புக்கிட் பாத்தோக் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் கீழ்த்தளத்தில் முன்பு ஓராண்டுகாலம் ஆதரவற்று தங்கியிருந்த 50 வயது ஜேகேயின் (உண்மைப் பெயரன்று) தலைக்கு மேல் இன்று நிரந்தர கூரை உண்டு.
“கனமழையிலும் குளிர்காற்றிலும் போர்வைகூட இல்லாமல் நடுங்கிய இரவுகளும் முன்பு இருந்தன,” என நினைவுகூர்ந்தார் ஜேகே.
வாழ்க்கையில் எதிர்கொண்ட பல இன்னல்களால் திக்கற்றிருந்த ஜேகேக்குக் கைகொடுத்தது சமூக சேவை அமைப்புகளால் நடத்தப்படும் ஒற்றையருக்கான ஒருங்கிணைந்த வீட்டுத் திட்டம் (Joint Singles Scheme Operator-Run, ஜேஎஸ்எஸ் - ஓஆர்).
“அப்போது வீடு, வாசல் இல்லை. குடும்பத்தினருடனும் தொடர்பில்லை,” என்ற ஜேகே, இன்று ஜேஎஸ்எஸ் - ஓஆர் திட்டத்தின்கீழ், உட்லீ லிங்க் ஓரறை வீட்டில் தங்கிவருகிறார்.
குற்றம் புரிந்ததற்காக விதிக்கப்பட்ட மூவாண்டுச் சிறைத் தண்டனை, ஜேகேயின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.
“என் பத்து வயது மகள் இப்போது எங்கே இருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவரைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன,” என வேதனையுடன் கூறினார் ஜேகே.
தண்டனைக் காலம் முடிந்து 2022ல் விடுதலையான ஜேகே புது மனிதனாக மாற முடிவெடுத்து, விநியோக ஊழியர், கழிவறை துப்புரவுப் பணியாளர் என அவ்வப்போது கிடைத்த வேலைகளைச் செய்தார்.
ஈட்டிய வருமானம் போக்குவரத்து, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கே போதவில்லை. இதில் எப்படி வாடகை கொடுப்பது என்றெண்ணி, வீவக புளோக்கின் கீழ்த்தளத்தில் ஜேகே தஞ்சமடைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
நம்பிக்கை தந்த ‘நியூ ஹோப்’
ஜேகேமீது இரக்கப்பட்ட வழிப்போக்கர்கள் சிலர் ஃபெய் யுவெ (Fei Yue) சமூக சேவைகள் அமைப்பை அணுகும்படி அறிவுறுத்தினர். அதன்வழி அவர் நியூ ஹோப் (New Hope) சமூக சேவைகள் அமைப்புக்கும் அறிமுகமானார்.
நியூ ஹோப் அமைப்பு ‘டிரான்சிட் பாயின்ட் @ ஜாலான் குக்கோ’ எனும் அதன் தற்காலிகத் தங்குமிடத்தில் ஜேகேயைத் தங்கவைத்தது. மூன்று அறைகள் கொண்ட கழக வீட்டில் ஆறு பேருடன் ஜேகே கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தங்கினார்.
அங்கிருந்து அவர் ஜேஎஸ்எஸ் - ஓஆர் வீட்டில் சேர்க்கப்பட்டார். 2021ல் தொடங்கிய ஜேஎஸ்எஸ் - ஓஆர் திட்டத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஒற்றையருக்கான வாடகை வீடுகளை நிர்வகிக்க சமூகச் சேவை அமைப்புகளை நியமிக்கிறது.
அவ்வாறு நியமிக்கப்படும் அமைப்புகள் அந்த வீடுகளில் குறைந்த வருமான ஒற்றையர்கள் தங்குவதற்கு உதவுகின்றன. அவர்கள் தங்களுடன் தங்க மற்றோர் ஒற்றையரைக் கண்டுபிடிக்க அவசியமில்லை. அந்தப் பொறுப்பை வாடகை வீடுகளை நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்புகளே ஏற்கின்றன.
நியூ ஹோப் சமூக சேவைகள் அமைப்பு உட்லீ லிங்க், புக்கிட் பாத்தோக், செங்காங் வெஸ்ட் ஆகிய மூன்று இடங்களில் வீடுகளை நிர்வகிக்கிறது.
அப்படியொரு வீட்டில் 200 வெள்ளிக்கு உட்பட்ட மாத வாடகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடியிருக்கிறார் ஜேகே.
மொத்தம் ஆறு இடங்களில் ஜேஎஸ்எஸ்-ஓஆர் வீடுகள் உள்ளன. மற்ற மூன்று இடங்களில் உள்ள வீடுகளை மற்ற சமூக சேவைகள் அமைப்புகள் நிர்வகிக்கின்றன.
