2027ல் இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்ரீ மாரியம்மன் கோவில்

2027ல் இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்ரீ மாரியம்மன் கோவில்

3 mins read
4f9023c1-5a93-4818-8de0-be575e897a35
200 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஸ்ரீ மாரியம்மன் கோவில். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்
multi-img1 of 2

சிங்கப்பூரின் ஆகப் பழைமையான இந்து ஆலயமான ஸ்ரீ மாரியம்மன் கோவில் 2027ல் இருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, ஓராண்டுகால சிறப்புக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரியில் தைப்பொங்கல் பண்டிகையின்போது இக்கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன.

தேசிய நினைவுச் சின்னமான ஸ்ரீ மாரியம்மன் கோவில், வழிபாட்டுத் தலமாகத் திகழ்வதுடன் சிங்கப்பூரின் பன்முகக் கலாசார அடையாளத்திற்குப் பெரும்பங்காற்றியுள்ளது. 1827ல் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் ஒரு சிறிய கூரை அமைப்பாகத் தொடங்கப்பட்ட இக்கோவில், தொடக்கக் கால குடியேறிகளின் புகலிடமாகவும் விளங்கியது.

1910ஆம் ஆண்டில் ஸ்ரீ மாரியம்மன் கோவில்
1910ஆம் ஆண்டில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் - படம்: நெதர்லாந்து தென்கிழக்காசிய கல்விக்கழகம்
ராஜகோபுரத்தை மையமாகக் கொண்ட புதிய சின்னம்.
ராஜகோபுரத்தை மையமாகக் கொண்ட புதிய சின்னம். - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

புதிய சின்னம்

இம்மாபெரும் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜகோபுரத்தை மையமாகக் கொண்ட புதிய சின்னத்தை ஆலயம் வெளியிட்டுள்ளது.

‘அம்மனின் இல்லம், மக்களின் ஆலயம்’ என்ற முழக்கவரி இடம்பெற்றுள்ள இச்சின்னம், கோவிலின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது.

“சிங்கப்பூரின் ஆகப் பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயம், பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வியல் கதைகளைத் தன்னுள் கொண்டுள்ளதால், இந்த முழக்கவரியை நாங்கள் தேர்வுசெய்தோம்,” என்று கோவில் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் சரவணன் அண்ணாமலை, 50, தெரிவித்தார்.

சிறப்பு சமய நிகழ்வுகள்

இருநூற்றாண்டு நிறைவின் ஒரு பகுதியாக, சமூகத்தின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல மேம்பட்ட சமய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் முதன்மையான நிகழ்வாக ஸ்ரீ மாரியம்மன் வெள்ளி ரத ஊர்வலம் நாடு முழுவதும் விரிவடையும். நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களுக்குச் செல்லவிருக்கும் இந்த ஊர்வலம், அன்னை மாரியம்மனின் அருளை அனைத்து மக்களிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் அமையவுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வரலாற்றை விளக்கும் புதிய பதிப்பு

‘அம்மனின் இல்லம், மக்களின் ஆலயம்’ முழக்கவரியைத் தலைப்பாகக் கொண்டு ஒரு வரலாற்று நூல் 2027ஆம் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும்.

கல்வியாளர்கள், வரலாற்று ஆசிரியர்களால் ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் அந்நூல் எழுதப்படும்.

முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கைச் சுவடுகள், குடியேறிகளின் கதைகள், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை விரிவாகப் பேசவுள்ளது அந்நூல்.

வருங்காலத் தலைமுறையினருக்காக வரலாற்றைப் பாதுகாக்கும் நோக்கில் வெளியிடப்படும் அந்நூல் அச்சு, மின்னிலக்கம் என இரு வடிவங்களிலும் இடம்பெறும்.

அதில் உள்ள கியூஆர் குறியீடுகள் மூலம் வாசகர்கள் தொடர்புடைய காணொளிகளையும் காப்பக ஆவணங்களையும் மின்னிலக்க முறையில் கண்டுகளிக்கலாம்.

காலச்சுவடுகளை வெளிப்படுத்தும் கண்காட்சிகள்

பொதுமக்களும் மாணவர்களும் இக்கோவிலின் தொன்மைமிக்க வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கண்டுகளிக்கும் வகையில், நடமாடும் மற்றும் நிலையான கண்காட்சிகள் நடத்தப்படவுள்ளன.

2027 பிப்ரவரி முதல் டிசம்பர் வரை இந்திய மரபுடைமை நிலையம், பொது, வட்டார நூலகங்கள் ஆகியவற்றில் இந்த நடமாடும் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நிலையான கண்காட்சி ஒன்றும் நடைபெறும்.

இக்கண்காட்சிகளுக்கான புகைப்படங்களைத் தமிழ் முரசும் எஸ்பிஎச் மீடியாவும் வழங்கியுள்ளன.

‘வாழும் நினைவுகள் திட்டம்’

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ள ‘வாழும் நினைவுகள் திட்டத்திற்கு’ பங்களிக்குமாறு பக்தர்கள், தொண்டூழியர்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவிலின் தலைமுறை கடந்த கதைகளைப் பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய புகைப்படங்கள், திருமண அழைப்பிதழ்கள், திருவிழாப் பொருள்கள், காலமாற்றத்தைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னங்களை வழங்கலாம்.

தேர்வுசெய்யப்படும் பங்களிப்புகள் ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் சமுகக் காப்பகத்தில் சேர்க்கப்படும்.

அத்தகைய ஆவணங்களை வழங்க விரும்புவோர் smt@heb.org.sg என்ற மின்னஞ்சல் அல்லது 6223 4064 என்ற தொலைபேசி எண் வழியாக 2026 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கோவில் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

கோவிலின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டங்கள், சிங்கப்பூரின் நாட்டு நிர்மாணப் பயணத்தில் கோவிலின் பங்களிப்பை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்