இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பாடலாகக் கருதப்படும் வழிபாடே கோவில்கள் போன்ற திருத்தலங்களின் முதன்மைப் பணி.
அதே வேளையில், மனிதகுல நலத்திற்குச் செறிவூட்டும் சமூக முயற்சிகள் பலவற்றுக்கும் இந்து ஆலயங்கள் காலங்காலமாய்த் திகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தற்போதைய உலகச் சூழலுக்கான தேவைகளுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் வாய்ப்பாக ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் குடமுழுக்கைப் பயன்படுத்த முனைகிறது.
பசித்தோர்க்கு அன்னதானம், தொண்டர்க்கு ஆதரவுக்கரங்கள், நுண்கலைகளுக்கும் செந்தமிழுக்கும் சிறப்புத் திட்டங்கள் எனத் தொடக்கத்திலிருந்து இடமும் வளமும் அளித்த கொடைச்சிறப்புடையது இந்த ஆலயம்.
லிட்டில் இந்தியாவில் அந்தக் காலத்தில் சுண்ணாம்புக் கம்பம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் 1835ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டி எழுப்பப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்க்காலத்தின்போது ‘ஐஎன்ஏ’ எனப்படும் இந்திய தேசிய ராணுவப் படை வீரர்கள் சிங்கப்பூரில் பயிற்சி செய்யவும் இக்கோவில் இடமளித்தது.
தொடக்கத்தில் அன்னை வீரமாகாளி, பெரியாச்சி அம்மன் ஆகியோரின் திருச்சிலைகள் மட்டுமே இருந்தன. பின்னர் விநாயகர் , முருகர் ஆகியோரின் சந்நிதிகள் சேர்க்கப்பட்டன.
பொதுப் பணித் துறை ஊழியர்களின் முற்கால பங்களிப்பு
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த அன்றைய பொதுப்பணித்துறை (Public Works Department) உள்ளிட்ட சில முக்கிய துறையினைச் சேர்ந்த ஊழியர்கள் கோயிலுக்குத் தொண்டாற்றிப் பராமரித்தும் வந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரியாக இருந்த 80 வயது கோவிந்தசாமி, 1960களில் தம்முடன் அத்துறையில் கிட்டத்தட்ட 200 தமிழ் ஊழியர்கள் பணியாற்றியதாகவும் அவர்கள் அனைவரும் கோவிலின் உறுப்பினர்களாக இருந்ததையும் நினைவுகூர்ந்தார்.
“ஒவ்வொரு மாதமும் சந்தா வசூலிப்போம். 11 மாதங்கள் வசூலித்த பணத்தைக் கொண்டு, 12வது மாதத்தில் நவராத்திரி விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம். எங்கள் துறையின் சார்பில் சரசுவதி பூசையை முன்னின்று நடத்துவோம். அன்று கோவில் சிறியதாக இருந்தாலும், இடம் மிகவும் பெரியதாக இருந்தது. நவராத்திரிக்கு வாத்தியங்கள், நடனம் என விழா களைகட்டும்,” என்று அவர் சொன்னார்.
சிறிய மனையாக இருந்துவந்த கோவிலுக்கு 1983ல் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 1987ல் ஆலயத்தின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது.
ராஜகோபுரத்துடன் எட்டு முதன்மை விமானங்களும் வேறு சில சிறு விமானங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், 2000ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் குடமுழுக்குகள் நடத்தப்பட்டு, தற்போது நான்காவது முறையாக 2027ல் நடைபெறவுள்ளது.
1987ல் கட்டப்பட்ட மூன்று தளப் பன்னோக்கு மண்டபம், 2012ல் ஆறு தளக் கட்டடமாக உருமாற்றம் பெற்றது. அம்மண்டபம் தற்போது பல்வேறு குடும்ப, சமூக நடவடிக்கைகளுக்கும் இடமளித்து வருகிறது.
