்.
சமையல், அலங்காரம், பரிமாறுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் பல்வேறு கோவில் அமைப்புகள், இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழு, வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம், திருமுறை மாநாடு முதலிய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் மேற்கொண்டனர்.
விருந்துக்கான தயாரிப்பு ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது என்று கூறிய இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவை செயற்குழு உறுப்பினர் அருள்குமார் உலகநாதன், 37, சுமார் 40 தொண்டூழியர்கள் காய்கறிகளை வெட்டி சமையலுக்குத் தயார்செய்து வைத்தார்கள் என்றும் குடிநீர், மேசை விரிப்புகள் போன்ற அனைத்தும் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டதால், அன்னதானம் மிகவும் சுமூகமாக நடைபெற்றது என்றும் சொன்னார்.
“அன்னதானத்திற்கு வந்த சிலர் நேற்று கிடைக்காத பிரசாதம் இன்று கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறியபோது நான் மிகுந்த மனநிறைவு அடைந்தேன்,” என்றும் திரு அருள்குமார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“நேற்று வீட்டில் புரட்டாசி விரதத்திற்கான வேலைகள் நிறைய இருந்ததால் அன்னதானத்திற்குப் போகமுடியவில்லை,” என்றார் ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் இல்ல பணிப்பெண்ணாக பணிபுரிந்துவரும் 50 வயது மங்கையற்கரசி மகாலிங்கம்.
கடந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்னதானத்தில் அதிக கூட்டத்தினால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதாகக் கூறிய அவர், இவ்வாண்டு விருந்தில் கலந்துகொண்டு உணவு உண்டு மகிழ்ந்ததாகச் சொன்னார்.
மேலும், “இந்தியாவில் இருந்தது போலவே உணர்ந்தேன். உணவை அனைவருக்கும் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்,” என்றார் அவர்.
பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து படைத்த இந்நிகழ்ச்சியைப் பாராட்டினார் கடந்த ஓர் ஆண்டாக சிங்கப்பூரில் பாதுகாப்பு மேற்பார்வையாளராகப் பணிபுரியும் அஜித் குமார், 25. இவர் தமது நண்பரின்வழி விருந்து பற்றி அறிந்துகொண்டார்.
“பெருமாள் கோவிலில் கடவுள் தரிசனம் நல்லவிதமாக நடந்ததைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓர் இடத்தில் சாப்பிட்டு மகிழ்ந்தது எனக்கு மேலும் இன்பத்தை அளித்தது,” என்றார் அவர்.
சிங்கப்பூர்த் திருமுறை மாநாடு இளையர் பிரிவு தொண்டூழியரான 24 வயது கார்த்திக் இராமநாதன், மக்கள் வயிறார உண்டு மகிழ உணவுப் பரிமாறுவதன்மூலம் கிடைக்கும் இன்பத்தை வேறு எதிலும் பெற முடியாது என்று கருதுகிறார்.
“இந்த வாய்ப்பின்வழி பாரம்பரிய உணவு பரிமாறுதலைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன்மூலம் நம் சமுதாயத்துக்கு நம்மால் முடிந்ததைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்ற உணர்வு மேலும் வளர்கிறது,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டின் நிகழ்ச்சியைத் தயார் செய்ததாகச் சொன்ன திருவாட்டி சுசீலா கணேசன், அதேபோல் இவ்வாண்டின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு எவ்வாறு அன்னதானத்தை மேம்படுத்தலாம், மேலும் அதிகமானோருக்கு எவ்வாறு உணவு வழங்கலாம் என்பது குறித்து செயற்குழுவுடன் கலந்துரையாடல் நடத்தி திட்டமிடப்போவதாகக் கூறினார்.