நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் சிலைகள்

நினைவுகளுக்கு உயிர் கொடுக்கும் சிலைகள்

3 mins read
ebf226fe-7527-49c3-ac81-0dbe5dc30517
‘ஜேஎஸ்ஆர்’ என்ற வணிகப் பெயரில் தெய்வச் சிலைகளையும் மனிதர்கள், செல்லப் பிராணிகளின் சிலைகளையும் செய்து வருகிறார் தஸ்வின்திரன் அஷோகன். - படம்: ஷேக் முகமது சதாத்

பொதுவாக, ஒருவரது நினைவுகளைப் பாதுகாக்க புகைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன. அதனால், புகைப்படங்களைக் காலத்தை உறைய வைக்கும் திறன் கொண்டவை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு.

ஆனால், புகைப்படங்களையும் தாண்டி நினைவுகளைக் கட்டிக்காக்க, சாதாரண மனிதர்களின் முக அமைப்பையும் உணர்ச்சிகளையும் அச்சு அசலாகச் சிலைகளாக வடித்தெடுக்கிறார் தஸ்வின்திரன் அஷோகன், 33.

காலஞ்சென்ற தம் தந்தையை ஒரு சிறிய சிலையாக வடிவமைத்துத் தருமாறு நண்பர் ஒருவர் தன்னை அணுகிய தருணத்தைத் தஸ்வின்திரன் நினைவுகூர்ந்தார்.

“ஒருவரின் முகத்தை வடிவமைப்பதற்கு மிகுந்த துல்லியம் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தவறு அல்லது விடுபடும் ஓர் அம்சம் முழுத் தோற்றத்தையுமே மாற்றிவிடக்கூடும் என்பதால், தொடக்கத்தில் நான் சற்றுத் தயங்கினேன்,” என்றார் அவர்.

இருப்பினும், அந்த நண்பர் தம்மீது வைத்திருந்த நம்பிக்கை ஊக்கமளித்தது என்கிறார் தஸ்வின்திரன். மறைந்த தன் தந்தையின் சிலையைப் பெற்றுக்கொண்டபோது அந்த நண்பரின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது என்றார் அவர்.

“அவர் அடைந்த அந்த மகிழ்ச்சிதான் என்னை மேலும் இந்தத் துறையில் செயல்படத் தூண்டியது,” என்று தஸ்வின்திரன் கூறினார்.

மனித உருவச் சிலைகளைச் செய்வதற்கு முன்பாக, சிறிய அளவிலான இந்து தெய்வச் சிலைகளை வடிவமைத்தே தஸ்வின்திரன் தமது தொழிலைத் தொடங்கினார்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ‘தஸ் ஜேஎஸ்ஆர்’ (Thas JSR) எனும் அவரது இந்தச் சிறு வணிகத்திற்கு அவருடைய மனைவி உமாதேவி தேவராஜு, 33, உறுதுணையாக இருந்து வருகிறார். இதில் ‘தஸ் ஜேஎஸ்ஆர்’ என்பது கடவுள் சிலைகளுக்கானது. அதே வேளையில், மனித உருவச் சிலைகள் ‘ஆரா ஜேஎஸ்ஆர்’ (Aura JSR) என்ற பெயரில் கடந்த மே மாதம் முதல் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வணிகத்தின் நிர்வாகப் பகுதியை உமாதேவி கவனித்துக்கொள்ள, தஸ்வின்திரன் வாடிக்கையாளர் சேவையைக் கவனித்து வருகிறார். தெய்வச் சிலைகளுக்குச் சந்தையில் ஒரு தனித்துவமான தேவை இருப்பதை தஸ்வின்திரன் உணர்ந்தார்.

“எனது நண்பர்கள், குடும்பத்தினர் பலர், தெய்வச் சிலைகளின் முக வடிவமைப்பு சார்ந்து மக்கள் மிகவும் கவனமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அதனால், மக்கள் பார்த்தவுடனேயே மனநிறைவும் மகிழ்ச்சியும் அடையும் வகையில், முறையான, தரம் வாய்ந்த சிலைகளை உருவாக்க விரும்பினேன்,” என்று அவர் விவரித்தார்.

இவர் வடிவமைக்கும் தெய்வச் சிலைகள், வாடிக்கையாளர்களின் வாகனங்கள், வீடுகள், அலுவலக மேசைகளை அலங்கரித்து வருகின்றன. அதுமட்டுமன்றி, வாடிக்கையாளர் ஒருவர் ஒரே மாதிரியான பல தெய்வச் சிலைகளைத் தங்களிடம் வாங்கியதாக கூறினார் தஸ்வின்திரன்.

“அவர் அந்தச் சிலைகளைப் பயன்படுத்தித் தன் பிள்ளைகளுக்கு மகாபாரதக் கதைகளைக் கூறி வந்துள்ளார். இதை அறிந்தபோது, என் சிலைகளுக்குப் பின்னால் இப்படியோர் உன்னதமான பயன்பாடு இருப்பதை எண்ணி வியந்தேன்,” என்றார் அவர்.

மனிதர்கள் மட்டுமன்றி, மறைந்த செல்லப் பிராணிகளையும் அவர் சிலைகளாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். எந்தவொரு வணிகத்தையும் போலவே, தங்களின் இந்தத் தொழில் பயணத்திலும் தஸ்வின்திரன்-உமாதேவி தம்பதியர் சில சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

“அஞ்சலில் சிலைகள் காணாமல் போவது, தயாரிப்பில் ஏற்படும் சில குறைபாடுகள், சக வணிகர்களிடமிருந்து வரும் போட்டி எனப் பல சவால்கள் உள்ளன,” என்கிறார் உமாதேவி.

இருந்தாலும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதைவிட, ஒரு வாடிக்கையாளர் மீண்டும் தன்னிடம் வருவதே, தான் சரியான பாதையில் செல்வதைக் குறிக்கிறது என்று தஸ்வின்திரன் உணர்கிறார்.

“ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு சிலையாவது விற்பனையாகாமல் இருந்ததில்லை. இதை ஒரு பெரும் வரமாகவே கருதுகிறேன்,” என்றார் தஸ்வின்திரன்.

தத்தமது முழுநேர வேலைகளுடன், தங்களின் குழந்தையையும் கவனித்து வரும் தஸ்வின்திரன்-உமா தம்பதியருக்கு, இப்போதைக்கு இத்தொழிலை முழுநேரமாகச் செய்யும் எண்ணம் இல்லை.

“வருங்காலத்தில், எங்கள் மகனின் பெயரில் குழந்தைகளுக்கான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, ‘ஜேஎஸ்ஆர்’ வணிகப் பெயரை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம்,” என்றனர் இந்த இளம் தம்பதியர்.

குறிப்புச் சொற்கள்