தங்குவதற்கு ஓர் இடம் கொடுப்பது மட்டுமன்றி நிரந்தர வேலையையும் ஜேகேவிற்குப் பெற்றுத் தந்தது நியூ ஹோப் அமைப்பு.
‘சொரியோசிஸ்’ தோல் பிரச்சினையால் கழிவறையைத் துப்புரவு செய்யும் வேலையை ஜேகே நிறுத்தினார்.
“அதன் பிறகு ஆறு மாதங்கள் எந்த வேலையும் கிடைக்கவில்லை,” என்ற ஜேகேவிற்கு நியூ ஹோப் அமைப்பின் பயிற்சியாளரின் உதவியோடு ஒரு மாதத்திற்குமுன் சிராங்கூன் நெக்ஸ் கடைத்தொகுதியில் உணவுக்கடைத் துப்புரவாளர் பணி கிடைத்தது. அங்கு வாரத்தில் ஆறு நாள்கள், ஐந்து மணி நேரம் பணியாற்றும் அவர் அன்றாடம் $30 முதல் $40 வரை சம்பாதிக்கிறார்.
மின்னிலக்கத் திறன் மேம்பாடு
நியூ ஹோப் தன் தற்காலிகத் தங்குமிடங்களிலும் தனது நிர்வாகத்தின்கீழ் உள்ள பொது வாடகை வீடுகளிலும் தங்கியிருப்போரின் மின்னிலக்கத் திறன்களை வளர்க்கவும் கைகொடுக்கிறது.
தற்போது சிங்கப்பூர்க் கணினிச் சமூக இளையர், ‘இஞ்சினியரிங் குட்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நியூ ஹோப் பயிலரங்குகளை நடத்துகிறது. அவற்றின்வழி பயனடைந்தவர்களுள் ஜேகேயும் ஒருவர்.
2023 நவம்பரில் 15 பயனாளிகளுடன் தொடங்கிய ஒன்பது வார முன்னோடித் திட்டத்திலிருந்து முன்னேறி இன்று கிட்டத்தட்ட 35 பயனாளிகள் ஒவ்வொரு பயிலரங்கிலும் கலந்துகொள்கின்றனர். நியூ ஹோப் அமைப்பு சனிக்கிழமை (ஏப்ரல் 12) வேலைவாய்ப்புக் கண்காட்சியையும் நடத்தியது.
“இத்திட்டத்தில் பங்கேற்கும் பலருக்கும் முன்பு கணினிப் பயிற்சி இருந்ததில்லை. அதனால் அவர்கள் இணையச் சேவைகளிலும் வேலைக்கு விண்ணப்பம் செய்வதிலும் சிரமப்படுகிறார்கள்,” என்றார் ‘இஞ்சினியரிங் குட்’ நிறுவனத்தின் நிதி திரட்டு, பங்காளித்துவ நிர்வாகி ஸ்மிதா கணேஷ், 42. நன்கொடையளிக்கப்பட்ட மடிக்கணினிகளைப் புதுப்பிக்கும் ‘இஞ்சினியரிங் குட்’, அவற்றை இப்பயிலரங்குகளுக்காக இரவல் வழங்குகிறது.
“மடிக்கணினியின் அடிப்படை அம்சங்கள், கணினி, கைத்தொலைபேசிச் செயலிகள், மோசடித் தடுப்பு உத்திகள், தன்விவரக்குறிப்பு (CV) தயாரித்தல் போன்றவற்றை இப்பயிலரங்குகளில் கற்பிக்கிறோம்,” என்றார் சிங்கப்பூர்க் கணினிச் சமூக இளையர் பிரிவு உறுப்பினர் சுப்பையன் அகத்தியன், 19.
என்றாவது ஒரு நாள் தன் மகளை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்; அப்பொழுது தான் சம்பாதித்த பணத்தையும் திறன்களையும் கொண்டு அவருடைய எதிர்காலத்துக்கு உதவ முடியும் என்ற நம்பிக்கையில் ஜேகே தொடர்ந்து தம்மை மேம்படுத்திவருகிறார்.
“எங்களால் பயனாளிகளுக்கு நிரந்தரமாக உதவ முடியாது. ஆனால், அவர்களைச் சொந்த காலில் நிற்க வைக்க உதவ முடியும்,” என்றார் நியூ ஹோப் வேலைப்பயிற்சி ஆலோசகர் ஸ்டான்லி.
“நானும் முயற்சி செய்ய வேண்டும். செய்வேன் செய்வேன் எனச் சொல்லி ஒன்றும் செய்யாமலிருந்தால் யாரும் எனக்கு வந்து ஊட்டிவிடமாட்டார்கள்,” என்றார் ஜேகே.

