பழைமையில் புதுமை காணும் தீபாவளி ஆடைகள்

4 mins read
85519c25-3f86-4761-94f0-43b6e919e6ad
சுற்றுச்சூழல், சமூகப் பொறுப்புணர்வு பற்றிய விழிப்புணர்வின் அடிப்படையில், கொண்டாட்டங்களுக்கான ஆடைகளில் நிலைத்தன்மையைக் காண்பது என்பது காலத்தின் தேவையாக உள்ளது.  - படம்: பிக்ஸாபே

பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தங்கள் பழைய பாரம்பரிய உடைகளை அணிவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தனர் ராதாவும் சிந்துவும்.

அதிக விலைக்கு தைத்த சில ரவிக்கைகள், தீபாவளிக்கு அணிந்த வண்ண ஆடைகள் நிறைய இருந்தன. அவற்றில் எதுவும் தமக்குப் பொருந்தாதபோது ​மிகவும் வருத்தப்பட்டார் ராதா.

அந்தச் சவால் 30 வயதில் இருக்கும் இரு தாய்மார்களுக்கும் பாரம்பரிய ஆடைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் ஒரு யோசனையைத் தந்தது.

பாரம்பரிய ஆடைகளை நன்கொடையாகப் பெறுவது, ஆடைகள் சிலவற்றை மறுசுழற்சி செய்து வாடகைக்கு விடுவது ஆகிய சேவைகளை ‘தி நிறம் கலெக்டிவ்’ (The Niram Collective) நிறுவனம் வழங்குகிறது.
பாரம்பரிய ஆடைகளை நன்கொடையாகப் பெறுவது, ஆடைகள் சிலவற்றை மறுசுழற்சி செய்து வாடகைக்கு விடுவது ஆகிய சேவைகளை ‘தி நிறம் கலெக்டிவ்’ (The Niram Collective) நிறுவனம் வழங்குகிறது. - படம்: ‘தி நிறம் கலெக்டிவ்’ (The Niram Collective)

‘தி நிறம் கலெக்டிவ்’ (The Niram Collective) நிறுவனம் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. பாரம்பரிய ஆடைகளை நன்கொடையாகப் பெறுவது, ஆடைகள் சிலவற்றை மறுசுழற்சி செய்து வாடகைக்கு விடுவது ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

“பொதுவாக இதுபோன்ற வாடகைச் சேவையை மேற்கத்திய மணப்பெண் ஆடை நிறுவனங்கள் செய்து வருகின்றன,” என்றார் சிந்து.

இந்த நிறுவனத்தின்கீழ் முதலில் ‘நிறம் சேகரிப்பு’ (Niram Closet) திட்டம்வழி தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகள் வாடகைக்கு விடப்படும்.

வாடிக்கையாளர்கள் அதிலிருந்து தங்களின் உடைகளைத் தேர்ந்தெடுப்பர். அவற்றை உடலுக்கு ஏற்ப சரிசெய்வது, பராமரிப்பது போன்ற மற்ற எல்லாவற்றையும் இருவரும் செய்வர்.

“பண்டிகை அல்லது திருமணம் போன்ற சில நிகழ்வுகளுக்கு மீண்டும் பயன்படுத்த முடியாத ஆடைகளை வாங்குவதைத் தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் உதவுகிறது,” என்றார் சிந்து. மேலும், பாரம்பரிய உடைகளின் நீடித்த நிலைத்தன்மையும் தாங்கள் ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார் ராதா.

மறுசுழற்சி ஆகும் புடவைகள்

‘நிறம் அப்சைக்கல்ட்’ (Niram Upcycled) திட்டத்தின்கீழ் புடவைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய பிற ஆடைகளாக மாற்றப்படுகின்றன.

“நம்மில் பலர் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே புடவைகள் அணிந்திருக்கிறோம். புடவைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதை இந்தத் திட்டம் உறுதிசெய்கிறது. வடிவம் மட்டும் வேறுபடுகிறது,” என்றார் சிந்து.

மறுவாழ்வு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய ஆடையை அணிய  சிறப்பு நிகழ்வு அல்லது தருணம் வேண்டியதில்லை. 
மறுவாழ்வு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய ஆடையை அணிய சிறப்பு நிகழ்வு அல்லது தருணம் வேண்டியதில்லை.  - படம்: ‘தி நிறம் கலெக்டிவ்’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய ஆடையை அணிய சிறப்பு நிகழ்வு அல்லது தருணம் வேண்டியதில்லை.

இதனால் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் ஆடைகள் வாங்குவது குறைந்து தேவைக்கு ஏற்ப ஆடைகளை வாடிக்கையாளர்கள் வாங்க ‘நிறம் அப்சைக்கல்ட்’ திட்டம் ஊக்குவிக்கிறது என்றார் ராதா.

குறிப்பாக, இன்றைய காலத்தில் தீபாவளிக்கு மட்டும் புத்தாடை வாங்காமல் பொங்கல், திருமணம், ஆலய விழாக்களுக்கும் அணிந்து செல்லக்கூடிய ஆடைகளை பலர் தீபாவளிக்கு வாங்குவதுண்டு என்று கூறினார்கள் இருவரும்.

தீபாவளிக்குப் புத்தாடை அணிவது அவசியம். ஆனால் ‘புதுமை’ என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்றார் ராதா.

“மறுவாழ்வு அளிக்கப்பட்ட பாரம்பரிய ஆடைகளும் புத்தாடைகள்தான்,” என்று புன்னகைத்தனர் இந்தத் தாய்மார்கள்.

