பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரை இன்றும் தங்கள் நினைவுகளில் ஏந்தும் ரசிகர்கள், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் இசை நிகழ்ச்சியில் அவர் நடித்த திரைப்படப் பாடல்களைக் கேட்டு மெய்மறந்தனர்.
ஆரஞ்சு குரோவ் ரோட்டில் ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 500 பேர் கூடி, உள்ளூர் இசைக்கலைஞர்களின் இசையைக் கேட்டு மகிழ்ந்தனர். மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை 1970களுக்குக் கொண்டுசேர்த்தது.
தமிழ்த் திரையுலகின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ஜெய்சங்கரை நினைவுகூர இந்நிகழ்ச்சியைப் ‘புனிதன் அண்ட் பிரண்ட்ஸ்’ குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
எஸ்.விஜயேந்திரன், கே.கருணாமூர்த்தி, வி.சூரியமூர்த்தி, எஸ்.ராஜலட்சுமி, மகேஸ்வரி, எஸ். ராணி நாஸ், விக்டர் புனிதன், வி.கஸ்தூரி பாய் உள்ளிட்ட மூத்த சிங்கப்பூர்த் தொலைக்காட்சிக் கலைஞர்களும் பாடகர்கள் சத்யபாமா, கமலா நாதன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியைப் படைத்தனர்.
‘மணிமாறன் கிரியேஷன்ஸ்’ வடிவமைத்த விறுவிறுப்பான நடனங்கள் நிகழ்ச்சிக்குத் துடிப்பூட்டின. இளம் கலைஞர்கள் ஹரன் புனிதன், வைஷ்ணவி ஆகியோரின் ‘அன்ப்ளக்டு’ (unplugged) இசையமைப்பு, நிகழ்ச்சிக்கு இளமைத் துள்ளலைச் சேர்த்தது.
சென்னையிலிருந்து வருகை தந்திருந்த ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய்யின் பங்கேற்பு நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தது. சென்னையில் ஊடகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சஞ்சய், தமது தந்தைக்கு வெளிநாட்டில் இவ்வளவு பெரிய அளவில் அஞ்சலி செலுத்தப்படுவதைக் கண்டு பெருமைப்படுவதாகக் கூறினார்.
ஜெய்சங்கருக்கும் சிங்கப்பூருக்குமான நீண்டகாலத் தொடர்பையும் அவர் எடுத்துரைத்தார். ‘ஜெய் ஜாய் நைட்’ மேடை நிகழ்ச்சிகளுக்காக அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றதையும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ரசிகர்கள் ஜெய்சங்கர் மீது வைத்துள்ள நீங்காத அன்பே இந்த நிகழ்ச்சியின் உருவாக்கத்திற்குக் காரணம் என்று புனிதன் கூறினார்.
“சிங்கப்பூரில் ஜெய்சங்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டி.எம்.சௌந்தரராஜன் அவருக்காகப் பல மறக்க முடியாத பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த நடிகர் என்பதற்கப்பால், பல தொண்டு நிறுவனங்களுக்கு அமைதியாக ஆதரவளித்த அற்புதமான மனிதர் ஜெய்சங்கர். அவர் எப்போதும் பணத்தைவிட நல்ல கதைகளுக்கே முன்னுரிமை அளித்ததால், தயாரிப்பாளர்கள் அவருடன் பணியாற்ற மிகவும் விரும்பினார்கள்,” என்றார் புனிதன்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆனதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
அரங்கத்தின் முகப்பில், ஜெய்சங்கரின் திரைப்பட உலகின் சூழலை மீண்டும் கண்முன் நிறுத்தும் வகையில் கருப்பொருள் சார்ந்த அலங்காரங்கள், புகைப்படச் சாவடிகள், நினைவுப் பொருள்கள் அமைக்கப்பட்டிருந்தன. அது, ரசிகர்கள் சஞ்சய்யுடன் உரையாடவும் நிழற்படங்களை எடுக்கவும் வாய்ப்பளித்தது.
பார்வையாளர்களின் அமோக வரவேற்பால் உற்சாகமடைந்த திரு புனிதன், ‘சன் லவ் ஹோம்’, ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற அமைப்புகளை ஆதரிக்கும் அறக்கட்டளை நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யத் தங்கள் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

