தொழில்நுட்பத்தின் கதைசொல்லி
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தானியக்கமாக்கல் துறையில் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளவர் 34 வயது லாவண்யா கார்த்திகேயன்.
பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான வொர்க்ட்டோவின் (Workato) தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்திற்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பெண்களில் இவரும் ஒருவர்.
அந்நிறுவனத்தின் மூத்த சமூக, வாடிக்கையாளர் சந்தைப்படுத்தல் துறை மேலாளராகப் பணியாற்றும் இவர், சட்டம் பயின்றவர்.
மக்கள் சார்ந்த பணிகளிலும் மாற்றத்தை உருவாக்குவதிலும் உள்ள ஆர்வத்தால் தொழில்நுட்பத் துறைக்கு மாறினார். இன்று அத்துறையின் சிறந்த ‘கதைசொல்லியாகவும்’, பிரச்சாரகராகவும் திகழ்கிறார்.
“சட்டக் கல்வி எனக்குப் பிரச்சினைகளை அணுகும் தீர்க்கமான பார்வையை வழங்கியது” என்றார் அவர்.
முக்கிய சாதனைகள்
வொர்க்ட்டோ நிறுவனத்திற்காக சிங்கப்பூரில் கல்விப் பங்காளித்துவத் திட்டத்தைத் தொடங்கி, 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஏஐ, தானியக்கத் துறைகளில் பயிற்சி அளிக்க உறுதுணையாக இருந்துள்ளார்.
சிங்கப்பூர் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் (IMDA) இணைந்து, 100க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்ற புதிய மென்பொருள், செயலி அல்லது தீர்வுகளை உருவாக்கும் ஒரு மாத கால ‘தேசிய மேம்பாட்டாளர் சவால்’ (National Developer Challenge hackathon) போட்டியை முன்னின்று நடத்தினார். கிராப், ஐஎம்டிஏ, தேசியப் பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து, ஏஐ ஆற்றல் கொண்ட திறமையாளர்களை உருவாக்கி வருகிறார்.
நிறுவனங்கள் ஏஐ சார்ந்த மாற்றங்களை உள்வாங்கவும், ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற திறமையாளர்களை உருவாக்கவும் லாவண்யா சமூகப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம் என்பது குறியீடுகள் (Coding) மட்டுமல்ல, அது ஒரு மனநிலை என்பதை வலியுறுத்தி வரும் லாவண்யா, “எதிர்காலம் என்பது மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையிலான போட்டி அல்ல; ஏஐ-ஐ வழிநடத்தும் மனிதர்களே எதிர்காலம்” என்பது இவரது நம்பிக்கை.
“ஏஐ-ஆல் மின்னஞ்சல்களை எழுத முடியும், தரவுகளை ஆய்வு செய்ய முடியும், நிரல்களைக்கூட உருவாக்க முடியும். ஆனால் உத்தி, அறநெறி, சூழல் சார்ந்த முடிவுகளுக்கு மனிதனின் பகுத்தறிவு அவசியம். ஏஐ-ஐ எதிர்க்காமல், அதனைத் திறம்பட கையாண்டு, மனிதாபிமானத்துடன் வழிநடத்துபவர்களே எதிர்காலத்தின் மதிப்புமிக்க பணியாளர்களாகத் திகழ்வார்கள்,” என்றார் அவர்.
தொழில்நுட்பத்தின் அம்சங்களைவிட, அதன் பின்னணியில் இருக்கும் வணிக நோக்கம், மனித தாக்கத்தையே அவர் முதன்மையாகக் கருதுகிறார்.
“தொழில்நுட்ப அம்சங்களிலிருந்து சற்று விலகி நின்று, ‘நாம் உண்மையில் எந்தப் பிரச்சினைக்கு, யாருக்காகத் தீர்வு தேடுகிறோம்’ என்று சிந்திக்கும் திறனை சட்டக்கல்வி வழங்கியது. சிங்கப்பூரின் கல்வி முறை தந்த ஒழுக்கமும், பெற்றோரிடமிருந்து கற்ற தொழில்முறை மறுசீரமைப்பும் என்னை முக்கிய ஆளுமையாக வளர்த்துள்ளது என்றார்,” என்றார் லாவண்யா.
சட்ட அறிவையும் தொழில்நுட்பத் திறனையும் இணைத்துச் செயல்படும் லாவண்யா, திறமையைவிட மனப்போக்கே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
கலைஞரின் துணிவையும் மதிப்பையும் உணர்த்துபவர்
சிங்கப்பூர் கலைத்துறையில் தடம் பதித்து வரும் 49 வயது கிரேஸ் கலைச்செல்வி, சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியக் குரலாகத் திகழ்கிறார்.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புகழ்பெற்ற கலைஞரான கிரேஸ் கலைச்செல்வி, நாடகம், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் பங்காற்றி வருபவர். சிங்கப்பூரின் பல பள்ளிகளில் நாடகம், கதைசொல்லல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
எரிக் கூ இயக்கத்தில் இவர் நடித்த ‘மை மேஜிக்’ திரைப்படம், 2008ல் கேன்ஸ் அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுப் பாராட்டைப் பெற்றது. 2001ல் ‘மெக்பெத்’, 2004ல் ‘அன் இன்ஸ்பெக்டர் கால்ஸ்’ (An Inspector Calls), 2008ல் சிங்கப்பூர் கலை விழாவில் அரங்கேறிய ‘ரைனோசரோஸ்’ (Rhinoceros) போன்ற பேசப்பட்ட பல தமிழ் நாடகங்களில் இவர் திறன் வெளிப்பட்டுள்ளது.
