சிங்கப்பூருக்கு வருகை அளிக்கும் ஶ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி

சிங்கப்பூருக்கு வருகை அளிக்கும் ஶ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி

3 mins read
70cf1904-3a39-4a65-99c5-ad07da61350d
சிங்கப்பூரில் உள்ள ஆறு கோயில்களுக்கு ஸ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி வருகை அளிக்கவுள்ளார். - படம்: ஸ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம்
multi-img1 of 4

இந்து ஆன்மீக மெய்யியல் கோட்பாடுகளில் ஒன்றான அத்வைததத்தைப் போதிக்கும் குருபரம்பரையின் புகழ்பெற்ற கௌடபாதாச்சாரியாரின் தொன்மையான குரு பரம்பரையில் வேரூன்றிய ‘ஸ்ரீ கைலாச ஆசிரம மஹாசமஸ்தானம்’ பரம்பூஜ்ய ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திருச்சி மஹாசுவாமிகளால் 1960ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

சமயம், சாதி போன்றவற்றின் அடிப்படையில் எவ்வித பாகுப்பாடுகளையும் காணாமல், அனைவரையும் சமமாகக் கருதி பல்வேறு தொண்டுகளைப் பெங்களூரில் அமைந்திருக்கும் அந்த ஆசிரமம் ஆற்றி வருகிறது.

இவ்வாசிரமத்தின் பாதசேவக பீடாதிபதியாக பரம்பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திரபுரி மஹாசுவாமிஜி திகழ்கிறார்.

உலகம் ஒரே குடும்பம் என்ற பொருள் கொண்ட ‘வசுதைவ குடும்பகம்’ எனும் கோட்பாட்டை அவர் பின்பற்றி வருகிறார்.

இந்தியக் கலாசாரத்தின் அடிப்படைக் கருத்தாக இது அமைவதால், உலகம் முழுதும் உள்ளோரிடம் பகிர்வது அவரது இலக்குகளில் ஒன்றாகும்.

அவ்வகையில், நீலமணி அறநிறுவனத்தின் அழைப்பின் பேரில், சிங்கப்பூருக்கு வரவுள்ள அவர், இங்குள்ள ஆறு இந்துக் கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளையும் நடத்தவுள்ளார்.

மஹாசுவாமிகள் வருகை அளிக்கும் இடங்கள்:

  1. ஜூன் 16 (செவ்வாய்க்கிழமை)
  • காலை 9.30 மணி - பிற்பகல் 12.30 மணி: அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில்
  • மாலை 5.30 மணி - இரவு 8.00 மணி: புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயில்
  1. ஜூன் 17 (புதன்கிழமை)
  • காலை 9.30 மணி - பிற்பகல் 12.30 மணி: ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் (ஈசூன் அவென்யூ 3)
  • மாலை 5.30 மணி - இரவு 8.00 மணி: ஸ்ரீ மாரியம்மன் கோயில் (சவுத் பிரிட்ஜ் ரோடு)
  1. ஜூன் 19 (வெள்ளிக்கிழமை):
  • மாலை 5.30 மணி - இரவு 9.00 மணி: ஸ்ரீ சிவன் கோயில்

சரியான வாழ்க்கை பற்றிய ஆசியுரை

‘சரியான வாழ்க்கை’ எனும் தலைப்பில், ஜூன் 20 (சனிக்கிழமை) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அவர் ஆசியுரை ஆற்றவுள்ளார்.

சுய ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழ்தல், நெறிகளைப் பின்பற்றி வாழ்தல், ஆன்மீக சிந்தனை போன்ற பல தலைப்புகளை ஒட்டி அவர் விளக்கவுள்ளார்.

சமச்சீரான வாழ்க்கைக்கு மூன்று முக்கிய கூறுகளின் அடிப்படையில் இயங்குவதாக அவரது உரை விளக்குகிறது.

நேர்மறையான முறையில் வாழ்க்கையை நடத்துதல், குடும்ப, சமூகப் பொறுப்புகளை செவ்வனே செய்தல் உள்ளிட்டவை ஒரு நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் என அவர் குறிப்பிடுவார்.

நன்னடத்தையோடு இருத்தல், தமது செயல்களைப் பற்றி சிந்தித்தல், தீய குணங்களாகக் கருதப்படும் கோபம், பொறாமை, சுயநலம் போன்றவற்றை வாழ்க்கையிலிருந்து விலக்குதல் போன்றவற்றைப் பற்றியும் அவர் விளக்குவார்.

மேலும், ஆன்மீக சிந்தனையைப் பற்றியும் இந்த உரையின் ஓர் அங்கமாக அவர் பேசவுள்ளார்.

ஆன்மீகத்தை நடைமுறை வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்காமல், அன்றாட நடவடிக்கைகளோடு ஒன்றி சேர்ப்பதைப் பற்றி எடுத்துரைப்பதோடு, ஒருவரின் செல்வ செழிப்பைப் பொருத்து அவரது வாழ்க்கையின் வெற்றியை எடை போடாமல், ஒருவரது வாழ்வில் இருக்கவேண்டிய உயர்ந்த குறிக்கோளைப் பற்றியும் அவர் உரை நிகழ்த்துவார்.

மேலும், ஒரு தனிமனிதருக்கு இருக்கும் ஆன்மீக சிந்தனைக்கும் அவரது சமூகப் பொறுப்பிற்கும் இடையே ஒரு சமநிலையைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை அவரது உரை அடிக்கோடிட்டுக் காட்டும்.

‘சரியான வாழ்க்கை; என்பது தனித்து வாழ்வதன்று என இவர் கூறினார்.

மாறாக, அனைவரையும் மதித்து, சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்து, சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதே ஆகும்.

உரையின் மற்றோர் அங்கமாக ‘பரமாத்மாவாக தேவியின் உருவம்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

கட்டமைக்கப்பட்ட முறை ஒன்றின்வழி, ஆன்மீகத் தத்துவத்தைப் பற்றிய கருத்துகளைப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு மனிதருக்குள் பொதிந்திருக்கும் உன்னதத்தையும் மேன்மையையும் கண்டறிய இந்த உரை ஊக்குவிக்கும்.

அவ்வாறு கண்டறிவதன் மூலமாக, கழிவிரக்கம், இருவழி மரியாதைப் போன்ற விழுமியங்களை மக்களிடையே விதைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மக்களின் நவீன கண்ணோட்டங்களுடன் பாரம்பரிய தத்துவங்களை இணைக்கும் வண்ணம் மஹாசுவாமிகளின் உரை அமைந்திருக்கும்.

இன, சமய வேறுபாடுகளைத் தாண்டி, அனைவரையும் சமமாக மதிக்கும் உன்னதப் பண்பை அவரது உரை வலியுறுத்துகிறது.

பன்முகக் கலாசாரம் கொண்ட சிங்கப்பூர்ச் சூழலில், இத்தகைய ஆன்மீகக் கருத்துகள் வெவ்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும் என்று அவர் நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்