வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் நின்றுவிடுவதில்லை, கற்பித்தல்.
அதற்கு அப்பால், மாணவர்களின் தேவைகளையும் திறன்களையும் உணர்ந்து, அவர்களுக்குக் கற்றலில் ஈடுபாடு ஏற்படும் வகையில் பல்வேறு புதுமையான கற்பித்தல் உத்திகளைக் கல்வியாளர்கள் கையாண்டு வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள், விழுமியங்கள், மரபு, பண்பாடு, நீடித்த நிலைத்தன்மை முதலிய கூறுகளைச் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கு ஊட்டி வருங்காலத் தலைமுறையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.
நாடாளும் மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு; கற்றவருக்கோ செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்ற குறளுக்கு ஏற்ப கல்வியின் உன்னதத்தை உணர்ந்து அறிவு எனும் விதையை ஒவ்வொரு மாணவருக்குள்ளும் வித்திட்டு, உரமூட்டி வளர்க்கும் ஆசிரியர்களை இந்த ஆசிரியர் தினத்தன்று சிறப்பிப்போம்.
கற்பித்தலும் ஒருவகை உளவியலே
உளவியல் கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட புதுமையான கற்பித்தல் முறைகள், மாணவர்களின் வளர்ச்சியில் நீடித்த ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொங்சங் தொடக்கப்பள்ளியில் மூன்றாம், நான்காம் நிலைகளுக்கான தலைவராகவும் நற்குணமும் குடியியல் கல்விக்குமான துறைத் தலைவராகவும் செயல்பட்டுவரும் திரு கெவின் ஜோசஃப் ஃபிரான்சிஸ், 39, கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக உளவியல் பட்டதாரியான இவர், குழந்தை வளர்ச்சியில் தமக்கிருந்த ஈடுபாட்டால் ஆசிரியர் ஆக முடிவு செய்தார். சிறப்புக் கல்வி வழங்கும் ஸ்பெக்டிரா உயர்நிலைப்பள்ளியில் 10 ஆண்டுகளும் தற்போது சொங்சங் தொடக்கப்பள்ளியில் நான்கு ஆண்டுகளாகவும் கல்வியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
தமது அனுபவங்கள் ஏழு முதல் 17 வயது வரையிலான மாணவர்களின் வளர்ச்சி நிலைகளைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற உதவியதாகச் சொன்ன திரு கெவின், வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களின் தேவைகளை நிறைவு செய்து ஊக்குவிப்பதற்கும் உளவியல் கொள்கைகளைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
“நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்க ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட குறிப்புகளை வகுப்பில் வழங்குவேன். அவர்களின் முயற்சியையும் முன்னேற்றத்தையும் அடையாளம் கண்டு பரிசாக ஒட்டுவில்லைகளை வழங்குவேன்,” என்றார் அவர்.
எந்த வகையான சவால்களை மாணவர்கள் எதிர்கொள்வார்கள் என்று அறுதியிட்டு கணிக்க முடியாவிட்டாலும் மாணவர்களுக்கு வலுவான விழுமியங்களைக் கற்றுக்கொடுப்பதன்வழி சரியான முடிவுகளை எடுக்க அவர்களைத் தயார்ப்படுத்த முடியும் என்று அவர் நம்புகிறார்.
தமது உளவியல் பின்னணியுடன் ‘கேமிஃபிகேஷன்’ என்று அழைக்கப்படும் விளையாட்டுவழி கற்றல்முறையை இணைத்தபோது விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ‘கேட்ச்!’ என்ற அட்டை விளையாட்டு உருவெடுத்ததாக அவர் சொன்னார்.
“இதை உருவாக்கும்போது குழந்தைகள் ஒரு விழுமியத்தை எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொள்கிறார்களோ அதே அளவுக்கு அதை வெளிப்படுத்துவார்கள் என்ற உளவியல் உத்தியை மனதில் வைத்துக்கொண்டேன்,” என்றார் அவர்.
இந்த விளையாட்டில் மாணவர்கள் மரியாதை, நேர்மை போன்ற விழுமியங்களைக்கொண்ட அட்டைகளை அதே விழுமியங்களைக்கொண்ட மற்ற அட்டைகளுடன் பொருத்த வேண்டும். அவர்கள் ஒரு பொருத்தத்தைக் கண்டுபிடிக்கும்போது, உரத்த குரலில் அந்த விழுமியத்தைச் சொல்ல வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்களின் புரிதல் வலுப்படுத்தப்படுவதாக திரு கெவின் கூறினார்.
