குப்பைகளை அகற்றிய 'அப்துல் கலாம்' தொண்டூழியர்கள்

குப்பைகளை அகற்றிய 'அப்துல் கலாம்' தொண்டூழியர்கள்

1 mins read
bc71174b-e63f-47cb-8a30-760cdf2ec49b
குப்பைகளை அகற்றும் பணியில் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டியின் தலைவர் திரு கேசவபாணியும் (இடது) உறுப்பினர்களும். செய்தி, படங்கள்: டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி -

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 4வது நினைவு தினமான 27 ஜூலை சனிக்கிழமையன்று லிட்டில் இந்தியாவில் குப்பைகளை அகற்றும் தொண்டூழியத்தில் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

அன்று காலை 9.30 மணியளவில் அமைப்பின் உறுப்பினர்கள் லிட்டில் இந்தியா மரபுடைமைச் சங்கத்தின் எதிரே கூடினார்கள்.

அப்போது டாக்டர் அப்துல் கலாமின் திருஉருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைப்பின் தலைவர் திரு கேசவ பாணி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். பொதுத் தொண்டிலேயே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாமனிதரை பொதுத் தொண்டால் மட்டும்தானே நினைவு கூரமுடியும் என்றார் அவர்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குப்பை சேகரிக்கும் பைகள், உபகரணங்கள், குப்பைகளற்ற சுற்றுப்புறத்தை வலியுறுத்தும் துண்டறிக்கைகள் ஆகியவற்றை வாரியம் வழங்கியது.

தொண்டூழியர்கள் லிட்டில் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பகல் 11.30 மணி வரை குப்பைகளை அகற்றினர்.

இந்த நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டாக தொடர்ந்து இவ்வாண்டு நடைபெற்றது.