குடமுழுக்குப் படிநிலைகள்
சைவ ஆகம விதிகளின்படி, கோவிலின் உயிர்மூச்சாக இயங்கும் இறையாற்றலைப் புதுப்பிக்கவும், திருச்சிலைகளின் உறுதித்தன்மையைப் பேணவும் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
இந்த மாபெரும் விழாவிற்கான முதற்கட்டப் பணிகள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் (ஏப்ரல் 12) ‘பாலஸ்தாபனம்’ எனப்படும் கோவிலைப் புதுப்பிக்கும் காலத்தில், தெய்வச் சக்தியைத் தற்காலிகமாக ஒரு கும்பத்தில் ஆவாகனம் (இறையாற்றலை வரவழைத்தல்) செய்து வைப்பதாகும் என்று ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ வெங்கடேச சிவாச்சாரியார் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் முதற்கட்டமாக ராஜகோபுரத்துடன் விநாயகர், முருகப்பெருமான், பெரியாச்சியம்மன், ராமர், விசாலாட்சி விஸ்வநாதர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு இந்த நிகழ்வு நடைபெறும். இரண்டாம் கட்டமாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி மூலவர் சந்நிதி தெய்வங்களுக்கு பாலஸ்தாபனம் செய்யப்படும் எனத் தலைமை அர்ச்சகர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 1 முதல் சுமார் ஏழு மாத காலத்திற்கு கோயிலின் உட்புறப் பணிகள் துரிதமாக நடைபெறும். இந்தக் காலத்தில் பக்தர்கள் அர்ச்சனை செய்யவும், அன்னதானம் பெறவும் அனுமதி உண்டு என்றாலும், இடப்பற்றாக்குறை காரணமாக பக்தர்கள் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைவரையும் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு
மாறிவரும் சமூகத்திற்கு ஏற்றவாறு ஆலயத்தின் நிர்வாகச் சட்டம் இடைக்காலத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்ததாக ஆலயத் தலைவர் ஆர்.ராஜகாந்த் தெரிவித்தார்.
அறநிறுவன ஆணையரின் ஆக அண்மை விதிமுறைகளுக்குத் தகுந்தாற்போல சட்டங்களை நெறிப்படுத்துவது இதற்கான ஒரு காரணம். மற்றொன்று, மேலும் பலரையும் செயற்திட்டங்களில் எளிதில் ஒன்றுசேர்க்க வகைசெய்யும் விதிமுறைகளைக் கட்டமைப்பது என்று திரு ராஜகாந்த் கூறினார்.
வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த பலதரப்பட்ட மக்களுக்கு ஆலயம் ஒரே கூரையின்கீழ் கொண்டுவருவதாகக் கூறும் திரு ராஜகாந்த், பொருள் வாங்க சிராங்கூன் சாலைக்கு வரும் சிங்கப்பூரர்கள், அண்டை நாட்டவர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் எனப் பலதரப்பினரும் வந்துசெல்வதை அவர் சுட்டினார்.
இறையன்பர் கூட்டம், பரந்த சமூகம், பண்பாடு என மூன்று தரப்புகளைக் கருத்தில்கொண்டு செயல்பாடுகள் திட்டமிடப்படும் எனத் திரு ராஜகாந்த் கூறினார். இதற்காக ‘ஹார்மனி சர்க்கல்ஸ்’ நல்லிணக்க அமைப்பின் கூட்டுறவின்கீழ் பிற சமய அமைப்புகளுடனும் ஆலயம் அணுக்கமாகச் செயல்படும் என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரர்களிடையே மட்டுமன்றி, வெளிநாட்டிலிருந்து வருவோர்க்கும், இங்குள்ள மக்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வசதி குறைந்தவர்க்கும் இடையே உறவுப்பாலங்களை மேலும் வலுப்படுத்துவதிலும் ஆலயம் கவனம் செலுத்தும் என்று திரு ராஜகாந்த் குறிப்பிட்டார்.
