பிரேமா மகாலிங்கத்திற்கு ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியில் இவ்வாண்டு திருமதி பிரேமா மகாலிங்கத்தின் ’நீர்த் திவலைகள்’ என்ற சிறுகதை நூல் பரிசினை வென்றது. நூலாசிரியருக்கு 2,000 வெள்ளி ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

புத்தகப் பரிசுத் திட்டத்தின் 10ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனந்தபவன் அரங்கில் நடைபெற்றது.  ஒவ்வோர் ஆண்டும் சிறுகதை, கவிதை, கட்டுரை என சுழல் முறையில் இந்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு இப்புத்தகப் பரிசுக்கான நடுவர்களாக இந்தியாவின் சிறுகதை எழுத்தாளரும் ஆவணப் படத் தயாரிப்பாளருமான திரு பாரதி கிருஷ்ணகுமார், மலேசிய எழுத்தாளர், திறனாய்வாளர் திரு எம்.கருணாகரன், சிங்கப்பூர் எழுத்தாளர் திரு எம்.சேகர் ஆகியோர் செயல்பட்டனர். அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு நாளையொட்டி நடந்த இவ்விழாவில் சிங்கப்பூர் 

இந்தியர் சங்கத்தின் தலைவரும் ஜோர்தானுக்கான சிங்கப்பூரின் பொதுத் தூதருமான திரு கே.கேசவபாணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இளையர்கள் வாசிப்பதற்கு ஏற்ற நூல்களை எழுத வேண்டும் என்றார் அவர். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், “சங்கம்  தமிழ்ச் சுரங்கம்” என்ற தனது இலக்கியச் சிற்றுரையில் நற்றிணைப் பாடலை உதாரணமாகச் சுட்டிக்காட்டி, சங்கப் பாடல்களின் சிறப்பை எடுத்துரைத்தார். நிகழ்வின் தொடக்கத்தில் அமரர் திரு. மு.கு. இராமச்சந்திராவின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் காணொளி திரையிடப்பட்டது. புகைப்படங்களின் மூலம் விலங்குப்பிரியரான அவருடைய சமூகத் தொண்டு, குடும்பம் குறித்த இக்காணொளி பார்வையாளர்களிடையே பல நினைவலைகளை எழுப்பியது.  செய்தி: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்