அமைதியான மனம், தெளிவான சிந்தனைக்கான புத்தகத் தொகுப்பு

11 நூல்களின் தொகுப்பான ‘உணர்ச்சிசார்ந்த அறிவுத்திறனுக்கான அடித்தளம்’

அமைதியான மனம், தெளிவான சிந்தனைக்கான புத்தகத் தொகுப்பு

படம்: ஜோசஃப் ஆனந்த்

25 May 2026 - 6:00 am

2 mins read

தொழில்துறையைச் செயற்கை நுண்ணறிவு புரட்டி எடுக்கும் காலகட்டத்தில், எந்தத் திசையில் திரும்புவது என்பது குறித்த பதற்றமும் நிலவி வருகிறது.

வழிகாட்டுதல் இல்லாததால் பலர், தங்களின் மதிப்பை நிரூபிக்க, அளவுக்கு அதிகமாக உழைக்கக்கூடும்; பதற்றத்தால் உணர்ச்சிவசப்படக்கூடும்.

தீர்வு உடனே புலப்படாவிட்டாலும் நிதானம் காப்பதே அதற்கான முதல் படி என்று நிர்வாகத்துறை வழிகாட்டி ஜோசஃப் ஆனந்த் தெரிவித்தார்.

தன்னம்பிக்கை, ஆற்றல், ஆளுமைத் திறன் போன்றவற்றை வளர்க்க ஊக்குவிக்கும் நோக்கில் 11 புத்தகங்களை உள்ளடக்கிய தொகுப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

‘உணர்ச்சிசார்ந்த அறிவுத்திறனுக்கான அடித்தளம்’ என்ற தலைப்பில் நூல் தொகுப்பு  வெளியாகியுள்ளது.

அது, நரம்பியல், மனோவியல், தலைமைத்துவ அனுபவம், வாழ்க்கை அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளதாக டாக்டர் ஜோசஃப் கூறுகிறார்.

அந்தப் புத்தகங்கள் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எழுதப்பட்டவை. மொழிநடை எளிதாகவும் வாக்கியங்கள் நினைவில் நிற்கும் வகையிலும் அவை உள்ளன.

சிங்கம், புலியை நேரில் மனிதர்கள் காணும்போது மூளை எப்படிப் பதறுகிறதோ, கடுகடுவெனப் பேசும் வேலையிடத்து மேலதிகாரியைக் காணும்போதும் அதே எதிர்வினையுடன் மூளை செயல்படுவதாக அவர் கூறினார்.

பதற்றத்திலிருந்து கட்டிக்காப்பதற்கு மனம் பண்படவேண்டும் என்பது டாக்டர் ஜோசஃப் ஆனந்தின் நிலைப்பாடு.
பதற்றத்திலிருந்து கட்டிக்காப்பதற்கு மனம் பண்படவேண்டும் என்பது டாக்டர் ஜோசஃப் ஆனந்தின் நிலைப்பாடு. - படம்: ஜோசஃப் ஆனந்த்

“நிதானமாகச் சிந்திக்கப் பயன்படுத்தப்படும் மூளையின் முன்நெற்றிப் பகுதியிலுள்ள ‘ப்ரிஃபிரண்டல் கோர்டெக்ஸ்’ (prefrontal cortex) செயல்பாடு, இத்தகைய நெருக்கடி சமயங்களில் மெதுவடைகிறது. இத்தகைய நேரங்களில் நாம் அவசரத்தில் வார்த்தைகளை விடக்கூடும்,” என்று அவர் கூறினார்.

செயல்பாடுகளை முன்னெடுப்பதற்குச் செயற்கையான அறிவு தேவைப்பட்டாலும், மனித உணர்வுகளுக்கு உரித்தான தனித்தன்மைகளுக்கு அது ஈடுகொடுக்க முடியாது என டாக்டர் ஜோசஃப் கூறினார்.

எனவே, நம் உணர்வுகளை நாம் அறிந்து, எந்தப் பதில் நடவடிக்கை எடுத்தாலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அறிமுக உரையாற்றிய இந்தியச் சமூக ஆர்வலர் ஜாய்ஸ் கிங்ஸ்லி, மிகச் சிறந்த பயணம் மனித மனத்திற்குள் மேற்கொள்ளப்படுவதை டாக்டர் ஜோசஃப்பின் நூல்கள் நினைவுபடுத்துவதாகக் கூறினார்.

காலஞ்சென்ற தமது மனைவி, இறுதிக் காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அதனை நிதானத்துடன் கையாண்டிருந்ததை டாக்டர் ஜோசஃப் நினைவுகூர்ந்தார்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர். செயற்கை நுண்ணறிவின் பேராற்றலை எதிர்கொள்ள மனிதர்களால் உருவாக்கப்படும் வரம்புகளின் தேவை குறித்து அவர் பேசினார்.

“தொடக்கத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட திறன்களைக் கற்கின்றனர். படிப்படியாக மேல்நிலையை அடையும்போது நிர்வாகத் திறன் முக்கியமாகிறது. பிறரை நன்கு புரிந்துகொள்பவர்கள், அவர்களிடமிருந்து நல்ல தரத்தில் வேலையைப் பெற முடியும்,” என்றார் திரு விக்ரம் நாயர்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுமனநலம்ஊக்குவிப்புநூல்