புதுப்பொலிவுடன் குடமுழுக்கு காணும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

புதுப்பொலிவுடன் குடமுழுக்கு காணும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

5 mins read
627c9c2d-c618-402e-b087-3708ae74b180
ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். - படம்: வெ. வித்யா லட்சுமி

ஈசூன் அவென்யூ 3ல் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் இம்மாதம் (ஜூன்) 18ஆம் தேதி, வியாழக்கிழமை, நடைபெறவிருக்கும் குடமுழுக்கு விழாவிற்கான பணிகளை மும்முரமாக முன்னெடுத்து வருகிறது.

1940களிலிருந்து இயங்கி வரும் இக்கோயில், செம்பவாங் வட்டாரம், மண்டாய் ரோடு எனப் பல இடங்களில் செயல்பட்டு, இறுதியாக 1997ஆம் ஆண்டு ஈசூன் வட்டாரத்திற்கு இடம்பெயர்ந்தது.

இதற்கு முன்னதாக 2010ஆம் ஆண்டில் இந்தக் கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.

அதனை அடுத்து, 17 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறவுள்ள இந்தக் குடமுழுக்கில் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான திரு கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருக்கிறார்.

கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் சையது ஹருன் அல்ஹப்ஷியும் திருவாட்டி லீ ஹுய் யிங்கும் வருகை புரிவர்.

குடமுழுக்கு, வாரநாளில் நடைபெறவிருப்பதால் கிட்டத்தட்ட 5,000 முதல் 10,000 பக்தர்கள் வரை திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, கூட்ட நெரிசலைச் சமாளித்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற பணிகளில் ஏறத்தாழ 800 தொண்டூழியர்கள் ஈடுபடவுள்ளனர்.

குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள்

ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். - படம்: வெ. வித்யா லட்சுமி

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாகசாலைப் பூசைகளின் முதற்காலம் ஜூன் 15ஆம் தேதி, திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில் தொடங்கவுள்ளது.

விழாவிற்கான முதன்மைக் கும்பங்கள் யாகசாலையில் எழுந்தருளச் செய்யப்பட்டு, மொத்தம் ஆறுகாலப் பூசைகளுக்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

குடமுழுக்கு நடைபெறும் நாளன்று, காலை 5 மணியளவில் இறுதிகாலப் பூசை தொடங்கும்.

அதனையடுத்து, காலை மணி 9.10க்குக் கடப் புறப்பாடு நடைபெறும்.

அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்குக் கோயில் கோபுரங்களின் கும்பங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும்.

குடமுழுக்கு வழிபாடுகளைச் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியாரும் அவரது குழுவினரும் வழிநடத்துவர்.

பக்தர்களுக்குச் சீரான அனுபவத்தை அளிப்பதற்காகக் கோயிலுக்குள் நுழைய இரண்டு தனிப்பட்ட பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

கோயில் கண்டுள்ள உருமாற்றம்

ஈராண்டுகளாக நடைபெற்றுவந்த தீவிரப் புதுப்பிப்புப் பணிகளைத் தொடர்ந்து, இக்கோயில் புதுப் பொலிவுடன் மிளிர்கிறது.

குறிப்பாக, புதிதாக எழுப்பப்பட்டுள்ள ராஜகோபுரம் இதன் சிறப்பம்சம்.

பல்வேறு தடைகளைக் கடந்து, 29 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் சேர்க்கப்பட்டிருப்பதில் கோயில் நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது.

கோயிலுக்குள் நுழையும்போது, ஓர் அரண்மனைக்குள் நுழைவது போன்ற உணர்வைப் பக்தர்களிடையே ஏற்படுத்தும் வண்ணம், தென்னிந்திய பாணியைப் பின்பற்றி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர், காவல் தெய்வமாகக் கருதப்படும் கருப்பசாமியை வழிபடுவதை அறிந்து, 16 அடி உயரமுள்ள கருப்பசாமிச் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் கிடைக்கக்கூடிய கருங்கல்லைப் பயன்படுத்தி, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள அச்சிலைக்கு அன்றாடம் பூசைகள் செய்வதும் அதை அலங்கரிப்பதும் சவால்மிக்க ஒன்று.

ஆகவே, பக்தர்கள் வழிபடுவதற்கு ஏற்றார்போல், 3 அடி உயரமுள்ள கருப்பசாமிச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆற்றல், செழிப்பு, ஆன்மிக உயர்வு ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் மகாமேரு, ஆலயத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமேரு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
மகாமேரு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீ சக்கரம் ஒன்றும் ஆலய மேற்கூரையின் நடுப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியக் கோயில்களில் உள்ள கருவறை அமைப்பானது, பக்தர்கள் மூலவரை மிகத்தெளிவாகத் தரிசனம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரம், ஆலய மேற்கூரையின் நடுப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சக்கரம், ஆலய மேற்கூரையின் நடுப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

அவ்வடிவமைப்பைக் கருத்திற்கொண்டு, கருவறையில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மனை எவ்வித இடையூறுமின்றித் தரிசிப்பதற்காகக் கருவறை மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரர்கள் பலர் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தைத் தங்கக் கோயில் என்று செல்லமாக அழைப்பர். கோயிலின் தங்க நிறத்தை வைத்தே பலரும் அதை அடையாளப்படுத்துவதால், கோயிலின் நிறத்தை மாற்றாமல், இம்முறையும் தங்க நிறத்தையே பயன்படுத்தியுள்ளோம்,” என்று ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் மகேந்திரன் குறிப்பிட்டார்.

