காதல் தோல்விகளை மாறுபட்ட பாணியில் மேடையேற்றும் நாடகம்

காதல் தோல்விகளை மாறுபட்ட பாணியில் மேடையேற்றும் நாடகம்

படம்: எஸ்பிளனேட்

20 Nov 2026 - 4:04 pm

2 mins read

ஓர் ஆண் சந்திக்கும் பெண்கள் நால்வர், அவர்களுடனான காதல், அவற்றில் அவர் சந்தித்த தோல்விகள் என்பனவற்றை மையக்கருவாகக் கொண்ட ‘காதல் தோல்விகள் (த ஃபெயில்ட் ரொமேன்சஸ்)’ நாடகம் இந்த வார இறுதியில் மேடையேறவுள்ளது.

‘கலா உத்சவம்’ நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக எஸ்பிளனேட் ரிசைட்டல் ஸ்டுடியோவில் நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் மலேசிய, ஆஸ்திரேலிய நடிகர் கோவின் ரூபனும் உள்ளூர்ப் புகழ் உதய சௌந்தரியும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

கேபரே பாணியில் மேடையேறவுள்ள இந்நாடகம் தமிழ் சினிமாவின் பல்வேறு அம்சங்களைத் தழுவி படைக்கப்படவுள்ளதாக கோவின் கூறினார்.

கோலாலம்பூரின் செந்தூல் பகுதியில் பிறந்து வளர்ந்த கோவினுக்குச் சிறு வயது முதலே அவரது அத்தைமார் வழியாகத் தமிழ்த் திரைப்படத் தாக்கம் அதிகம் ஏற்பட்டது.

ஆனால், அப்போக்கு பெற்றோருக்குப் பிடிக்காததால் அவர்களுக்குத் தெரியாமல் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கப் பழகினார்.

“மௌன ராகம், தளபதி போன்ற திரைப்படங்களைக் கண்டு காதல் குறித்த புரிதல் ஒன்று எனக்கு உருவானது. ஆனால், நடைமுறைக்கும் திரைப்படத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை என் காதல் அனுபவங்கள் எனக்கு உணர்த்தின,” என்றார் அவர்.

அவ்வேறுபாடுகளை வேடிக்கையான முறையில் மக்களுக்குப் படைத்தால் அவர்களுக்குப் பிடிக்கக்கூடும் என்று நம்பிய கோவின் 2019ஆம் ஆண்டு அட்ரியானோ கோர்டேசேவுடன் இணைந்து நாடகத்தின் கதையை எழுதினார். இருவரும் இணைந்து நாடகத்தை இயக்கினர்.

நாடகம் தொடர்ந்து மெருகேற்றப்பட்டு தற்போது சிங்கப்பூருக்கு வரவிருக்கிறது.

இதில் இடம்பெறும் நான்கு பெண் கதாபாத்திரங்களிலும் நடிக்கும் உதய சௌந்தரி, இது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக அமைந்தது என்று கூறினார்.

தாம் நடித்துள்ள பிற மேடை நாடகங்களை ஒப்பிடுகையில் வித்தியாசமான பாணியில் இது அமைந்துள்ளதாகவும் பார்வையாளர்களுக்கு இதைப் படைக்க தாம் உற்சாகத்துடன் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

“மேடை நாடகங்களில் பொதுவாக மிகைப்படுத்தப்பட்ட உடல்மொழி பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த நாடகத்தில் என்னை இயல்பான, திரைப்படங்களில் நடிக்கும் பாணியைப் பின்பற்ற இயக்குநர் ஊக்குவித்தது சுவாரசியமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

கோவினின் வாழ்க்கைக் கதைகளை அவர் வெளிப்படையாக மக்களின் பார்வைக்கு வழங்குவது பாராட்டத்தக்கது என்று உதயா குறிப்பிட்டார்.

நாடகத்தின் கதை மட்டுமன்றி நேரடிப் பின்னணி இசை, மின்னிலக்கத் திரை போன்ற பல்வேறு அம்சங்கள் ரசிகர்களைக் கவருமென்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

நாடகத்தில் மின்னிலக்கத் திரை போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
நாடகத்தில் மின்னிலக்கத் திரை போன்ற தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெறவுள்ளன. - படம்: எஸ்பிளனேட்

“பார்வையாளர்களுக்கு நிச்சயமாக மாறுபட்ட நாடக அனுபவத்தை இப்படைப்பு வழங்கும். சுவாரசியமான, வேடிக்கையான படைப்பாக இருந்தாலும் சிந்தனையைத் தூண்டும் வண்ணமும் இது அமையும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்