மேற்கு உதயம்: கலாசார விழா

மேற்கு உதயம்: கலாசார விழா

1 mins read
8c5f59cb-518d-45ea-a438-393fa5216744
இவ்வாண்டின் 'மேற்கு உதயம்' நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன், பைனியர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ஃபூ, பூன் லே குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டே, ஆயர் ராஜா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ மீ ஹார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். செய்தி: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, படம்: விக்னேஸ்வரி ரெத்தினம் -

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, பைனியர் தனித்தொகுதி இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஒன்றிணைந்து கலாசாரத் திருவிழாவை நடத்தின.

கலை, கலாசாரம், உணவு, உடை, விளையாட்டுகள் போன்ற பாரம்பரிய, பண்பாட்டுக் கூறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கலாசார விழா நடத்தப்படுகிறது. முதல் நிகழ்வு 2014ஆம் ஆண்டில் நான்ஹுவா தொடக்கப்பள்ளியிலும் இரண்டாம் நிகழ்வு 2017ஆம் ஆண்டில் ஆயர் ராஜா சமூக மன்றத்திலும் நடைபெற்றன. இம்மாதம் 14ஆம் தேதி மூன்றாம் நிகழ்வு ஃபிரண்டியர் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

ஐந்து இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணைந்து தீவின் மேற்குப் பகுதியில் நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு 'மேற்கு உதயம்' என்று பெயரிடப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். குடியிருப்பாளர்கள் பங்கேற்கும் பல விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

பூ கட்டுதல், சேலை கட்டுதல், மருதாணி இடுதல், மணல் ஓவியம் மற்றும் நடனக் கலை அறிமுகம் போன்ற பல நடவடிக்கைள் அடங்கிய கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குடியிருப்பாளர்களும் பாடல், நடனம், விளையாட்டு போன்ற அங்கங்களைப் படைத்து நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தனர்.

இந்நிகழ்ச்சியின் ஆதரவாளார்களான சிண்டா, சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவையும் கூடாரங்கள் அமைத்திருந்தன.