சிற்ப வேலைப்பாடுகள் பெரும்பாலும் தங்க நிறத்தில் செய்யப்பட்டாலும் ஐந்து நிறங்களைக் கொண்ட சிலைகளும் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன. சிலைகளின் அழகிற்கு மெருகேற்றும் வகையில், வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

கோயிலைக் கடந்துசெல்வோர் வண்ணமயத்துடன் மிளிரும் இச்சிலைகளைத் தவறவிடுவது அரிது.
கோயிலைக் கடந்துசெல்வோர் வண்ணமயத்துடன் மிளிரும் இச்சிலைகளைத் தவறவிடுவது அரிது. - படம்: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

கோயிலைச் சுற்றியுள்ள சன்னதிகளின் கோபுரங்களிலும் இந்து சமயப் புராணக் கதைகளை எடுத்துக்கூறும் வண்ணம் புதிய சிற்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சிற்பக்கலை பெரும்பாலும் பொன்னிறத்தில் செய்யப்பட்டாலும் பல சிலைகளுக்கு ஐந்து நிறங்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளன.
சிற்பக்கலை பெரும்பாலும் பொன்னிறத்தில் செய்யப்பட்டாலும் பல சிலைகளுக்கு ஐந்து நிறங்களில் வண்ணம் பூசப்பட்டுள்ளன. - படம்: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்

தலைமைச் சிற்பி லோகநாதனின் தலைமையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த 27 சிற்பிகள் இப்பணிகளைச் செவ்வனே முடித்தனர்.

சிற்பங்களைச் செதுக்க ஓராண்டு எடுத்ததாகவும் அதையடுத்துக் கட்டுமானப் பணிகள் மற்றோர் ஆண்டுகாலம் நீடித்ததாகவும் குறிப்பிட்டார் திரு லோகநாதன்.

இதற்கு முன்பு, தரை முதல் கோவிலின் மேற்கூரை வரை, கோயிலின் உயரம் ஏறத்தாழ மூன்று மீட்டர் இருந்தது.

தற்போது, அது கிட்டத்தட்ட ஐந்து மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தரையிலிருந்து மேற்கூரையின் நடுப்பகுதி வரை, கோயிலின் உயரம் தற்போது ஏறத்தாழ 8.5 மீட்டராக இருக்கிறது.

இதனால், இயற்கையான காற்றோட்டம் மேம்படும் என்றும் இயற்கை வெளிச்சம் அதிகரிக்கும் என்றும் திரு மகேந்திரன் கூறினார்.

பக்தர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கோயிலைச் சுற்றிவரும் பாதை அகலமாக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஏற்கனவே இருந்த சரிவுப்பாதையும் இன்னும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரைக் கருத்திற்கொண்டு சரிவுப்பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவோரைக் கருத்திற்கொண்டு சரிவுப்பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: வெ. வித்யா லட்சுமி

கோயிலின் குடமுழுக்குப் பணிகளுக்கு இடையில், ஆலயத்தின் நிலக்குத்தகையைப் புதுப்பிக்கும் வேலைகளும் இருந்தன.

இரண்டையும் சேர்த்து ஏறத்தாழ $6 மில்லியன் செலவானதாகச் சொன்ன திரு மகேந்திரன், நிதி ஆதரவு அளித்த தொண்டர்கள் அனைவருக்கும் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள கோயில்கள் தனித்துச் செயல்படாமல், ஒன்றுக்கொன்று உதவி செய்வதைச் சுட்டிய அவர், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவிற்கு மற்றக் கோயில்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்துவருவதாகக் குறிப்பிட்டார்.

சமூகப் பணிகள்

குடமுழுக்கிற்கான பணிகள் 2023 முதல் நடைபெற்றுவந்தாலும், சமூகப் பணிகளை ஆலயம் தொடர்ந்து ஆற்றி வந்தது.

“கோயில் என்பது தனிப்பட்ட அமைப்பன்று. அது சமூகத்தோடு ஒன்றிச் செயல்பட வேண்டும்,” என்று திரு மகேந்திரன் கூறினார்.

ஏப்ரல் மாதம் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் பற்றிய பகிர்வு ஒன்றில், 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

மருத்துவம், சட்டம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க, அத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை அழைத்து, உரையாற்றக் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கு முன்னர், நடைப்பயிற்சி நடவடிக்கையில் இளையர்களை வெற்றிகரமாக ஈடுபடுத்தியதைச் சுட்டி, எல்லாத் தரப்பினருக்கும் ஏற்றார்போல் தொடர்ந்து நடவடிக்கைகளை நடத்தவிரும்புவதாகத் திரு மகேந்திரன் குறிப்பிட்டார்.

கோயிலின் அடுத்தகட்டப் பணிகள்

கோயிலின் புதுப்பிப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கை முன்னிட்டு, கோயிலின் கட்டமைப்பு உருமாற்றம் கண்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில், கோயிலின் பின்புறத்தில் அமைந்துள்ள திருமண மண்டபமும் அதிலுள்ள வசதிகளும் மேம்பாடு காணும்.

சமூக நிகழ்ச்சிகள், திருமணச் சடங்குகள், சமயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக மண்டபம் புதுப்பிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக மண்டபத்தில் மின்தூக்கிகளும் நிறுவப்படும்.

குறிப்புச் சொற்கள்