இளம் வயதிலிருந்து இதுபோன்ற விளையாட்டுகளை விரும்பி விளையாடிய திரு கெவின், ‘ஸ்னாப்’ என்ற பழங்கால அட்டை விளையாட்டால் தமக்கு இந்த யோசனை வந்ததாகச் சொன்னார்.
“வலுவான விழுமியங்களில் மாணவர்களை நங்கூரமிடுவதும் ஆக்கப்பூர்வமான கற்பித்தல் உத்திகளைக் கொண்டு அவர்களது ஈடுபாட்டை அதிகரிப்பதும் பள்ளியிலும் வாழ்க்கையிலும் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும்,” என்றார் திரு கெவின்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்
நீடித்த நிலைத்தன்மையிலும் சுற்றுச்சூழலிலும் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கிரீன்டேல் தொடக்கப்பள்ளியில் அறிவியல் துறைக்கு நிலைத் தலைவராகவும் பள்ளியின் சுற்றுச்சூழல் சங்கத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டுவரும் திரு மோஹன் கிருஷ்ணமூர்த்தி, 49.
இவர் 25 ஆண்டுகளாக கல்வித் துறையில் உள்ளார். இளம் வயதிலிருந்தே இயற்கையுடன் ஒன்றியவராகத் தாம் இருந்து வந்ததாக இவர் கூறினார். சிறுவனாக இருந்தபோது தம் தாத்தாவுடன் தோட்டப்பணியில் ஈடுபட்ட அனுபவங்களே அவரது கற்பித்தலுக்கு அடித்தளமாக அமைந்ததாகச் சொன்னார்.
செங்குத்தான தோட்டம், புத்துருவாக்கத் தோட்டம் (upcycled garden), உரம் தயாரிக்கும் அமைப்புமுறை உட்பட பல திட்டங்களைத் தமது பள்ளியில் திரு மோஹன் தொடங்கியுள்ளார். மாணவர்களுடன் இணைந்து சதுப்புநிலக் குளம் ஒன்றையும் உருவாக்கி, பல்லுயிரியலை மேம்படுத்தியதோடு அறிவியல் பாடத்திட்டத்திலும் அதை ஒருங்கிணைத்து பள்ளியை நடைமுறைக் கற்றல் சூழலாகவும் மாற்றினார்.
தமது வகுப்பறையிலும் தனித்துவமான கற்பித்தல் முறைகளைக் கையாளும் திரு மோஹன், வாழ்க்கை அறிவியலை அனுபவம்வழி கற்பித்து வருகிறார். உதாரணத்திற்கு, தாவரங்களையும் வண்ணத்துப்பூச்சிகளையும் அவரே வளர்த்து மாணவர்களுக்கு நேரடியாக வாழ்க்கைச் சுழற்சி குறித்து காட்டுவார். இவ்வாறு பாடத்தை நடத்தும்போது அதில் மாணவர்களை ஆழமாக ஈடுபடுத்த முடிகிறது, என்றார் அவர்.
தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து சமூக ஈடுபாட்டுத் திட்டங்களில் தமது மாணவர்களைப் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்துள்ளார். சுற்றுச்சூழல், நீடித்த நிலைத்தன்மை சார்ந்த திட்டங்களில் அவர்கள் பங்கேற்கும்போது, பல நுண்திறன்களைப் பெறுவதாக அவர் சொன்னார்.
“மாணவர்களின் வளர்ச்சியில் நீடித்த நிலைத்தன்மைக் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. தங்களின் எதிர்காலத்தையும் தங்கள் சுற்றுச்சூழலின் எதிர்காலத்தையும் எவ்வாறு தாங்கள் புரியும் செயல்கள் பாதிக்கும் என்பதை அவர்கள் நேரடியாக அனுபவத்தின்மூலம் கற்றுக்கொள்கிறார்கள். இது நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த அவர்களைத் தூண்டுகிறது,” என்றார் திரு மோஹன்.
செம்மைப்படுத்தும் இலக்கியம்
தமிழர்களின் திறன்கள், கலாசாரம், கல்வி, சமூகம், வழிபாட்டுமுறை உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் விழுமியங்களை இலக்கியம்வழி மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார், ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளித் தமிழாசிரியர் திரு கும்பலிங்கம் உத்தமன், 66.
தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த திரு உத்தமன், தம் தந்தை மற்றும் அண்ணனின் அறிவுறுத்தலுக்கேற்ப தமிழ் இலக்கியத்தைப் படித்தார். 1987ல் தமிழ்நாட்டில் தமது தமிழாசிரியர் பயணத்தைத் தொடங்கிய அவர், அதன் பிறகு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்து கடந்த 30 ஆண்டுகளாக இங்கு தமிழ்மொழியைக் கற்பித்து வருகிறார்.
