வீட்டுப் பராமரிப்பை இலக்காகக் கொண்ட பராமரிப்பாளர் ஆதரவு செயல் திட்டம்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில், சென்ற ஆண்டு நடந்த தீபாவளி விருந்தில் முதியோர், உதவி தேவைப்படுவோருடன் உரையாடும் திரு முரளி பிள்ளை. கோப்புப் படம். 

பராமரிப்பாளர் சுமை குறைய உதவிகள்
முதியோர், உடற்குறையுள்ளோர், நோயாளிகள் ஆகியோரைப் பராமரித்து வரும் சிங்கப்பூரர்களுக்கு அடுத்த ஈராண்டுகளில் கூடுதல் உதவிகள் கிடைக்கவுள்ளன.
நிதி உதவி,  பராமரிப்பாளர் இடைநேரத்தில் ஓய்வுபெற அதிக தெரிவுகள், உடன்பிறந்தோரின் மருத்துவச் செலவுகளுக்கு மெடிசேவைப் பயன்படுத்தும் வசதி, சுகாதார அமைச்சு பராமரிப்பாளர் ஆதரவுக் கட்டமைப்புகள் விரிவாக்கம், தகவல்கள், சேவைகளைப் பெற உதவும் அதிக சமூகத் தொடர்புநிலைகள்  போன்றவையும் அவற்றுள் அடங்கும். பெரும்பாலான திட்டங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நடப்புக்கு வரவுள்ளன. இச்செயல்திட்டம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் முரளிபிள்ளை, பொதுமக்கள் கருத்துகள் இங்கு இடம்பெறுகின்றன. 

முரளி பிள்ளை, புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர்

குடும்பங்கள் வீட்டில் உள்ள முதியோர்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள ஊக்குவிப்பதே பராமரிப்பாளர் ஆதரவு செயல் திட்டத்தின் முக்கிய இலக்கு. நம் சமுதாயத்தின் பண்புகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் இந்தத் திட்டம் அமைகிறது. ஒரு சமுதாயம் வலுவாக இருப்பதற்கு ஒவ்வொரு குடும்பமும் வலுப்பெற்று ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அது நமது சமுதாயத்தின் ஆணிவேர்.    
முதியோர்களைப் பராமரிப்பு இல்லங்களில் சேர்ப்பதைவிட வீட்டிலேயே வைத்து பராமரிப்பது அடுத்த தலைமுறையினருக்கும் நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.
இந்தப் புதிய செயல் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. 
பராமரிப்பாளர்களுக்கு மேலும் பல வழிகளில் சமூகமும் கைகொடுக்க வேண்டும். புக்கிட் பாத்தோக் தொகுதியில் சமூகத்தின் உந்துதலில் பராமரிப்பாளர்களுக்கு ஆதரவுத் திட்டங்களை செயல்படுத்தி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 
மூப்படையும் சமூகமாக சிங்கப்பூர் இருக்கும் அதேநேரத்தில் சிறிய குடும்பங்களாக சிங்கப்பூர் குடும்பங்கள் சுருங்கி வருகின்றன. இந்த நிலையில் பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படு கிறது. அதனால் இன்னும் அதிக அளவில் சமூக ஆதரவை செயல்படுத்துவது சாலச் சிறந்ததாகும். 
பராமரிப்பாளர் ஆதரவு செயல் திட்டத்தின்மூலம் அரசாங்கத்திற்கு செலவினங்கள் அதிகரிக்கும். 
சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பராமரிப்பாளர் களுக்கு மேலும் அதிக ஆதரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். பராமரிப்பாளர்களுக்கு கூடுதல் ஆதரவு கொடுப்பதால் வேறு மருத்துவ செலவினங்கள் குறையலாம். தாதிமை இல்லங்கள், மருத்துவ நிலையங்களில் முதியோர்களை வைத்து பராமரிக்க ஆகும் செலவுகளைக் குறைக்கலாம்.