சிண்டா, புரோபோனோ எஸ்ஜி எனும் இலவச சட்ட சேவை ஆகிய அமைப்புகளுடன் ஆலயம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வழியாக இணையப் போவதாகக் கூறிய திரு ராஜகாந்த், இதுபோன்ற நடவடிக்கைகளின்வழி ஆலயத்தின் சமூக மையத்தன்மை அதிகரிக்கும் என்றும் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமைதோறும் அலைமோதும் வெளிநாட்டு ஊழியர் கூட்டம், அடுத்த 12 ஆண்டுகளுக்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்பதைப் பற்றி யோசிக்க வைத்துள்ளது என்றார் திரு ராஜகாந்த்.
புதிய வசதிகள்
உடற்குறையுள்ளோர் ஆலயத்திற்குள் எளிதாக நுழைவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது மேம்பாட்டுப் பணிகளில் முதன்மையானது.
“சக்கர நாற்காலிப் பயனர்களுக்கு இரண்டு சாய்வு மேடைகள் அமைக்கப்படும்,” என்று திரு ராஜகாந்த் கூறினார்.
அத்துடன், ஆலயத்தின் வெவ்வேறு சந்நிதிகளிலுள்ள தெய்வங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள, ‘ஸ்கேன்’ செய்து படிப்பதற்கான கியூஆர் (QR) குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்து அல்லாதவர்களும் எளிதாக அணுகக்கூடிய இடமாக ஆலயத்தை வடிவமைக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் அவர்.
நித்தம் பறக்கும் அன்னக்கொடி
ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலின் அன்னதானச் சேவையில் கடந்த 2019ல் முதல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கிட்டத்தட்ட 160 தொண்டூழியர்களில் 60 வயது சுபஸ்ரீ ஹரிதாவும் ஒருவர்.
திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 1994ல் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து, தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றிவிட்டு, தற்போது ஓய்வு பெற்று முழுநேரமாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலயத்தின் முக்கியச் சேவையான அன்னதானம் குறித்துப் பேசுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவரும் பசியோடு திரும்பக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் ஆண்டின் 365 நாள்களும் இடைவிடாது உணவு வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“நாளொன்றுக்குச் சராசரியாக 200 முதல் 300 கிலோ வரை உணவு தயாரிக்கப்பட்டு, குறிப்பாகச் சிராங்கூன் பகுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள், இல்லப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர்க்குப் பரிமாறப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
அன்னதானத் தொண்டூழிய ஒருங்கிணைப்பாளர் சுசிலா கணேசனின் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஒரு குழு, இந்த அன்னதானப் பணியைச் செய்து வருகிறது.
“கோவில் நடை சாத்தப்பட்ட நேரங்களிலும்கூட, தொண்டூழியர்கள் உணவுப் பொட்டலங்களைத் தயார்செய்து, கோவில் வாசலில் நிற்கும் மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர்,” என்று திருவாட்டி சுசிலா குறிப்பிட்டார்.
வெளிநாட்டு ஊழியர் சடையன் கண்ணன், தமது ஓய்வு நேரங்களில் இங்கு சேவையாற்றுபோது வேலையால் உணரும் துன்பங்கள் பறந்துபோவதாக உருக்கத்துடன் கூறினார். “அன்னதானச் சேவையில் ஈடுபடும் அனைவராலும் எந்த வேறுபாடுமின்றி அரவணைக்கப்படுகிறேன்,” என்கிறார் அவர்.
வர்த்தகங்கள் ஆதரவு
லிட்டில் இந்தியாவின் கடைகள் பலவற்றுக்கு இடையிலுள்ள ஆலயத்தின் திருப்பணிகளுக்கு கடைகளும் ஆதரவு நல்கியுள்ளன.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களால் அருகிலுள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
ஆலயத்திற்கு நேரெதிரே உள்ள சூரியாஸ் உணவகத்தின் உரிமையாளர் ராஜு சாமிக்கண்ணு, ஆலயத்திற்கு வரும் பக்தர்களில் பலரும் அருகிலுள்ள பூக்கடைகள், மளிகைப் பொருள் கடைகள், நகைக்கடை போன்றவற்றுக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.