பண்டிகைகால உடைகளில் நீடித்த நிலைத்தன்மை

இணையம்வழி இந்தியாவிலிருந்து பெரும்பாலும் ஆடைகள் வாங்குகிறார் சுபாஷினி, 35.

குறிப்பாக நீடித்த நிலைத்தன்மையைப் பின்பற்றும் ஆடை நிறுவனங்கள் அவரை பெரிதும் ஈர்த்தவை.

“தினமும் தேர்வுசெய்யும் ஆடை போன்ற எளிமையான முடிவில்கூட நீடித்த நிலைத்தன்மையை உறுதிசெய்யலாம் என்பதை ஊக்குவிக்க எண்ணினேன்,” என்றார் சுபாஷினி.

தம் கணவரின் உந்துதலால் 2023ஆம் ஆண்டு மகளின் பெயர் கொண்ட ‘ஹீஷாஸ்’ (Heshas) எனும் நிறுவனத்தை குடும்பத்துடன் தொடங்கினார் சுபாஷினி.

தனது குடும்பத்துடன் ‘ஹீஷாஸ்’ நிறுவனத்தை வழிநடத்தும் சுபாஷினி. 
தனது குடும்பத்துடன் ‘ஹீஷாஸ்’ நிறுவனத்தை வழிநடத்தும் சுபாஷினி.  - படம்: ‘ஹீஷாஸ்’

நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய இயற்கைப் பொருள்களால் ஆன ஆடைகள், கைவினையாளர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகள் ஆகியவை ‘ஹீஷாஸ்’ நிறுவனத்தின் அடிப்படை.

பாரம்பரிய ஆடைகள் மிகவும் பரவலாக, மிக எளிதில் கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்குப் பல தெரிவுகள் உள்ளன.

“இருப்பினும் நீடித்த நிலைத்தன்மையை மனத்தில்கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளுக்கு உள்ள மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு ‘ஹீஷாஸ்’ வழி எடுத்துரைக்க விரும்புகிறேன்,” என்றார் சுபாஷினி.

தற்போது கிட்டத்தட்ட ஒன்பது இந்திய வர்த்தகங்களிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து மறுவிற்பனை செய்கிறது ‘ஹீஷாஸ்’.

சுபாஷினி அதிக அளவில் இறக்குமதி செய்வதில்லை. எந்த ஒரு புதுமையான ஆடை பாணியையும் பின்பற்றாது தமக்குப் பிடித்த ஆடைகளை தேவைக்கேற்ப இறக்குமதி செய்கிறார். அவருடைய வாடிக்கையாளர்கள் அவரது ஆடை ரசனையை வரவேற்கின்றனர்.

தேவைக்கேற்ப ஆடைகளை கொண்டுவருகிறது ‘ஹீஷாஸ்’.
தேவைக்கேற்ப ஆடைகளை கொண்டுவருகிறது ‘ஹீஷாஸ்’. - படம்: ‘ஹீஷாஸ்’

தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களுக்கு மட்டுமின்றி, மற்ற நிகழ்வுகளுக்கும் இந்த ஆடைகளை அணியலாம். குறிப்பாக, தீபாவளிக்கு தேவைமீறி அதிகப்படியான ஆடைகள் வாங்குவதை குறைக்க இது ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார்.

“ஆடை மூலம் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பண்டிகை ஆடைகள் குறித்து சமூகத்தில் ஒரு மாற்றத்தை தற்போது உணரமுடிகிறது. நீடித்த நிலைத்தன்மையின் நன்மைகளை எடுத்துக்கூறும் பல முயற்சிகளில் என் முயற்சியும் ஒன்று,” என்று கூறினார் சுபாஷினி.

மாறிவரும் காலத்திற்கேற்ப பாரம்பரிய மாற்றங்கள்

தீபாவளிக்குப் புத்தாடை வாங்குவது என்பது பல தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரியம்.

“சில ஆண்டுகள் புத்தாடை வாங்குவேன். சில நேரம் இருப்பதைப் பயன்படுத்துவேன்,” என்ற காயத்ரி நாதன், 35, “அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட புடவைகள் என்னிடம் உள்ளன,” என்றார்.

அடிக்கடி பயன்படுத்தும் வகையில் தீபாவளி உடைகளை எளிமையாகத் தேர்வுசெய்வார் தேவி விஜயன், 36.

ஆடைகளுக்கு அதிக செலவு செய்வதில் அர்த்தம் இல்லை எனக் கூறும் ஆஷா சுரேஷ், 28, சஞ்சேவித்தா மார்ட்டின், 29, இருவரும் புத்தாடைகள் வாங்காது, இருக்கும் ஆடைகளை தீபாவளிக்கு அணிகின்றனர்.

சுற்றுச்சூழலைப் பேணுவதுடன் சமூகப் பொறுப்புணர்வுடனும் பண்டிகைக்கால ஆடைகளில் நிலைத்தன்மையைப் பேணுவது காலத்தின் தேவை.

நெசவாளர்கள், உள்ளூர் கைவினைக் கலைஞர்களை ஆதரிப்பது, மறுபயன்பாடு, தரமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற வழிகளின் மூலம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, சமூகத்துக்கு நன்மை பயக்கும் கொண்டாட்ட நடைமுறைகளை உருவாக்க முடியும்.

இதன் மூலம் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாதுகாப்பதுடன் பூமியின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையையும் வெளிப்படுத்தலாம். நிலைத்தன்மை கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒவ்வொரு கொண்டாட்டமும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாக மாறி, வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான உலகை விட்டுச்செல்கிறது.

குறிப்புச் சொற்கள்