மத்திய சேம நிதிக் கழகத்தின் நிலையான பணியைத் துறந்து, வருமானம் நிச்சயமற்ற கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தது இவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்பம்.
கடந்த 2004ஆம் ஆண்டு வேலையை துறந்து, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கடும் போராட்டங்களைச் சந்தித்த கலைச்செல்வி, 2012ஆம் ஆண்டு சிங்கப்பூரின் அனைத்துலக நாடகக் கழகமான ஐடிஐ-இல் (Intercultural Theatre Institute) முறையான நாடகக் கல்வியைப் பயின்றார்.
“நமது பண்பாட்டையும் மரபையும் அறிந்தவர்களே நமது கதைகளை எழுத வேண்டும்,” என்ற உறுதிப்பாட்டுடன், இந்தியக் கலைஞர்களுக்காக 2019ஆம் ஆண்டு ‘பிரவுன் வாய்ஸஸ்’ அமைப்பைத் தொடங்கினார். சமூகத்தில் பேசத் தயங்கும் தலைப்புகளான மனநலம், ஒற்றைத் தாய்மார்களின் சவால்களை மேடை நாடகங்களாகப் படைத்து விவாதங்களை உருவாக்கினார்.
“ஒரு படைப்பு யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பதில் தெளிவு வேண்டும்” என்பது இவரது கொள்கை.
கலைஞர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர், தொடக்ககால நிதி நெருக்கடியின்போது தனது சொந்தச் சேமிப்பிலிருந்து சக கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கி கௌரவித்தார்.
“ஒரு கலைஞரின் நேரத்தை நேரத்தை மதிப்பதே அவருக்குத் தரும் முதல் மரியாதை,” என்பது இவரது தாரக மந்திரம். முழுநேரக் கலைஞராக பல சவால்களை எதிர்கொண்ட கலைச்செல்வி, ஒரு கலைஞன் தனது கலைத்திறனை வளர்ப்பதுடன், நிதி நிலையையும் உடல்நலத்தையும் ஒருசேரத் திட்டமிட்டுப் பாதுகாப்பது அவசியம் என்பதைத் தமது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்கு வலியுறுத்தி வருகிறார்.
நீண்டகால கலைத்துறை அனுபவம் கொண்ட கிரேஸ் கலைச்செல்வி, தற்போது இளம் தலைமுறையினருக்குக் கலை ஆர்வத்தை ஊட்டும் சிறந்த ஆசானாகவும் விளங்குகிறார்.
நடனம் வழி உடல், மன வலிமையை உணர்த்துபவர்
‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளியின் மூத்த நடனக் கலைஞரும் ஆசிரியருமான 60 வயது லட்சுமி கிருஷ்ணன், பரதநாட்டியம் வழியாகப் பெண்களின் வாழ்வியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
14 வயதில் நடனப் பயிற்சியைத் தொடங்கிய இவர், கலையின் மீது கொண்ட ஈர்ப்பால் பத்து ஆண்டுகால அரசுப் பணியைக் கைவிட்டு முழுநேரக் கலைஞரானார்.
இவரது கலைப்பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. கடுமையான முழங்கால், முதுகு காயங்கள் காரணமாக நடனத்தை நிறுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியபோது மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானார்.
எனினும், முறையான உடற்பயிற்சி, சிறந்த வழிகாட்டுதல் துணையுடன் காயம் என்பது கலைக்குத் தடையல்ல என்பதை மெய்ப்பித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளியின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இவர் இயக்கிய ‘டிரான்ஸ்சென்டான்ஸ்’ என்ற நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படைப்பு ஐந்து நடனக் கலைஞர்களின் வாழ்வியலையும், கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையே அவர்கள் காணும் சமநிலையையும் அழகாகச் சொன்னது.
கலைஞர் லட்சுமி, 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்காகச் சிறப்பு நடன வகுப்புகளை நடத்தி வருகிறார்.
“பரதநாட்டியக் கூறுகள், யோகா, காட்சிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வகுப்புகள் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்குகின்றன. இது அவர்களின் உடல்நலத்துடன் மனநலத்தையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது நடனத்தை அனுபவித்து உணர வேண்டும்; அப்போதுதான் வாழ்க்கையின் ஒரு பகுதி முழுமையடைவதை அவர் உணர்வார்,” என்றார் லட்சுமி.
உடல் வலிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அவர், உடல் நலமாக இருந்தாலே எதையும் சாதிக்க முடியும் என நம்புகிறார்.
பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவர், எதையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை அவர்களிடம் விதைக்கிறார்.
“வயது என்பது எண்கள்தான், அதனை வைத்து எவரும் எல்லைகளை வகுத்துக்கொள்ளக் கூடாது,” என்று லட்சுமி பெண்களுக்கு ஊக்கமளிக்கிறார்.

