செம்பவாங் கம்பத்தில் தமது இளம்பருவத்தைத் திருமணம் வரை கழித்த திருவாட்டி சுபாஷினி குமார், அதை ஆவணப்படுத்தும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதி அண்மையில் வெளியிட்டார்.
அந்தப் புத்தகம் சிங்கப்பூர் தேசிய தினத்திற்கு ஒரு வாரம் முன்னர்தான் வெளியீடு கண்டது.
சிங்கப்பூரின் மூத்த குடிமக்களில் ஒருவரான 75 வயதாகும் திருவாட்டி சுபாஷினி, எஸ்ஜி60ஆம் ஆண்டில் தனது புத்தகம் வெளியானதை எண்ணி நெகிழ்கிறார்.
தம் கணவருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக எரிச்சலடைந்த சுபாஷினி தனது வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுத முடிவெடுத்தார்.
புத்தகத்தின் தலைப்பு, ‘பெட்டர் ஆஃப் டெட்’. அதன் அர்த்தம் உயிருடன் இருப்பதற்குப் பதிலாக இறப்பதே மேல் என்பதாகும்.
கணவருடன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வாழ்ந்த சுபாஷினியால், 15 ஆண்டுகளுக்கு முன்னர், கணவர் தன்னுடன் சண்டை போட்டுவிட்டு, கதவை ஓங்கி சாத்திய தருணத்தை இன்னும் மறக்கமுடியவில்லை.
கணவர் தன்மீது இந்த அளவுக்குச் சினத்துடன் நடந்துகொண்டதை எண்ணி வருந்திய சுபாஷினி, தனது 60ஆம் வயதில் புத்தகம் எழுதும் பயணத்தில் இறங்கினார்.
அந்தத் தருணத்தில் சுபாஷினிக்கு உயிருடன் இருப்பதற்குப் பதிலாக மாண்டுவிடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதனால்தான் புத்தகத்திற்கு அந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
“கணவர் என்னிடம் அவ்வாறு நடந்துகொண்ட போது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவர் இவ்வளவு மோசமாகக் கோபம் அடைந்து நான் பார்த்ததில்லை. என் சினத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடிவெடுத்தேன்,” என்று சொன்னார் சுபாஷினி.
புத்தகம் எழுதும் பயணம் தொடங்கியதும் கணவருடன் ஏற்பட்ட சண்டைக்கு அப்பாற்பட்டு சுபாஷினிக்கு இளம்பருவ கசப்பான சம்பவங்களும் நினைவுக்கு வரத் தொடங்கின.
சுபாஷினிக்கு இரண்டு மூத்த சகோதரர்கள். வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் தனது இளம்பருவம் துயரமாக இருந்ததாக சுபாஷினி நினைவுகூர்ந்தார்.
தனது வாழ்க்கை கதை கரடுமுரடாக இருந்ததாகவும் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதைக் கதையில் உள்ளடக்கியுள்ளார் சுபாஷினி.
“என் தந்தை வீட்டில் கடுமையாக இருப்பார். எங்களுக்குச் சுதந்திரம் இருக்காது. பள்ளி, வீடு என்றுதான் என் வாழ்க்கை ஓடியது,” என்று நினைவுகூர்ந்தார் சுபாஷினி.
கணவர் தன்னிடம் அன்பு காட்டிய பின்னர் தனது பெற்றோரிடம் தன்னை மணமுடிக்க சம்மதம் கேட்டதாகக் கூறிய சுபாஷினி, திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இருந்த வாழ்க்கை சுமுகமாகச் சென்றாலும் தான் அதிக நேரம் தனிமையில் வாடியதாகத் தெரிவித்தார்.
“என் பெற்றோர் மிகவும் அன்பான இணையர்கள். அவர்களைப் பார்த்து வளர்ந்ததால் எனது திருமண வாழ்க்கையும் அவ்வாறே இருக்கும் என கனவுக்கோட்டை கட்டினேன்,” என்றார் சுபாஷினி.
கதையில் சிங்கப்பூரின் வரலாறு நிறைந்துள்ளதாகக் கூறிய சுபாஷினி, மூத்த தலைமுறையினர் சிங்கப்பூரை கடும் உழைப்புடன் செதுக்கியதாகவும் கூறினார்.
எதிர்பாராத இன்னல்களிலிருந்து மீண்டு வந்து எல்லாவற்றையும் கடந்து நின்றதை தனது கதை காட்டியுள்ளதாகப் பகிர்ந்துகொண்ட சுபாஷினி, பழைய சிங்கப்பூரை நினைத்து தான் பெரிதும் ஏங்குவதாகச் சொன்னார்.
“அண்டை வீட்டாருடன் நெருங்கிப் பழகுவது, மரங்கள் ஏறுவது, பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது போன்ற நினைவுகள் என் மனத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்துள்ளன,” என்று புன்முறுவலுடன் கூறினார் சுபாஷினி.
கதை எழுதும்போதும் புத்தகம் வெளியீடு கண்ட பின்னரும் தான் தேம்பி தேம்பி அழுததாகச் சொன்ன சுபாஷினி, இந்த ஆண்டு எஸ்ஜி 60ஆம் ஆண்டு என்று தெரியாமலேயே புத்தகத்தை வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான சுபாஷினிக்கு இந்தப் பயணத்தில் பக்கபலமாக நின்றது அவரது மூத்த மகன்.
இந்த 60 ஆண்டுகளில் சிங்கப்பூர் அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளதாகப் பெருமிதம் கொண்ட சுபாஷினி, இந்தப் புத்தகத்தை எதிர்காலத்தில் தனது பேரப்பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல முடிவெடுத்துள்ளார்.

