பணிப்பெண் அலட்சியம்; பரிதவித்த குழந்தை

பணிப்பெண் அலட்சியம்; பரிதவித்த குழந்தை

6 mins read
339b2f29-4602-4d01-bb9e-d0bfe98742de
-

வேலை நேர்முகத் தேர்வுக்குக் கிளம்பிய யசோதா தமது 2 வயது மகளை வீட்டில் பணிப்பெண்ணிடம் விட்டுச் சென்றார். நேர்முகத் தேர்வுக்காக காத் திருந்த வேளையில் யதார்த்தமாக தமது கைபேசி செயலி வழியாக கண்காணிப்பு 'புகைப்படக் கருவி'யில் கண்ட காட்சி யசோதா வைத் திடுக்கிடச் செய்தது. அதில் பணிப்பெண் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். சில நொடிகள் கழித்து, தூக்கத்தி லிருந்து எழுந்த குழந்தை பணிப் பெண்ணை வீடு முழுவதும் தேடுகிறது, யாரையும் காணாத தால் தேம்பி தேம்பி அழுதவாறு வீட்டைச் சுற்றி வருகிறது. சமையல் அறைக்கு வெளியே ஒரு வாளி நிறைய தண்ணீர் இருந்தது. சமையல் அறை சன்னல் பூட்டப்படவில்லை. வீட்டு வாசல் கதவு பூட்டப்படாமல் உள்ளது. பதற்றமடைந்த யசோதா உடனே கிளம்பத் தயாரானபோது, ஆறு நிமிடங்கள் கழித்து வீடு திரும்பிய பணிப்பெண் அவசரமாக குழந்தையை சமாதானப்படுத்து கிறார். வீட்டில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனைப் பணிப்பெண் மீனாவும் அறிவார் ஆனால் அதனை அடிக்கடி பார்க் கும் பழக்கம் திருமதி யசோதா வுக்கு இல்லை. அன்று தற்செய லாகப் பார்த்த காட்சி யசோதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. அன்று மாலை, திருமதி யசோதாவும் அவரது கணவர் திரு ஜோவலும் பணிப்பெண் மீனாவிடம் குழந்தையைத் தனியே விட்டுவிட்டுப் போனதற்கு விளக்கம் கேட்டனர். ஆனால், மீனா அதுகுறித்து எதுவும் பேசாமல், உடனே "நான் ஊருக்குப் போகிறேன். என்னை அனுப்பிவிடுங்கள்," என்றார். அவர்கள் மீண்டும் கேட்ட போது, ஊருக்குத் திரும்புவதி லேயே மீனா பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வது எனத்தெரியாது திகைத்த யசோதா யோசித்து முடி வெடுக்குமாறு கூறினார். ஆனால் மீனா மனம் மாறுவதாக இல்லை. நிலைமையைப் பணிப்பெண் முகவரிடம் திருமதி யசோதா விளக்கினார். "பணிப்பெண்ணை நீங்களே விமானச் சீட்டு வாங்கி ஊருக்கு அனுப்பிவிடுங்கள்," எனக் கூறிவிட்டார் அந்த முகவர். வேறுவழியில்லாமல், அன்றே மீனாவுக்கு விமானச் சீட்டு வாங்கி னர். மறுநாள் திரு ஜோவல், மீனாவை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மீண்டும் ஒரு சிக்கல். விமான நிலையம் வந்த முகவர் அனுப்பியதாக நம்பப்படும் ஓர் ஆடவர், மீனாவுக்கு சம்பளத்தைக் கொடுக்குமாறு சண்டைபோடும் தொணியில் ஆவேசமாக ஜோவலி டம் பேசினார். ஜோவல் அங்கிருந்த காவல் அதிகாரியிடம் உதவி கேட்டபோது இந்த விஷயத்தில் அவர்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடி யாது என்பது தெரியவந்தது. முகவரோ சம்பளத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று வலியுறுத்தினார். பிரச்சினையை வளர்க்க விரும் பாத ஜோவல், மீனா வேலை பார்த்த 23 நாட்களுக்கான சம்பள மாக $330யை மீனாவிடம் கொடுத்து கையெழுத்து வாங்கிக் கொண்டார். மீனா கிளம்பியபோது, அவரது பயன்பாட்டுக்காக கொடுத்திருந்த கைபேசியை ஜோவல் திரும்ப வாங்கிக்கொண்டார். பின்னர், ஒருநாள் அந்த கைபேசியை ஆராய்ந்த யசோதா அதிலுள்ள ஒரு செயலி மீனாவின் அனைத்து உரையாடல்களையும் பதிவுசெய்திருந்ததை அறிந்தார். அதில் பணிப்பெண் முகவர், மீனாவிடம் கடைசி சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பு என்று கூறுவதும், சிங்கப்பூரில் மீண்டும் வந்து வேலை பார்க்க உதவி செய்ய உறுதி அளிப்பதும் பதிவாகி