'மக்களைப் புரிந்துகொள்ள இலக்கியம்'

'மக்களைப் புரிந்துகொள்ள இலக்கியம்'

2 mins read
c08bd37d-9101-4c33-b629-bb708a5a9019
கவிதை விழாவையொட்டி நேற்று சனிக்கிழமை காலை ஆர்ட்ஸ் ஹவுசில் நடைபெற்ற சங்கம் நிகழ்ச்சியில் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் மொழிக் கவிதைகள் குறித்த கலந்துரையாடலும் கவிதை வாசிப்பும் இடம்பெற்றது. படத்தில் நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் அசார் இப்ராஹிமுடன் (இடமிருந்து இரண்டாவது) உரையாடும் பிற மொழிக் கவிஞர்களுடன் தமிழ் மொழிக் கவிஞர்கள் நெப்போலியன் (வலமிருந்து இரண்டாவது), க.து.மு.இக்பால் (வலக்கோடி). படங்கள்: சிங்கப்பூர் கவிதை விழா -

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரான அமரர் திரு லீ குவான் இயூ, அப்போதைய அமெரிக்க அதிபர் கிளின்டனைச் சந்தித்தபோது, அவரிடம் வெளிநாட்டுப் படைகளால் ஆப்கானிஸ்தானை வெல்ல முடியாது என்ற செய்தியைச் சொல்ல விரும்பினார். அந்தச் செய்திச் சொல்வதற்காக அப்போது அவரது செயலாளராக இருந்த திரு சீ ஹொங் டாட்டிடம் அதற்குப் பொருத்தமான ஒரு கவிதையைத் தேடி எடுக்கச் சொன்னார்.

கிளின்டனிடம் பேசிவிட்டு, உரிய தருணத்தில் கவிஞர் கிப்லிங் எழுதிய 'தி யங் பிரிட்டிஷ் சோல்ஜர்' கவிதையைத் திரு கிளின்டனிடம் கொடுக்குமாறு என்னிடம் கூறினார் என்று கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் விவரித்தார். சிங்கப்பூர் கவிதை விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரு சீ, இலக்கியத்தின் நுட்பத்தையும் பயன்பாட்டையும் பற்றி விவரிக்க இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

கவிதையும் இலக்கியமும் மக்களைப் புரிந்துகொள்ள மக்களுடன் உறவாட உதவுகிறது என்று குறிப்பிட்ட அவர், இலக்கியம் வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று எனக் கூறினார்.

ஐந்தாவது ஆண்டாக நடை

பெறும் சிங்கப்பூர் கவிதை விழாவில் இந்த ஆண்டு தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டது. 2,000 ஆண்டுகளாகத் தமிழர்கள் எல்லாவற்றையும் கவிதையாகவே எழுதி வந்திருப்பதை சிங்கப்பூர் தமிழ் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன் சுட்டினார்.

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதை வடிவில் உள்ளது. அதுபோல் மருத்துவம் முதல் நிலவியல், கணிதம், வேளாண்மை, வானவியல், ஆன்மீகம், தத்துவம் என அனைத்துமே கவிதைகளாகவே உள்ளன.

தமிழ்க் கவிதையின் ஓசை நயத்தையும் சொல் அழகையும் விவரித்த அவர், படிப்பறிவு இல்லாதவர்கள்கூட அருமையாக பாட்டுக் கட்டும் சிறப்பையும் குறிப்பிட்டார். தமது பாட்டி காலத்தவர்கள் உடனுக்குடன் ஒப்பாரியும் தாலாட்டும் பாடும் திறன் பெற்றிருந்தனர் என்றாரவர்.

சிங்கப்பூரிலும் முதலில் எழுதப்பட்டது கவிதை. இன்றும் பலரும் எழுதுவது கவிதைதான். சராசரியாக வாரம் ஒரு கவிதை நூல் வெளிவருகிறது எனக்கூறிய அவர், சிங்கப்பூரில் தமிழ்க் கவிதை அடுத்தகட்ட வளர்ச்சியைக் காண விமர்சனப் பார்வையை வளர்க்க வேண்டும் என்று திரு அருண் மகிழ்நன் குறிப்பிட்டார்.