கணவர் இறந்து ஈராண்டுகள் ஆகிய நிலையில் 95 வயதாகும் மூதாட்டி மெடலின் அரிக்கேன் தனியாக வசித்து வருகிறார். முதுமையின் இயலாமையால் அவதியுறும் அவர், முடிந்த வரையில் எவரையும் எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வாழ விரும்புபவர்.
மெடலினின் நான்கு பிள்ளைகளுக்கும் வயதாகிவிட்டது. தங்களைப் பார்த்துக்கொள்ளவே சிரமப்படும் அவர்களால் தாயாரைப் பாரமரிக்க இயலவில்லை.
“என் மகன்களுக்கும் உடல்நலம் சுகமில்லை. அவர்களால் என்னை அடிக்கடி வந்து பார்க்க முடியாது. திடீரென நான் இறந்து விட்டாலும் அண்டை வீட்டார் என் சடலத்திலிருந்து வரும் துர்நாற்றத்தை வைத்துதான் என் மகனிடம் சொல்ல வேண்டும்,” என்றார் மெடலின்.
“மரணமடைந்து யாருக்கும் தெரியாமல், உடல் வீட்டுக்குள் அழுகிப்போகும் சூழல் எனக்கு வேண்டாம். இந்த உலகத்திலிருந்து கண்ணியமாக விடைபெற வேண்டும். எனக்குக் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் உடனிருக்க என் உயிர் பிரிய வேண்டும்,” என்று சோகம் ததும்பிய குரலில் சொன்னார் மெடலின்.
எழுந்து நிற்பதற்கே சிரமப்படும் மெடலினுக்குத் தனியாக வசிப்பது கடினமாக இருந்தபோதிலும் அது ஒருவகையில் நிம்மதியைத் தருகிறது.
சமூக உதவிகள் கிடைப்பதால், குடும்பத்தினரை எதிர்பார்க்காமல் பலவற்றைப் பயமின்றி செய்ய முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
கேன்பராவில் மூத்தோருக்கான ஸ்டூடியோ வீட்டில் வசித்துவரும் அவர், அவசரத் தேவைகளுக்கு மேல் மாடியில் வசிக்கும் மகனைத் தொடர்புகொள்கிறார்.
தனிமை மரணங்கள் அதிகரிப்பு
ஈராண்டுகளுக்கு முன்னர் ஊடகங்களில் குறைந்தது 37 தனிமை மரணங்கள் பதிவாகின. பெருகிவரும் மூத்தோர் எண்ணிக்கை காரணமாக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தனியாக வசிக்கும் மூத்தோர் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் மிகவும் கூடியுள்ளது. 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 11.5 விழுக்காட்டினர் தனியாக வசிக்கின்றனர். புள்ளிவிவரத் துறையின் கணக்கெடுப்பின்படி, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 83,000 மூத்தோர் தனிமையில் வசிக்கும் சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் தங்கள் துணையை இழந்தபின் பெரும்பாலும் மூத்தோர் தனியாக வசிக்கும் நிலை இருந்தது. தற்போது குடும்ப உறுப்பினர்கள் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்த காரணத்தினாலும் வேறு குடும்ப உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினாலும் மூத்தோர் தனியாக வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சுகாதார அறிவியல் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் 100க்கும் குறைவான உரிமை கோரப்படாத சடலங்களைக் கையாள்வதாக ஜனவரி மாதம் வெளிவந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2012 முதல் தேவைப்படுவோருக்கு இலவச இறுதிச்சடங்குச் சேவை வழங்கி வரும் செங் கொங் நலவாழ்வு சேவைச் சங்கம், 2024ல் தனிமையில் இறந்த 270 பேருக்குச் சேவை வழங்கியதாக அதன் தலைவர் கென்னி சிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார். தனிமை இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிய அவர், 2023ல் 190 பேருக்குச் சேவை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
தனித்து வாழும் முதியோரின் மனநலமும் உடல்நலமும்
டான் டோக் செங் மருத்துவமனையில் கவனிப்பு, ஆலோசனைப் பிரிவில் மருத்துவ சமூக சேவையாளரான எஸ்தர் கலைவாணி மைக்கேல், தனியாக மரணமடையக்கூடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்த முதியோர், பெரும்பாலான நேரங்களில் பதற்றமாக இருப்பர் என்று கூறினார்.