“குறிப்பாக,சைவ உணவகம் என்பதால் ஆலயத்திலிருந்து பலர் நேரே இங்கு வருகின்றனர்,” என்று 1955லிருந்து அந்த வட்டாரத்தில் தங்கிவரும் திரு ராஜு கூறினார்.
கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் பொதுவாகப் பயனடைந்தாலும் நகைக்கடைகள் தனித்துவமான முறையில் நன்மை பெறுவதாக ‘ஜோயாலுக்காஸ் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் வட்டார நிர்வாகி ஃபிரெட்டி பால் தெரிவித்தார்.
கடைக்கு நேரெதிரே உள்ள நகைக்கடையிலிருந்து தங்கம் வாங்குவதை வாடிக்கையாளர்கள் சிலர் விரும்புவதாகக் குறிப்பிட்ட திரு பால், “ஆலயத்திற்கு நாங்கள் தண்ணீர்ப் புட்டிகள்வழி சேவை செய்கிறோம்,” என்றும் சொன்னார்.
கோவிலுக்கு உதவிசெய்யும் நன்கொடையாளர்களுக்கு இடையே தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருவதாக செல்வி ஸ்டோர்ஸ் இயக்குநர்களில் ஒருவரான திரு சண்முகம் செந்தில் குறிப்பிட்டார்.
குறிப்பாக, சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் நடைபெறும் அன்னதானத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக அவர் கூறினார்.
நெகிழ்வுறும் நெஞ்சங்கள்
பரந்த சமூகத்திற்கு நன்மைபுரியும் அமைப்பாகச் செயல்பட்டாலும் இறைவனை நாடும் தனிமனிதர்களுடனும் இந்த வழிபாட்டுத்தலம் ஆழமான உறவைக் கொண்டுள்ளது.
இன, மொழி, தேச வேறுபாடுகளைக் கடந்த இறையுணர்வு திளைக்கும் தளமாக ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் திகழ்கிறது.
முன்னதாக தெய்வ நம்பிக்கை இல்லாதிருந்த ஜேனிஸ் டே, 68, கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தின் இறை அதிர்வுகளால் ஈர்க்கப்பட்டது முதல் சிங்கப்பூரிலும் இந்தியாவிலும் உள்ள கோயில்களுக்குச் செல்லத் தொடங்கியதாகக் கூறினார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவிலில் பல்வேறு வகையான சேவை ஆற்றிவரும் திருவாட்டி ஜேனிஸ், இங்கு தாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாகத் திகழ்வதைப் போல உணர்கிறார்.
திருநீறு, குங்குமப் பிரசாதங்களைப் பொட்டலமிடுவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றை உவகையுடன் செய்கிறார் அந்தச் சீன மாது.
“பக்தர்களின் அன்பைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்குக் கோவிலைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்குகிறேன்,” என்றார் திருவாட்டி டே.
இந்த நெகிழ்ச்சியை பக்தர்கள் மட்டுமின்றி இறைத்தொண்டாற்றும் அர்ச்சகர்களும் உணர்கின்றனர்.
2000லிருந்து உதவி அர்ச்சகராகத் தம் பணியைத் தொடங்கிய சிவஸ்ரீ சுகுமார் குருக்கள் தற்போது மூத்த அர்ச்சகராகச் செயல்படுகிறார்.
“இது எனக்கு மூன்றாவது குடமுழுக்கு. அந்தத் திருநிகழ்வில் நானும் இடம்பெறும் வாய்ப்பை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பெரும்பேறாக நான் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.
ஆலயத்திற்கு வரும் மக்கள் பலர் ஏதோ துன்பத்தோடு அல்லது தேவையோடுதான் வருகிறார்கள். ஆனால், அம்மனைப் பார்த்ததும் ஒரு குழந்தை தன் தாயைப் பார்த்ததுபோன்ற மனநிறைவை உணர்கிறார்கள் என அந்த அர்ச்சகர் உருக்கத்துடன் கூறினார்.