இருந்தது. இதனைக்கேட்ட யசோதாவுக்கு பலத்த ஏமாற்றம். ஏனெனில் நண் பரால் பரிந்துரைக்கப்பட்ட பணிப் பெண் முகவர் நம்பகத்தன்மையுடை யவர் என்று இதுவரை அவர் நினைத்துக்கொண்டிருந்தார். முதல் பெண் குழந்தை பிறந்த போது, யசோதாவின் பெற்றோர் பிள்ளையைப் பராமரிக்க உதவினர். தமது பெற்றோரும் கணவரின் பெற்றோரும் இரண்டாவது பிள்ளையைப் பார்த்துக்கொள்ள முடியாத பட்சத்தில், பணிப்பெண் அமர்த்த யசோதா முடிவு செய்தார். இரண்டாவது பிள்ளை பிறந்ததி லிருந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளில் அந்த முகவரிட மிருந்து நான்கு பணிப்பெண்கள் யசோதாவின் வீட்டுக்கு வந்து போய் விட்டனர். சொந்த வீட்டில் பிரச்சினை, திருட்டு, அடிப்படையான வீட்டு வேலைகள் தெரியாதது போன்ற காரணங்களால் பணிபெண்களை யசோதா மாற்ற வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் பணிப் பெண்ணை மாற்றும்போது, முக வருக்கு அதிகபட்சமாக $2,200 வரை யசோதா கட்டணம் செலுத்தியதுண்டு. "இருவருமே முழு நேரமாக வேலை செய்கிறோம், நேரப் பற்றாக்குறையினால் ஒரு பணிப் பெண் விலகும்போது உடனடியாகப் பிரச்சினையைத் தீர்ப்பதில்தான் எங்களது கவனம் இருந்தது. ஆதலால் பணிப்பெண்ணை மாற்று வதற்கான கட்டணத்தைப் பற்றி நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. வேறு பணிப்பெண் முகவரைத் தேடும் எண்ணமும் வரவில்லை," என்று ஜோவல் வருத்தத்துடன் குறிப்பிட்டார். வீட்டில் குழந்தையைத் தனி யாக விட்டுவிட்டு சென்றதற்காக பணிப்பெண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என மனிதவள அமைச்சுக்குத் திரு ஜோவல் மின்னஞ்சல் அனுப்பினார். வெளிநாட்டு ஊழியர் ஒருவரை சிங்கப்பூரில் உள்ள வேலை வாய்ப்புகளுக்குத் தவறிழைத்தோர் பட்டியலில் (black-list) சேர்க்க வேண்டுமென்றால், அவர் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சு பதிலளித்தது. போலிஸ் துறையிட மிருந்தும் இதே பதில்தான் கிடைத்தது. "வரும்முன் காப்பதுதானே சரி? என் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதில் மனநிறைவு அடைகிறேன். ஆனால் ஓர் அசம்பாவிதம் நடக்கும் வரையில் ஏன் காத்திருக்க வேண்டும்? அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சட்டநெறிகள் இருக்க வேண்டும்," எனக் கருதுகிறார் 31 வயது திரு ஜோவல். யசோதா தமது கசப்பான அனு பவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளியோடு பதிவேற்றம் செய்ததில் 700க்கும் மேற்பட்டோர் அவரின் பதிவை பகிர்ந்து கொண்டனர். அதில் சிலர் இது போன்ற நெருக்கடிகளைத் தாங்களும் அனுபவித்திருப்பதாகக் குறிப்பிட்டனர். சம்பவம் குறித்து விளக்கம் கேட்க, தொடர்புடைய பணிப்பெண் முகவரை தமிழ் முரசு செய்திக்குழு தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. பணிப்பெண்ணின் தொடர்பும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் யசோதாவின் இரண்டு வயது குழந்தையை மனரீதியாகப் பாதித்துள்ளது. இன்னமும் அவ்வப்போது காரண மில்லாமல் நடு இரவில் எழுந்து குழந்தை அழுவதாக திருமதி யசோதா கூறினார். "மறுபடியும் சிங்கப்பூருக்கு வந்து பணியாற்றுவேன் என எங்களிடம் சவால் விடுத்தார் பணிப்பெண் மீனா. பிள்ளைகளை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு செல்லும் தாய்மார்கள் எச்சரிக்கை யுடன் இருப்பது நல்லது," என்பது 35 வயது யசோதாவின் கருத்து. திருமதி யசோதா தற்போது வேலையை விட்டுவிட்டு முழு நேரமாகப் பிள்ளைகளைப் பராமரித்து வருகிறார்.

