ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில் மகா குடமுழுக்கு நடைப்பயணம்

ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில் மகா குடமுழுக்கு நடைப்பயணம்

1 of 2
படம்: ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில்
ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில்

04 Oct 2026 - 6:30 am

2 mins read

சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயிலில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் மகா குடமுழுக்கு விழா குறித்து இந்துச் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்றது.   

2027 ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலயத்தின் மகா குடமுழுக்கு விழாவை முன்னறிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைப்பயணத்தை இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவர் சேகரன் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியின்போது அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டதுடன், திருக்கோவிலின் நற்பணிகள், வரவிருக்கும் புனரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.   

காலை வேளையில் நடைபெற்ற இந்த நடைப்பயணத்தில் ஏறத்தாழ 120 பக்தர்களும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

ஸ்ரீ குரு ராகவேந்திரா கோயில் வளாகத்தில் தொடங்கிய இந்நடைப்பயணம், பாலஸ்டியர் சாலை, டெசன்சன் சாலை, ரங்கூன் சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. 

பங்கேற்பாளர்கள் அனைவரும் குழுக்களாக ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.   

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்ற திரு ஜெயப்பிரகாசம், “ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் இத்தகைய நற்பணியில் பங்கேற்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஆலயத்தின் மகா குடமுழுக்கு 2027 ஏப்ரலில் நடைபெறவுள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; விழா சிறப்பாக நிறைவேற நல்வாழ்த்துகள்,” என்றார்.

மற்றொரு பங்கேற்பாளரான திரு பிரகாஷ், “குடமுழுக்கு விழாவைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடைப்பயணம் நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன். 

‘‘மேலும், இதற்காக 2027 ஜனவரியில் நிதி திரட்டும் சிறப்பு இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் அறிந்தேன். அந்த நற்பணிக்கும் அனைவரும் தங்களின் முழு ஆதரவை வழங்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.  

குறிப்புச் சொற்கள்
கோயில்குடமுழுக்குசிங்கப்பூர்