தனிமை உணர்வு தீவிரமடையும்போது மூத்தோர் விரக்தி மனநிலைக்குச் செல்வர் என்றார் எஸ்தர். அன்புக்குரியவருடன் தொடர்புகொள்ள விரும்பும்போது, அந்த இணைப்பு இல்லாமல் இருந்தால் அது அவர்களுக்கு இன்னும் அதிக வேதனையைத் தரும்.
மருத்துவ சமூக சேவையாளர்கள் பராமரிப்பு, ஆலோசனை சார்ந்த தொடர்புகளை வளர்ப்பதன் மூலம் தனிமையை எதிர்கொள்ள மூத்தோருக்குக் கைகொடுத்து வருகிறார்கள்.
மூத்தோர் தனியாக மரணமடையக்கூடிய நிலைக்கான காரணங்களை விளக்கிய எஸ்தர், சமூக ஆதரவு இருந்தாலும் தனியாக வாழும் முதியவர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்க 24 மணி நேரம் செயல்படும் ஆதரவுச் சேவைகள் இல்லை என கருதுகிறார்.
குடும்பத்தில் மூத்தோரைப் பராமரிக்கும் பாரம்பரிய நடைமுறை குறைந்து வருவதால், முதியோர் சமூக பராமரிப்பைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது என்று எஸ்தர் சொன்னார்.
துணைவர்கள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து நீண்ட காலம் வாழ்பவர்கள் தனிமையில் இருக்கும் சூழல் எழலாம். சமூக விலகல், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மூத்தோருக்கு நெருங்கிய நண்பர்கள் குறைவாக இருக்கலாம்.
தனியாக இருக்கும் மூத்தோர் உதவியை மறுத்தால் மருத்துவ சமூக சேவையாளர்கள் முதலில் ஒரு நம்பகமான உறவை ஏற்படுத்த முற்படுவார்கள்.
மூத்தோர் உதவியை மறுப்பதற்கான அடிப்படைக் காரணத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்ற எஸ்தர், மூத்தோரின் அச்சங்கள், கடந்த கால அனுபவங்கள் அல்லது அவர்களின் முடிவைப் பாதிக்கும் கலாசார நம்பிக்கைகள் குறித்து கலந்துரையாட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
துடிப்பான மூப்படைதல் நிலையங்கள், மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்புகள், வீட்டு அடிப்படையிலான சேவைகள், மூத்தோர் தலைமுறை அலுவலகம் ஆகியவற்றின் உதவி மூலம் மூத்தோரின் தனிமை மரணங்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் சிறப்பாக உள்ளதாக எஸ்தர் சொன்னார்.
மூத்தோருக்கு உதவும் முதியோர்
முதியோரின் சிரமங்களையும் மன உணர்வுகளையும் உணர்ந்தவரான ஓய்வுபெற்ற தாதியான முத்தையா பார்வதி, தனிமையில் இருக்கும் மூத்தோருக்குக் கைகொடுக்கிறார்.
நாலாண்டுகளாக புளோசம் சீட்ஸ் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளில் உதவி வருகிறார் இந்த 70 வயது தொண்டூழியர்.
மெடலினுக்கு உதவும் பார்வதி, மூத்தோர் பலர் தனிமையில் இருக்க விரும்புவதை அதிகம் கவனித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“பிறருக்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதாலேயே பல முதியவர்கள் தனிமையை விரும்புகின்றனர். ஒரு சிலர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட காரணத்தினால் தனிமையில் உள்ளனர். அதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது,” என்றார் பார்வதி.
தனிமையில் இருக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கும் மூத்தோர் சிலரிடம் அது தவறான எண்ணம் என்று எடுத்துரைக்கும் பார்வதி, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சமூக உதவிகள் பற்றியும் வலியுறுத்தி வருகிறார்.
“மூத்தோர் குறிப்பாக, இந்தியர்கள் தனியாக இருக்கும்போது வீட்டிலேயே முடங்கிவிடுகின்றனர். வெளியில் வந்து துடிப்பான மூப்படைதல் நிலையங்கள் ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். வீட்டுக்குள்ளேயே இருந்தால் எண்ண ஓட்டங்கள் அவர்களைக் கவ்விவிடும்,” என்றார் பார்வதி.
