சிங்கப்பூர் சுங்கை காடுட் அவென்யூவில் அமைந்துள்ள ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா, பிப்ரவரி 22, 2026 (மாசி மாதம் 10 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் யாகசாலை வழிபாடுகள் தொடங்கி, காலை 8.15 மணிக்கு கடப்புறப்பாடு தொடங்கும். தொடர்ந்து 9 மணியளவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
குடமுழுக்கையொட்டி, 41 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பல்வேறு யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 5 மணி முதல் இரவு 9.30 மணிவரை எண்ணெய் சாற்றுதல் நடைபெறும். சனிக்கிழமையன்று, ஹோமங்களுடன், சுமங்கலி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்னிகா பூஜை நடைபெறவுள்ளது.
இவ்விழாவுக்காக, இந்தியா, இலங்கையிலிருந்து குருமார்கள் வருகையளித்துள்ளனர்.
குடமுழுக்கு விழாவில் ஏறத்தாழ 25,000 முதல் 30,000 வரையிலான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளுடன், வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிற்றுண்டிப் பொட்டலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடமுழுக்கைத் தொடர்ந்து 23ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை மாலை 5 மணிக்குத் தொடங்கி மண்டல பூஜை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

