கை, கால் இழந்தும் வாழ்ந்து காட்டும் தாய்

கை, கால் இழந்தும் வாழ்ந்து காட்டும் தாய்

6 mins read
2193a672-603f-417f-aa49-da23c54d5675
தமது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் திருமதி ரேணுகா வடிவேலு. படம்: தமிழ் முரசு -

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு 56 வயது திருமதி ரேணுகா வடிவேலுவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.

ஆஸ்துமாவினால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட திருமதி ரேணுகா, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகள் காரண மாக தமது கைகளையும் கால் களையும் இழந்தார்.

திருமதி ரேணுகாவுக்கு ஆஸ்துமா மட்டும் ஏற்படவில்லை என்றும் அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ரத்தத் தில் கிருமிகளின் அளவு அதிகரித்துக் கொண்டிருப்பதால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்ப தாகவும் அவரது குடும்பத்தினரிடம் கூ டெக் புவாட் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து, திருமதி ரேணுகா உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைய, அவரை கோமா நிலையில் வைத்து சிகிச்சை அளித்தனர் மருத்து வர்கள்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங் களில் அவரது உடலுறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. இதயத் துடிப்பும் சீரற்றுப் போனது.

இதே நிலை நீடித்தால் அவர் இன்னும் மூன்று மணி நேரத்துக்குத்தான் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

எனவே திருமதி ரேணுகாவின் உடலுக்குள் வீரியமிக்க மருந்துகள் செலுத்தப்பட்டன.

அவரது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அவரது உயிரைக் காப்பாற்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அவரது உடலுக்குள் செலுத்தப்பட்ட மருந்துகள் ரத்தக் குழாய்களைக் குறுகியதாக்கி கைகள், கால்களில் 'கெங்கிரின்' எனப்படும் சதை அழுகல் நோய் ஏற்படும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால் அதற்கான சாத்திக்கூறுகள் மிகவும் குறைவு.

மூன்று வாரங்கள் கழித்து திருமதி ரேணுகாவுக்கு சுய நினைவு திரும்பியது. அப்போது அவர் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது.

"எனது கைகளும் கால்களும் நிலக்கரியைப் போல கறுப்பாக இருந்தன. எனது விரல்களை மட்டும் என்னால் இலேசாக நகர்த்த முடிந்தது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக எனது தொண்டையில் துளையிடப்பட்டிருந்தது.

"பேச முடியவில்லை, உடல் உறுப்புகள் செயலிழந்துகொண் டிருந்தன, ரத்த ஓட்டம் இல்லாத தால் அழுகிய நிலையில் கைகள். எனக்கு ஏன் இந்த கொடுமை என்று எனது மனம் கதறியது. அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றம் எனக்கு ஏற்பட்டது," என்றார் திருமதி ரேணுகா.

தாதியாகப் பணிபுரிந்த அனு பவம் கொண்ட திருமதி ரேணு காவுக்கு அடுத்து என்னென்ன நடக்கும் என்ற புரிதல் இருந்தது.

ஆனாலும் அதை ஏற்க அவரது மனம் மறுத்தது. இந்நிலையில், எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது நடந்தது.

அவரது கைகளும் கால்களும் அழுக ஆரம்பித்தன. அதை அப்படியே விட்டால் மற்ற உடல் பகுதிகளும் அழுகிவிடும். அதனால் திருமதி ரேணுகாவின் கைகளும் கால்களும் துண்டிக்கப் பட்டன.

வாழ்வில் இத்தகைய கொடுமை ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவது சிரமம்.

ஆனால் கைகள், கால்களை இழந்த திருமதி ரேணுகா அதை தமது வாழ்வின் முற்றுப்புள்ளியாகக் கருதவில்லை.

மாறாக, அதைத் தமது வாழ்க்கைப் பயணத்தில் ஏற் பட்டுள்ள காற்புள்ளியாக அவர் எடுத்துக்கொண்டார்.

