கல்விக்கு உதவும் மரபுடைமை நிலையம்

கல்விக்கு உதவும் மரபுடைமை நிலையம்

2 mins read
7600ce88-7cfc-4ac5-bfb9-597507539d22
(இடமிருந்து) நைடெக்(ITE) மாணவரான 18 வயது முஹம்மது சமீருல் இம்ரான் சய்யது ஜஹபர், பிரதமர் அலுவலக அமைச்சர் குமாரி இந்திராணி ராஜாவிடமிருந்து 'ஜாமிஆ சூலியா வக்காஃப்' உதவி நிதி விருதைப் பெற்றார். உடன், முயிஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இஸா மசூட்,  நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் தலைவர் முஹம்மது அப்துல் ஜலீல். படம்:  நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் -

மாணவர்களின் கல்விச் செலவைக் குறைக்கவும், அதிகமானோரை மேற்கல்வியை தொடர ஊக்குவிக்கும் நோக்கத்திலும் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவிநிதி அளித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர்

இந்திராணி ராஜா தகுதிபெற்ற 19 மாணவர்களுக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தார். 'ஜாமிஆ சூலியா வக்காஃப்' என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உதவி நிதிகளில் ஒன்றான ஆயிரம் வெள்ளி உதவி நிதியை மாணவர்கள் பெற்றனர். இந்திய முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கும் அவ்விருதுகள் வழங்கப்பட்டன.

"சிங்கப்பூரின் வளமான எதிர்காலத்திற்கு தேவையான அறிவார்ந்த இளையர்களை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. அந்நோக்கத்தின் அடிப்படையில் கல்வியில் நாட்டமுள்ள மாணவர்களை நேர்காணல் வழி தேர்ந்தெடுத்து உபகாரச்சம்பள விருதை வழங்கி வருகிறோம்," என்றார் மரபுடைமை நிலையத்தின் பொருளாளர் திரு முஹம்மது நசீம்.

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவைப் பிரதிபலிக்கும் வகையில் மரபுடைமை நிலையத்தில் 'சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூரருக்கு- முன்னோர்களும் சந்ததியர்களும்' என்ற தலைப்பிலான புதிய கண்காட்சி மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. பல இன, சமய சமூகத்தை பறைசாற்றும் 100 குடும்பங்களின் பரம்பரைச் சுவடுகளின் தகவல்கள் அங்கு இடம்பெற்றுள்ளன. அதில் 35 குடும்பங்களின் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் நினைவுப்பொருள் வழங்கி கெளரவித்தார். அவர்களின் முன்னோர்கள் வர்த்தகம், மருத்துவம், கல்வி, சமூக சேவை போன்ற துறைகளில் முத்திரை பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிய தகவல்கள் பொதிந்த அந்தப் புகைப்படக் கண்காட்சியைப் பற்றி விவரித்த நிலையத்தின் செயலாளர் திரு நசீர் கனி, "வாழ்க்கை உதாரணங்களாக வாழ்ந்த நம் முன்னோர்கள் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு, கடின உழைப்பு, தியாகங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த படிப்பினைகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ள கண்காட்சி பெரிதும் உதவும்," என்றார். ஆண்டிறுதிவரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு 85915724 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.