தனியாக வசிக்கும் மூத்தோருக்கு அண்டை வீட்டார் உறவு மிக முக்கியம் என்பதை வலியுறுத்திய பார்வதி, தமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனியாக வசிக்கும் தமது முன்னாள் அண்டை வீட்டாருக்கும் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் துணையாக இருந்து வருகிறார். அவருக்கு உணவு சமைத்துத் தருவது, அவரைப் பராமரிப்பது என பல்வேறு வகைகளில் உதவி புரிகிறார்.
“அண்டை வீட்டார் யாராவது தனிமையில் இருந்தால் முடிந்தளவில் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். அவர்கள் தயங்கினாலும் நாம் முன்வந்து அவர்களைக் கண்காணிப்பது அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்,” என்று பார்வதி கூறினார்.
தொடர்பு வட்டத்தைப் பெருக்கும் சமூக நிகழ்வுகள்
தோ பாயோவில் ஓரறை வீவக வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் 91 வயது பாலசுப்பிரமணியம் திருமணம் செய்துகொள்ளவில்லை. பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் இறந்துவிட்டனர்.
மூப்படைதல் வாழ்வின் ஒரு பகுதி என்று கூறும் அவர், அதை நல்ல முறையில் கடந்து செல்ல வேண்டுமென விரும்புகிறார். இன்பமான வாழ்க்கைக்கு நண்பர்கள் வேண்டும் என்று கருதும் பாலசுப்பிரமணியம் தனிமையை வெறுக்கிறார்.
அவரது அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் இருக்கும் கேர் கார்னர் துடிப்பான மூப்படைதல் நிலையத்தில் உதவி பெறும் அவர், இன்னும் கூடுதலான தொண்டூழியர்கள் உதவியும் நண்பர்களும் வேண்டுமென விரும்புகிறார்.
தமிழர் பேரவையின் ‘புரோஜெக்ட் துணை’ திட்டம் மூலம் கடந்த ஆறு மாதங்களாக ஒரு தொண்டூழியர் அவர் வீட்டுக்கு அவ்வப்போது வந்து உதவி புரிகிறார்.
“பராமரிப்புத் தேவைகளுக்கு அளவே இல்லை. அவசரத்துக்கு யாரை அழைப்பது என எனக்குத் தெரியவில்லை. மருத்துவரைப் பார்க்கச் செல்வதற்குத் துணைக்கு வர, தொண்டூழியர் கிடைப்பது சிரமமாக உள்ளது,” என்றார் அவர்.
அண்மைக் காலமாக தோ பாயோ சமூக மன்றம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தும் ‘கரவோக்கே’ பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கியுள்ள திரு பாலசுப்பிரமணியம் முடிந்த அளவிற்கு ஏதாவது ஒன்றில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார்.
தமிழர் பேரவையின் ‘துணை’ திட்டம்
தமிழர் பேரவை அமைப்பு தனியாக வசிக்கும் தமிழ் மூத்தோருக்கு கைகொடுக்கும் விதத்தில் ‘புரோஜெக்ட் துணை’ எனும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.
பல சமூக சேவை அமைப்புகள் அத்தகைய மூத்தோருக்கு உதவி வந்தாலும் மூத்தோர் பலர் அவர்களின் தாய்மொழியில் பேசுபவர்களிடமே மனம் விட்டுப் பேச விரும்புகின்றனர் என்பதைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தை தமிழர் பேரவை தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தில் இருக்கும் தொண்டூழியர்கள் பலர் மூத்தோர் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். நேரம் கிடைக்கும்போது அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிக்கின்றனர்.
“மூத்தோர் பலர் தொண்டூழியர்களிடம் அவர்களின் கவலைகளையும், தேவைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். தொண்டூழியர்கள் அதை தக்க சமூக ஊழியர்களிடம் தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தருகிறார்கள்,” என்றார் திட்டத்தை வழிநடத்தும் பிரியா ரவி, 27.
பல சமூகப் பங்காளிகளை இணைக்க இருக்கும் இத்திட்டம், இன்னும் அதிகமான தொண்டூழியர்களை வரவேற்கிறது.
