நூல் கலந்துரையாடல்

நூல் கலந்துரையாடல்

2 mins read
56729994-abbb-46b9-b3fe-1f97d4941812
கலந்துரையாடலில் ஈடுபட்ட (வலமிருந்து) திரு அ.கி.வரதராஜன், நூலாசிரியர் திரு மாலன், அ.பழனியப்பன். தேசிய பல்கலைக்கழக மாணவி குமாரி அஸ்வினி செல்வராஜ் கலந்துரையாடலை வழிநடத்தினார். செய்தி, படங்கள்: தேசிய நூலக வாரியம் -

சிங்கப்பூரின் வரலாற்றுச் சுவடுகளை அலசும் 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற நூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமையன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

காலனித்துவ ஆட்சியின் தாக்கத்திலிருந்து, சுதந்திரத்திற்கு பிந்தைய அரசியல் தலைமைத்துவம் வரை சிங்கப்பூரிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை முன்வைக்கும் இந்நூலின் எழுத்தாளரான திரு மாலன், தனது நூல் குறித்த ஐயங்களுக்கும் கருத்துகளுக்கும் பதிலளித்தார்.

அவருடன், நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வரும் திரு பழனியப்பனும், 'லீ குவான் இயூ பிள்ளைத் தமிழ்' என்ற நூலுக்கு 2017ம் ஆண்டில் விருதை வென்ற திரு அ.கி.வரதராஜனும் கலந்துரையாடலில் பங்குபெற்றனர்.

சிங்கப்பூரின் முன்னோடித் தலைமுறையை சேர்ந்த திரு பழனியப்பன், சிங்கப்பூரின் தொடக்கக்காலத்திலிருந்து, தான் கண்கூடாகப் பார்த்த பல மாற்றங்களை, நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுடன் ஒப்பீடு செய்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

'சிங்கப்பூருடைய தொடக்கக்கால வரலாறு, அந்தந்த அமைச்சரவைகளில் இடம்பெற்ற முக்கிய அரசியல் தலைவர்களின் வரலாறு ஆகியவை இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

முக்கியமாக, இத்தகைய வரலாற்றுத் தகவல்களை வாசகர்களுக்கு சுவாரசியமாக எடுத்துக்கூற, உவமைகளையும், உள்ளூர் கதைகளையும் எழுத்தாளர் பயன்படுத்தியிருக்கிறார்,' என்று திரு பழனியப்பன் கூறினார்.

இந்நூலின் சிறப்பம்சங்கள் குறித்த தன்னுடைய பார்வையை முன்வைத்தார் திரு அ.கி.வரதராஜன்.

'எழுத்தாளருடைய பார்வையைத் தவிர்த்து, பல சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கருத்துகளையும் திரு மாலன் நூல் முழுவதுமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். இங்கேயே பிறந்து இங்கேயே வாழும் பல எழுத்தாளர்களுடைய சொற்களைக் கொண்டு தன்னுடைய வாதத்தை நிலைநாட்டுவது இந்த நூலின் ஒரு சிறப்பாகும்,' என்று கூறினார் திரு அ.கி.வரதராஜன்.

அண்மையில் சாகித்திய அகாடெமியால் பதிப்பிக்கப்பட்ட, பன்னிரெண்டு சிங்கப்பூர் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஒன்று, அவற்றை எழுதிய கவிஞர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.