தமிழவேள் கோ சாரங்கபாணி சேவையாற்றிய தமிழர் சீர்திருத்தச் சங்கப் பணிகளுக்காக, எண் 125, சிராங்கூன் சாலையில் இருந்த கட்டடத்தையே கொடையாகக் கொடுத்தவர் திரு உ ராமசாமி நாடார் என்று தமிழ் முரசில் அப்போது வெளிவந்த செய்தி களையும் விளம்பரங்களையும் காட்டி, ஆய்வு மூலம் திரட்டிய தகவல்களைத் தமது கன்னி மேடைப் பேச்சில் வெளியிட்டார் இலக்கியா மதியழகன். திரு உ ராமசாமி நாடாரின் மகள் வழி பேரனான தமிழ்த் திரைப்பட நடிகர் சரத்குமார் தனது தாத்தாவைப் பற்றிக் கூறிய தகவல்களை காணொளி மூலம் காண்பித்தார் என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் ஆண்டு பயிலும் இலக்கியா. தமிழ்மொழி விழாவின் அங்கமாக தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த தமிழவேள் முப்பெரும் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்திய மரபுடைமை நிலையத்தில் நடை பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த ஈரோடு தமிழன்பன் உட்பட சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என சுமார் 150 பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் இலக்கியா உட்பட இளையர்கள் மூவர் தமிழ்ச் சமூகத் தின் முன்னோடிகள் மூவரைப் பற்றி ஆய்வுரையாற்றினர். அதற்கு பலரிடயே நல்ல வரவேற்பு கிட்டியது. சமூகத்தில் நிலவிய பிரச்சினை களைத் தீர்க்கும் தலைவராக இருந்தவர் நாராயண பிள்ளை. அதைப்போல தமிழ்ச் சமூகத்தில் நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்று கூறினார் அருண் வாசுதேவ் கிருஷ்ணன்.
சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ் உடன் 1819ல் சிங்கப்பூருக்கு வந்த இந்நாட்டின் முதல் தமிழர் என்று போற்றப்படும் நாராயண பிள்ளை பெரும் வணிகராகவும் தமது சமூக சேவையால் தலைவராகவும் சமூகப் பிரச்சினைகளுக்கான போராளியாகவும் இருந்தார் என்று ஆய்வில் தாம் திரட்டிய தகவல் களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார் தமிழர் பேரவை இளை யர் பிரிவின் தலைவர் அருண். 'மலாயாப் பெரியார்' என்று போற்றப்படும் அ சி சுப்பய்யாவைப் பற்றி நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவர் அரு சுப்பு அடைக்கலவன் பேசினார். கொடையாளராகவும் தொண்ட ராகவும் செல்வந்தராகவும் திரு அ சி சுப்பய்யா புகழ் பெற்றவர் என்று கூறினார் சுப்பு அடைக்கலவன். "தமிழ் நிகழ்ச்சிகளில் இளை யர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வதுடன் ஆய்வு மூலம் திரட்டிய தகவல்களையும் பகிர்ந்துகொள்வது சிறப்பு," என்று விழாவிற்கு தலைமை வகித்த முனைவர் சுப திண்ணப்பன் கூறினார். சிறப்பு விருந்தினர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர் தினகரன் 'தமிழவேள் சிறப்புரை' ஆற்றினார்.