தனியே விடப்படும் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் வீட்டில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதில் மிகவும் ஆபத்தானது குழந்தை உடல் காயங்களுக்கு ஆளாவதுதான். ஓடியாடி விளையாடும் குழந்தை கீழே விழுந்து, காயம்படக்கூடும். மேலும், சன்னல் வழியாக கீழே விழுந்து மரணம் நிகழ வாய்ப்புள்ளது. இதில், எவ்வளவு நேரம் குழந்தை தனியாக இருந்தது என்பது பொருட்டல்ல ஏனெனில், ஓர் அசம்பாவிதம் நடக்க சில நிமிடங்களே போதுமானது என்று கூறினார் புரொமிசஸ் (வின்ஸ்லோ) மருந்தகத்தின் மூத்த மனநல மருத்துவ டாக்டர் ஜேக்கப் ராஜேஷ்.

தனியாக இருக்கும் குழந்தையின் மனநிலை சிறு குழந்தைகள் தனியாக இருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் உடனடியாக மிகுந்த பதற்றம் அடைகின்றனர். குறிப்பாக, தூக்கத்திலிருந்து எழும் குழந்தைகள், தெரிந்தவர் யாரும் அருகில் இல்லை என்பதை உணரும்போது மிகுந்த பயமடைவார்கள்.

தனியாக விடப்படும் அல்லது கண்காணிக்கப்படாத பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தனித்து விடப்படும் குழந்தை உணர்வு பூர்வமாகவும் மனரீதியாகவும் பாதிப்படையக் கூடும். இதை அனுபவிக்கும் குழந்தை அளவுக்கு மீறி மற்றவரை சார்ந்திருக்கும் போக்கிற்கு ஆளாகலாம். பயத்தினால் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தலாம். திடீர் திடீரென கண்கலங்கலாம்.

குழந்தைகள் மறந்துவிடுவார்கள் குழந்தைகளுக்கு நினைவுகள் ஆழப்பதி வதில்லை, அவர்கள் சம்பவங்களை எளிதில் மறந்துவிடுவார்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளை மறந்து வழக்கத்திற்குத் திரும்பலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வழிகள் பெற்றோர், குறிப்பாக தாயாரின் பங்கு இதில் முக்கியமானது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும்படி பெற்றோர் குழந்தை களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அந்த சம்பவத்தை நினைவுபடுத்து வதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் இதுவரையில் ஈடுபட்ட வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நண்பரின் வீடு, குழந்தைப் பராமரிப்பு நிலையம் போன்ற புதிய சூழலை உடனடியாக அறிமுகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

பாதிப்படைந்த குழந்தை மீண்டு வருவதற்கு ஆகும் காலம் பாதிப்படைந்த குழந்தைகள் மீண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எளிதில் கணித்துச் சொல்ல முடியாது. ஒவ்வொரு குழந்தைக்கும் இது மாறுபடும். குழந்தையின் மனப்போக்கு, பிரச்சினை களை அக்குழந்தை எதிர் கொள்ளும் திறன், சம்பவத்திற்கு பின் குழந்தையைப் பராமரிப்ப வர்களின் செயல்கள் போன்றவற்றைப் பொறுத்து குழந்தை எவ்வளவு விரைவில் மீண்டு வருகிறது என்பது அமையும். கசப்பான அனுபவத்திலிருந்து மீள் வதற்கு முதலில், குழந்தையின் வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பது முக்கியம்.