ஈசூன் டவுன் உயர்நிலைப்பள்ளியில் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர், கல்வி அமைச்சு பாடத்திட்ட மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் அதிகாரி, ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர் என வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றியபின் 2012ஆம் ஆண்டில் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார்.
தமிழ் மீதான மாணவர்களின் ஆர்வத்தையும் அவர்களது படைப்பாற்றலையும் வளர்க்க சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், குறும்படங்கள், காணொளிகள், பாடல்கள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களை ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பித்தல் உத்திமுறைகளாகப் பயன்படுத்தி வருகிறார் இவர். அதோடு, சிறுகதைகளை நாடகமாக நடித்துக் காட்டுதல், மொழிப் போட்டிகளை வைத்து பரிசுகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் தமது வகுப்பறையில் நடத்தி வருகிறார்.
உள்ளூர் எழுத்தாளர்களுடன் வாசிப்பு அமர்வுகள், வெளியூர் கவிஞர்களால் நடத்தப்படும் பயிலரங்குகள் போன்ற நடவடிக்கைகளையும் தமது மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.
“இக்கற்றல் நடவடிக்கைகள் மாணவர்கள் தமிழ்மொழியைச் சரளமாகக் கையாள்வதற்கும் தமிழ்மொழிமீதும் இலக்கியங்கள்மீதும் அவர்களுக்குள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும் வழிவகுக்கின்றன,” என்றார் திரு உத்தமன்.
உதாரணத்திற்கு, மாணவர்களுக்குப் பிடித்த தலைப்புகளில் அமைந்த கவிதைகளை அவர்கள் படிக்கும்போது அவற்றின் பொருளின் அழகைப் புரிந்துகொள்கிறார்கள், என்றார் அவர்.
“இதன்மூலம், மாணவர்களின் கற்பனைத்திறன் வளர்கிறது. சுயமாகக் கவிதைகளையும் சிறுகதைகளையும் படைக்க அவர்கள் தூண்டுதல் பெறுகின்றனர்,” என்றும் கூறினார் திரு உத்தமன்.
தம்முடைய மாணவர்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து, 2014ல் ‘உறவுகளின் உணர்வுகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, 2019ல் ‘கனிமொழியரின் கவிமொழிகள்’ என்ற தலைப்பில் மாணவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
மேலும், பல மாணவர்களின் கவிதைகளையும் சிறுகதைகளையும் கொண்ட அடுத்த தொகுப்பைப் தயார் செய்துகொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இலக்கியத்தைப் படிப்பதற்கு வயது வரம்பில்லை. சிறுவயதில் கேட்கும் குழந்தைப் பாடல்கள்கூட ஒருவகையான கவிதைதான். இலக்கியம் பல வாழ்க்கைப் பாடங்களை நமக்கு கற்பிக்கிறது,” என்றார் திரு உத்தமன்.
பாரம்பரியத்துடன் கைகோக்கும் தொழில்நுட்பம்
பாரம்பரிய கற்பித்தல் முறைகளுடன் புதிய தொழில்நுட்ப கற்பித்தல் முறைகளையும் ஒருங்கிணைக்கும்போது மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்க முடிகிறது என்றார் பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி தமிழ் ஆசிரியர் குமாரி ஐஸ்வர்யா, 29.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பட்டப்படிப்பை இவர் முடித்திருந்தாலும், தொடக்கக்கல்லூரிக் காலத்தில் சமூக சேவையில் சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிட்டபோது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.
இளம் பருவத்திலிருந்தே தமிழ் மொழி ஆற்றலைப் பெற்றிருந்ததால் தமிழ் ஆசிரியராக முடிவு செய்த அவர், 2019ல் தேசியக் கல்விக் கழகத்தில் தமது முதுகலைப் பட்டயக்கல்வியைத் தொடங்கினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
2020ல் கொவிட்-19 கிருமித்தொற்றால் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம்வழி பாடங்களை நடத்தவேண்டிய நிலைமை அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது. இன்று, தமது மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் அனுபவம்வழி கற்பித்தலையும் ஒருங்கிணைத்து தனித்துவமான கற்பித்தல் உத்திமுறையை உருவாக்கியுள்ளார் குமாரி ஐஸ்வர்யா.
