லிஷா இலக்கிய மன்றமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் இணைந்து நடத்திய பொங்கல் பட்டிமன்றம் இம்மாதம் 13ஆம் தேதி கேம்பல் லேனில் உள்ள பொங்கல் திருவிழா மேடையில் நடந்தேறியது. 'தமிழர்களின் பண்பாடு, கலை இலக்கியம் இன்று தளர்கிறதா? வளர்கிறதா?' என்ற தலைப்பையொட்டி வளர்கிறது, தளர்கிறது ஆகிய இரு அணிகளிடையே விவாதம் நடத்தப் பட்டது. இப்போட்டிக்கு தமிழகத்தின் புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் திரு மணிகண்டன் நடுவராக இருந்தார். 'வளர்கிறது' அணிக்கான பேச்சாளர்களாக ரம்யா சுரேஷ், ராம்குமார் சந்தானம், கண்ணன் சேஷாத்ரி ஆகியோர் பேசினர். 'தளர்கிறது' அணியில் இருந்த பேச்சாளர்கள் ராஜேஷ்குமார் தர்மலிங்கம், அகிலா ஹரி ஹரன், முனைவர் ராஜி சீனி வாசன். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் என்.ஆர். கோவிந்தன் கலந்துகொண்டார். "சுமார் 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் முன்னிலையில் சுமார் மூன்று மணி நேரத் திற்கு, பட்டிமன்றம் தொய்வின்றி நடைபெற்றது," என்றார் 'வளர்கிறது' அணியின் பேச்சாளர் திருமதி ரம்யா சுரேஷ். நிகழ்ச்சியில் பேச்சாளர்களின் கருத்துகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. 'வளர்கிறது' அணியில் பல சிறந்த கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சிங்கப்பூர் தாய்மொழி கற்றல் வாரத்தின் சிறப்பும் பட்டிமன்றத்தில் எடுத்துரைக்கப் பட்டது. அத்துடன் ஆப்பிரிக்காவில் பொங்கல் திருவிழா அரசாங்கப் பண்டிகையாக கொண்டாடப்படுவது பற்றியும் பொங்கல் விழா இன்றுவரை குத்துவிளக்கு ஏற்றி, கோலங்களில் நல்வரவு எழுதப்பட்டு கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றியும் நகைச் சுவையுடன் கலந்த பாணியில் கூறப்பட்டது. 'தளர்கிறது' அணியிலும் கருத்துகளுக்குப் பஞ்சம் இல்லை. பல்லாங்குழி, பச்சைக்குதிரை போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் இப்போது விளையாடப்படுவதில்லை என்றும் இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் வீட்டிற்குள் நம்மைத் தேடி வந்து கெடுக்கின்றன என்றும் அந்த அணியின் பேச்சாளர்கள் விவாதித்தனர். அத்துடன், நாம் மறந்துப்போன 92 நாட்டு மாடுகளின் சிறப்பையும் அரிசிகளின் அழகிய பெயர்களையும், ஆழையாட்டம், சக்கை யாட்டம், துடுப்பாட்டம் போன்ற மறந்துபோன ஆட்டங்களின் சிறப்பைப் பற்றியும் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த் தினர். இறுதி அங்கமாக பட்டிமன்ற நடுவர் அவரின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். தமிழர்களின் பாரம்பரியம் இன்றுவரை நிலைத்திருக்கிறது என்பதற்கு சான்றாக முத்துராமலிங்கதேவர் வீரன் வாஞ்சி நாதனுக்கு மகனாக மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை எடுத்துரைத்தார். 'கலைவாணர்' என்ற பழங்காலத்து நகைச்சுவை நடிகரின் சொல்லாடல் பற்றியும் அழகாக நினைவுகூர்ந்தார். மற்றோர் உதாரணத்திற்கு அப்துல் கலாம் மாணவர்களுடன் நடத்திய ஒரு கலந்துரையாடலில் கூறிய விஷயங்களையும் அரங்கத்தினருக்கு அவர் விளக்கினார்.
லிட்டில் இந்தியாவில் பொங்கல் பட்டிமன்றம்
2 mins read
கேம்பல் லேனில் உள்ள பொங்கல் திருவிழா மேடையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு பட்டிமன்றத்தில் உரை நிகழ்த்தும் பேச்சாளர் கண்ணன் சேஷாத்ரி. படம்: ரம்யா சுரேஷ் -