வாழ்க்கை தமக்கு இன்னும் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளதாக தமக்குத் தாமே கூறிக்கொண்டு புதிய அத்தியாயத்தைச் சந்திக்க தயாரானார்.

ஆனால் இந்த மனப்பக்குவம் அனைவருக்கும் இருக்காது என்பதை திருமதி ரேணுகாவின் உறவினர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் தெள்ளத் தெளிவாகக் காட்டின.

கைகள், கால்கள் இன்றி இருந்த திருமதி ரேணுகாவைப் பார்த்து அதிர்ந்துபோன உறவி னர்கள் கதறி அழுதனர்.

ஆனால் கொஞ்சம்கூட கலங்காமல் தம்மைப் பார்த்து நலம் விசாரிக்க வந்த அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றார் திருமதி ரேணுகா.

"தம்மைப் பார்க்க வந்தவரை அவர் வரவேற்றார். சாப்பிட்டு விட்டீர்களா என்று அவர்கள் அனைவரையும் நலம் விசாரித்தார். இவற்றைப் பார்த்தபோது அவர் சரியான மனநிலையில் இருக்கி றாரா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது," என்று திருமதி ரேணு காவின் கணவரான 58 வயது திரு சந்திரசேகரன் பி.ஆர். பகிர்ந்துகொண்டார்.

"வீட்டு நிர்வாகத்தில் எனது மனைவியை நான் நம்பியிருந்தேன். அவர் எப்போதும் நல்ல உடல்நலத்துடன் இருந்து வீட்டைக் கவனித்துக்கொள்வார் என்று மெத்தனத்துடன் இருந்து விட்டேன் என்பதை அவருக்கு இந்த நிலை ஏற்பட்ட பிறகுதான் உணர்ந்தேன்," என்றார் அவர்.

திருமதி ரேணுகா இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டார். அதற்கான மருத் துவக் கட்டணம் $150,000.

கடற்துறை நிர்வாகியாகப் பணியாற்றிய தமது கணவருடன் சேர்ந்து மருத்துவக் கட்டணத் துக்கான பணத்தைத் திரட்ட திருமதி ரேணுகா திட்டமிட்டு இருந்தபோது அவருக்கு இன் னொரு அடி விழுந்தது.

அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மறுநாள் அவரது கணவர் வேலை இழந்தார்.

இந்த எதிர்பாராச் சோதனை யையும் கண்டு திருமதி ரேணுகா கலக்கம் அடையவில்லை.

நிலைமையை எப்படியும் சமாளித்துவிட முடியும் என்ற மன உறுதியுடன் அவர் செயல்பட்டார்.

அதுமட்டுமல்லாது, அவரது இளைய மகன் ரஞ்சீவின் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

குடும்பத்தில் ஏற்பட்டவற்றை மனதில் கொண்டு திருமணத்தை ஒத்திவைக்க 28 வயது திரு ரஞ்சீவும் அவருக்கு நிச்சயக்கப் பட்ட பெண்ணான 28 வயது செண்பகம் துரைராஜுவும் விரும் பினர்.

ஆனால் திட்டமிட்டப்படி திருமணம் நடைபெறவேண்டும் என்று திருமதி ரேணுகா விடாப்பிடியாக இருந்தார்.

இவ்வளவு பெரிய சோகத்தைச் சுமந்துகொண்டிருந்த தமது குடும்பத்துக்கு மகனின் திருமண விழா அவற்றை மறந்து மகிழ்ச்சி யுடன் இருக்க வாய்ப்பு அளிக்கும் என்று அவர் நம்பினார்.

அவர் நினைத்தது போலவே திருமணம் நல்ல விதமாக நடைபெற்றது. திருமதி ரேணுகா தமது கைகள், கால்களை இழந்து மூன்று மாதங்களில் அந்தத் திருமணம் நடந்தது குறிப்பிடத் தக்கது.

திருமணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் திருமதி ரேணுகா செய்தார். மண மேடையில் மணமகன், மணமகள் ஆகியோருக்குப் பக்கத்தில் இருந்து திருமண சடங்குகளைப் பார்த்து மகிழ்ந்தார்.

"ஒப்பனை செய்துகொண்டு, சேலை அணிந்து திருமணத்துக்கு வந்திருந்தவர்களை மலர்ந்த முகத்துடன் அவர் வரவேற்றார்," என்று திருமதி ரேணுகாவின் மருமகள் செண்பகம் நினைவு கூர்ந்தார்.

கடந்த ஆண்டு திருமதி ரேணு காவுக்கு அரிய வகை தோல் நோய் ஏற்பட்டது.

"கைகள், கால்களை இழந்த போதுகூட அவ்வளவு வலிக்க வில்லை. ஆனால் இந்தத் தோல் நோயால் ஏற்பட்ட அரிப்பு மிகவும் மோசமாக இருந்தது. தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தை வரவைத்தது," என்றார் திருமதி ரேணுகா.

தற்போது, பராமரிப்பாளரின் உதவி தேவைப்பட்டாலும் தமது குடும்ப நிர்வாகத்தில் திருமதி ரேணுகா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறார்.

தமது மூத்த மகன் சி. விக்னேஸ்வரனுடன் அவர் அடிக்கடி சந்தைக்குச் சென்று மீன் வாங்குகிறார்.

இணையம் மூலம் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட் களை வாங்குகிறார். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர் களுடன் தொடர்புகொள்கிறார். அதுமட்டுமல்லாது, தமது பேரன்களான ருத்ரன், மித்ரன் ஆகியோரைப் பார்த்துக்கொள் கிறார்.

பேரன்கள் நேரத்துக்கு சாப்பிடு வதையும் அவர்களுக்குப் போது மான உறக்கம் கிடைப்பதையும் அவர் உறுதி செய்கிறார்.

"எனது தாயார் பல தடைகளை முறியடித்துள்ளார். நடந்ததை எண்ணி நாங்கள் சோகக்கடலில் மூழ்கினோம். ஆனால் எனது தாயாரின் துணிச்சல் எங்களை அதிலிருந்து மீண்டு வர உதவியது.

"அவர் மனஉறுதிமிக்கவர். எங்கள் முன் அவர் அழுததில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதும் அவர் எப்போதும் போல நடந்துகொண்டார். அவர் ஒரு வியக்கத்தக்க, சுதந்திரமான மனிதர்," என்று 29 வயது திரு

விக்னேஸ்வரன் கூறினார்.

வீரியமிக்க மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் கடந்த மாதம் 27ஆம் தேதியன்று டான் டோக் செங் மருத்துவமனையில் நடைபெற்ற கை, கால் இழந்தோர் ஆதரவுக் குழுவின் கருத்தரங்கில் திருமதி ரேணுகா பேசி தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண் டார்.

திருமதி ரேணுகா தமது நிலை யைக் கண்டு தமக்குத் தாமே பரிதாபப்படவே இல்லை என்றும் அவர் தைரியமாக இருந்ததாகவும் அவருக்கு ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு சிகிச்சை அளித்த தலைமை இயன் மருத்துவ நிபுணர் டவினா கோ கூறினார்.

"நான் என் கைகளையும் கால்களையும் இழந்தபோது பலர் என்னை வித்தியாசமாகப் பார்த் தனர்.

"நெருங்கிய சொந்தபந்தங் களும் நண்பர்களும் என்னை விட்டு ஒதுங்கிச் சென்றனர். பரவாயில்லை. நான் என் கைகள், கால்களைத்தான் இழந்தேன். என் மனதைரியத்தை இழக்கவில்லை.

"எல்லாம் சரியாகிவிடும் என்ற மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். நம்பிக்கை இருக்க வேண்டும். நம்மை நோக்கி வரும் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்," என்றார் வீரத் தாய் திருமதி ரேணுகா.