சமூக ஆதரவு
முதுமையில் உடல் அசைவுகள் குறைவதால், உடல்நலமும் குன்றத் தொடங்குகிறது. அதனால் முதியவர்களுக்கு வெளியில் அதிகம் செல்ல விருப்பம் இருக்காது என்று கேர் கார்னர் மூத்தோர் சேவைகளின் நிலைய மேற்பார்வையாளர் மேவிஸ் சான் சொன்னார்.
கேர் கார்னர் துடிப்பான மூப்படைதல் நிலையங்களில் மூத்தோருடன் நட்புறவு கொள்ளும் சேவைகள் உள்ளன. குறிப்பாக, தனியாக அல்லது தனியாக இருப்பதற்கான அபாயத்தில் இருக்கும் மூத்தோருக்கு உதவும் வகையில் தொண்டூழியர் ஒருவர் அத்தகைய மூத்தோருடன் அதிக நேரம் செலவிடுவார்.
இத்தகைய உதவிகளை நாடத் தயங்கும் மூத்தோரை சமூக சேவை நிலைய நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மூத்தோர்களிடையே தனிமை மரணங்களை தவிர்ப்பது கடினமான ஒன்றானாலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மேவிஸ் குறிப்பிட்டார்.
வெவ்வேறு வகையான மனநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மூத்தோர் சிலருக்குத் தனியாக இருப்பது போன்ற எண்ணம் எழலாம். சிலர் தங்களின் எண்ணவோட்டங்களை பிறரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
சமூகத் திட்டங்கள் மூலம் அத்தகையோர்க்கு உதவுவதாக மேவிஸ் கூறினார். தயங்காமல் உதவி கேட்கவும் மூத்தோரை ஊக்குவிப்பதாக மேவிஸ் சொன்னார்.
தனிமையைப் போக்கும் நடவடிக்கைகள்
அல்ஜுனிட் வட்டாரத்தில் மூன்றரை வீட்டில் வசிக்கும் குழந்தை மேரி, முதுமையை மிக மகிழ்ச்சியாகக் கழிப்பதாக 70 வயதுகளில் இருக்கும் அவர் ஆனந்தத்துடன் சொன்னார்.
இரண்டு மகள்கள் இருந்தாலும் தனியாக வசிக்கவே அவர் விரும்புகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றிவந்த மேரி, அண்மைய காலமாக மூட்டு வலியினால் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறார்.
இயன்றவரையில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட மேரி, அல்ஜுனிட்டில் உள்ள மெத்தடிஸ்ட் சமூக நலச் சேவைகளின் துடிப்பாக மூப்படைதல் நிலையத்தில் இருக்கும் பெரும்பாலான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.
“இறுதிக் காலத்தை நெருங்கி விட்டேன். இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை. இறப்பின்போது தனியாக இருந்தால் என்ன, மற்றவர்களை அண்டி வாழ்வதற்குப் பதிலாக தனியாக இருப்பதே மேல்,” என்றார் மேரி.
காலையில் உடற்பயிற்சி, பிற்பகலில் மூப்படைதல் நிலையத்தில் மற்றவருடன் நேரம் செலவிடுவது என அவர் தம்மை எந்நேரமும் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்கிறார்.
துணிவோடு வாழ்ந்தாலும் வருத்தமும் உள்ளது
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்துவரும் 75 வயது சரோ சாரா சின்னம்மா கந்தன், தைரியத்துடன் தனிமையை எதிர்நோக்கினாலும் தன் நிலை குறித்த வருத்தம் அவருக்கு உள்ளது.
பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்த அவர் கீழே விழுந்து காலில் அடிபட்டு, தற்போது சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடுகிறார்.
சரோ சாரா திருமணம் செய்துகொள்ளவில்லை. தம் தாயார் இருக்கும் வரை அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த சரோ சாராவுக்கு, மறைந்த அவரது அண்ணனின் மகன் ஆதரவாக இருக்கிறார். எனினும் அவரால் அடிக்கடி வந்து முழுநேரப் பராமரிப்பை வழங்க முடியவில்லை.
முதுமைக் காலத்தில் துடிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருக்கும் அவர், சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடினாலும் புளோசம் சீட்ஸ் மூத்தோர் பராமரிப்புச் சேவை நிலைய நடவடிக்கைகளில் கலந்துகொள்கிறார்.