‘காஹூட்’, ‘வொர்ட்வால்’, ‘நியார்போட்’ போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வகுப்பறையில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரித்து வருகிறார். அதே நேரத்தில், ‘ஹாப்ஸ்காச்’ எனும் நொண்டி விளையாட்டை விளையாடுதல், பட்டங்களைப் பறக்க விடுதல், வாழை இலையில் உணவு பரிமாறும் முறையைக் கற்றுக்கொள்ளுதல் போன்ற பாரம்பரிய நடவடிக்கைகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வருவதாகச் சொன்னார்.
வகுப்பறையிலேயே உணவகம் அல்லது பேரங்காடிக் சூழலை விளையாட்டுப் பொருள்கள் கொண்டு உருவாக்கி மாணவர்களை வாடிக்கையாளர்களாகவும் கடைக்காரர்களாகவும் பாத்திரமேற்று நடித்தல்வழி தமிழில் கலந்துரையாடச் செய்து, அவர்களின் பேச்சுத் திறனையும் பொது அறிவையும் வளர்க்கிறார்.
“பாத்திரமேற்று நடித்தல் என்பது நடைமுறைச் சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்களின் அறிவைப் பயன்படுத்திப் பேசுவதற்கு ஊக்குவிக்கிறது. வகுப்பறையில் மாணவர்கள் கதாபாத்திரங்களாக மாறி நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது பயனுள்ள, ஆர்வமூட்டும் கற்றல் கற்பித்தல் முறையாக அமைகிறது,” என்றார் அவர்.
மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப தமது கற்பித்தல் உத்திகளை அடிக்கடி மாற்றியமைத்துக்கொள்வதாகவும் குமாரி ஐஸ்வர்யா கூறினார்.
“பள்ளியில் சொல்லிக் கொடுப்பதை மாணவர்கள் உள்வாங்கிக் கொள்வதற்கு முதலில் வகுப்புகளுக்கு அவர்கள் விரும்பி வர வேண்டும். இதை என் நோக்கமாகக் கொண்டு என் அன்றாட தமிழ் பாடத்தை திட்டமிடுவேன்,” என்றார் அவர்.
மாணவர்கள் தம்மிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், மாணவர்களிடமிருந்தும் தாம் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொள்வதாக குமாரி ஐஸ்வர்யா சொன்னார்.
கபடிவழி திறன் வளர்த்தல்
வகுப்பறைக் கற்றலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்குத் தமிழ் மரபையும் பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் தமிழ்ப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுவரும் திரு அந்தோணி ராஜ் ஜோசப், 43. இவர் 13 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக புழுதி பறந்திட மண் தரையில் விளையாடப்படும் தமிழ் வீர விளையாட்டான கபடியைத் தமது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அதில் அவர்களை ஈடுபடுத்தியும் வருகிறார்.
“எனது பள்ளிக் காலத்தில் நான் கபடி விளையாடினேன். ஆரம்பத்தில் அதை விளையாட எனக்குச் சற்று பயமாக இருந்தாலும் அதை விடாமல் தொடர்ந்து என் நண்பர்களுடன் விளையாடியபோது அதன்மீது ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் அவர்.
கபடி விளையாட்டின்வழி தாம் வளர்த்துக்கொண்ட திறன்களின் மதிப்பை உணர்ந்த திரு அந்தோணி ராஜ், தம்மைவிட சிறந்த வாய்ப்புகளைத் தமது மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர விரும்பி கபடியை அவர்களுக்குக் கற்றுத்தர முனைந்தார்.
சிங்கப்பூர் கபடி சங்கத்தின் ‘கபடியின்வழி கலாசாரம்’ என்ற 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இரண்டு தேசிய போட்டிகளில், 2022ல் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி கலந்துகொண்டது.
தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி மலாய், சீன மாணவர்களையும் இதில் ஈடுபடுத்திய இவர், பயிற்சி செய்வதற்கு குறுகிய காலமே இருந்தபோதிலும் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியும் ஊக்கமும் அளித்தார்.
போட்டியின் முடிவில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் இரண்டாம் பரிசையும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசையும் சுவா சூ காங் பள்ளி மாணவர்கள் வென்றனர். அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு நடைபெற்ற போட்டியின் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதல் பரிசை வென்றனர்.
“கபடி போன்ற உடல் சார்ந்த பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடும்போது பன்முகச் சிந்தனை, உடல் ஆரோக்கியம், குழுப்பணி, வீரப் பண்பு முதலியவற்றை வளர்த்துக்கொள்கிறார்கள்,” என்றார் திரு அந்தோணி ராஜ்.

