ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மூத்தோர் 100 பேர் ஒன்றுகூடி உணவருந்திய நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சீனப் புத்தாண்டுக்கு முந்திய தினம் நடைபெறும் பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று, குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக உணவருந்துவே. அவ்வகையில், பல இனத்தவரையும் ஒன்றிணைக்கும் வண்ணம், நான்கு முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களும் அவ்வட்டாரக் குடியிருப்பாளர்களும் பங்கேற்ற இந்த சீனப் புத்தாண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை (பிப்ரவரி 7) நடைபெற்றது.
ஸ்ரீ நாராயண மிஷன், சன்லவ், தெம்புசு, பன்யான் ஹோம், கிரேத்தா ஆயர் மூத்தோர் நடவடிக்கைகள் நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றனர்.
முற்பகல் 11.30 மணியளவில் பரதநாட்டியம், சிங்க நடனத்துடன் நிகழ்ச்சி தொடங்க, மூத்தோரின் சிரிப்பொலியுடன் அது களைகட்டியது.
அனைவருக்கும் ஆலயத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டதும், மூத்தோர் அனைவரும் சீனப் பாரம்பரியமான ‘லோஹேய்’ செய்து மகிழ்ந்தனர்.
அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஸ்ரீ மாரியம்மன் கோவில் தலைவர் சேகரன் கிருஷ்ணன், “கடந்த 24 ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் புதிய உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் இதனைச் சிறப்பாக நடத்த முயற்சி செய்கிறோம்,” என்றார்.
கோவில் அமைந்துள்ள சைனாடவுன் வட்டாரத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் நோக்கில் இது அமைந்துள்ளது மகிழ்ச்சி என்றும் அவர் சொன்னார்.
“அருகிலேயே பௌத்த ஆலயமும் ஜாமிஆ (சூலியா) பள்ளிவாசலும் அமைந்துள்ளன. இது, சிங்கப்பூரின் நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அதனைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை நடத்துகிறோம்,” என்றார் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ரதி பாலகிருஷ்ணன், 36.
சிங்கப்பூரில் ஒருவர் மற்றவர்களின் விழாக்களைக் கொண்டாடுவதாகக் குறிப்பிட்ட ரதி, “இந்துக் கோவிலாக இருந்தாலும், சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்கும் விழாக்களை நடத்துவது முக்கியம். இதுவே நல்லிணக்கத்துக்குச் சான்று,” என்றார்.
தொண்டூழியரான தேவி பாஸ்கரன், மூத்தோரை ஒன்றிணைத்த விழாவில் பங்களித்தது மனநிறைவு அளிப்பதாகச் சொன்னார்.
மற்றொரு தொண்டூழியரான உமாதேவி, “தொண்டூழியர்கள் மூத்தோரிடம் அன்பளிப்புப் பைகளை வழங்கினர். உணவு பரிமாறுவதில் தொடங்கி, அன்பளிப்புப் பைகளைத் தயார்செய்வது வரை பல வகைகளிலும் பங்காற்றியுள்ளோம்,” என்றார் தேவி.
முதியோர் இல்லங்களில் வசிப்போர் தனித்து விடப்படாமல், அவர்களுக்கும் குடும்ப உணர்வை அளிக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது சிறப்பு என்றார் அவர்.
பல்லின மக்களைச் சந்தித்ததும் தோழிகளுடன் அமர்ந்து பேசி நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததும் மாறுபட்ட அனுபவம் என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுக் பிளாங்கா குடியிருப்பாளர் சரோஜா, 78.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குக் கோவில் ஏற்பாடு செய்தது சிறப்பு என்றும் உணவு சுவையாக இருந்தது என்றும் கிரேத்தா ஆயர் மூத்தோர் நடவடிக்கைகள் நிலையத்தைச் சேர்ந்த சூசன் ஹூங், 76, பாராட்டினார்.

