இலக்கியப் பரிசு வென்ற இருவரது எழுத்துப் பயணம்

இலக்கியப் பரிசு வென்ற இருவரது எழுத்துப் பயணம்

2 mins read
b2194ddd-913b-4176-a4d3-9aa6b5ed5542
(இடமிருந்து) உரையாடலை வழிநடத்திய அஷ்வினி செல்வராஜ், எழுத்தாளர்கள் சித்ரா ரமேஷ்,  அ கி வரதராசன். படம்: தேசிய நூலக வாரியம் -

'வாசிப்பு விழா 2019'ஐ ஒட்டி சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்ற எழுத்தாளர்கள் அ கி வரதராசன், சித்ரா ரமேஷ் ஆகியோருடன் 'என் எழுத்துப் பயணம்' என்ற உரையாடல் நிகழ்ச்சி் கடந்த மாதம் 30ஆம் தேதி தேசிய புத்தக மன்றத்தின் ஆதரவுடன் தேசிய நூலகத்தில் நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக புதிய குடியேறிகளாக வந்த பலர் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்திற்குத் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றார் திருமதி சித்ரா ரமேஷ்.

இருபது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் பணி நிமித்தமாக இங்கு வந்த தமிழர்களுக்கும், 100 ஆண்டுகளுக்கு முன் அதே காரணத்துக்காக இங்கு வந்து குடியேறிய தமிழர்களுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்ற அவர், "அப்போது குடியேறியவர்கள் உடலுழைப்பை மட்டுமே நம்பி வந்தவர்கள். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக குடியேறிய தமிழர்கள் நன்கு படித்தவர்கள்.

"இந்த இருவகையினரும் சிங்கப்பூர் இலக்கியத்திற்கு தங்கள் பங்களிப்பைக் கொடுத்தாலும் எதில் சிங்கப்பூர் தன்மைகள் உள்ளன என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது," எனக் குறிப்பிட்டார்.

"சில ஆண்டுகளாக சிங்கப்பூர் இலக்கியச் சூழல் மிக சிறப்பாக உள்ளது. வாரயிறுதிகளில் பல தமிழ் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சிங்கப்பூர் அரசாங்கமும் இலக்கிய வளர்ச்சிக்கு பல வகையிலும் ஊக்கம் கொடுத்து வருவதே இதற்கு முக்கிய காரணம்," என திரு வரதராசன் குறிப்பிட்டார்.

"படைப்பாளிகளுக்கு நல்ல இலக்கியங்கள் எவை என்பது குறித்து சில தீர்க்கமான சிந்தனைகள் இருக்க வேண்டும். இதற்கு வயது, இலக்கியத்தின் வடிவம், அது எப்போது எழுதப்பட்டது போன்ற கேள்விகள் தேவையில்லை. கம்பராமாயணம் மரபிலக்கியம். 20ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல நாவல்கள், சிறுகதைகள், புதுக்கவிதைகளும் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் உள்ளன. எனவே இந்த மூன்று தலைமுறையினரும் சிறந்த இலக்கியம் என்ற புள்ளியில் இணைய வேண்டும்," என்றார் திருமதி சித்ரா.

அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் தங்களுக்கு எது விருப்பமோ அதை எழுதட்டும் என்ற திரு வரதராசன், மரபு சார்ந்து வெண்பாக்கள் எழுதுவதால் அவ்வகை இலக்கியங்களை வாசிப்பவர்களை மட்டுமே தம் எழுத்துகள் சென்றடைவதாகச் சொன்னார்.