முன்னோடிகளின் கதைகளை எடுத்துக்கூறும் கண்காட்சி

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் -

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் புகைப்

படக் கண்காட்சி ஒன்றுக்கு குடும்பப் புகைப்படங்களை இரவல் கொடுத்த 30 பேருக்கு நினைவுப் பொருள் வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 17ஆம் தேதி நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் ஹலிமா யாக்கோப் அவர்களுக்கு நினைவுப் பொருளை வழங்கிச் சிறப்பித்தார்.

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தையும் பன்முகத்தன்மையையும் கொண்டாடும் விதமாக, 1965ஆம் ஆண்டிற்கு முன் சிங்கப்பூர் வந்த முன்னோடிகளின் கதைகளை எடுத்துக்கூற இக்கண்காட்சி முற்படுகிறது. ‘சிங்கப்பூர் முதல் சிங்கப்பூரர்கள் வரை - முன்னோடிகளும் சந்ததியினரும்’ என்னும் தலைப்பை இந்தப் புகைப்படக் கண்காட்சி கொண்டுள்ளது.

புகைப்படங்களையும் அவற்றுக்குப் பின்னால் உள்ள கதைகளையும் பகிர்ந்துகொண்ட குடும்பங்களுக்கு நினைவுப் பொருட்களை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

வெவ்வேறு இனங்களையும் சமயங்களையும் சேர்ந்தவர்களின் புகைப்படங்களும் கதைகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

“இந்தப் புகைப்படக் கண்காட்சியின் மூலம் இன, சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான அதன் கடமையை நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் ஆற்றுகிறது,” என்று இக்கண்காட்சியின் காப்பாளர் முகம்மது நசீம் அப்துல் ரஹீம் கூறினார்.

இந்தக் கண்காட்சிக்கான ஏற்பாட்டுப் பணிகளுக்கு தலைமை வகித்த திரு நசீம், தன்னுடைய தந்தையின் புகைப்படத்தையும் கண்காட்சிக்கு இரவல் கொடுத்துள்ளார். சுருக்கெழுத்தாளராக பணியாற்றிய அவரது தந்தை, 1952ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்தார். 

“அந்தக் காலகட்டத்தில் என் தந்தை அதிக கல்வியறிவைப் பெறாவிட்டாலும் கல்வியின் முக்கியத்துவத்தை எங்களுக்கு அவர் அடிக்கடி வலியுறுத்துவார். கல்வி இருந்தால்தான் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று எங்களிடம் அவர் கூறுவார்,” என்று திரு நசீம் நினைவுகூர்ந்தார். 

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு 1947ஆம் ஆண்டில் வந்த திரு நடராஜா, 92, சிங்கப்பூர் துறைமுக வாரியத்தில் (Singapore Harbour Board) ஒரு எழுத்தராக பணிபுரிந்தார். வாரயிறுதிகளில் அடிக்கடி சிலோன் சாலையில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் தன் 78 வயது மனைவி திருவாட்டி சினைம்மாவுடன் அவர் சேவையாற்றுவார். 

“என் பெற்றோர் பெரிதாக படிக்கவில்லை. இருந்தாலும், தங்களால் முடிந்தவரை சமூகத்திற்கு பங்காற்றியிருக்கிறார்கள். ஒருவரிடம் எந்த அளவிற்கு வசதி இருந்தாலும் அவரால் ஏதோ ஒரு வகையில் சமூகத்திற்கு பங்காற்ற முடியும் என்பதை என் பெற்றோரின் கதையிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்,” என்று திரு நடராஜாவின் மகன் திரு லோகநாதன் கூறினார். 

1800களில் சிங்கப்பூருக்கு வந்த திரு ‌ஷேக் பல்லா இஸ்மாயில், ஜெர்மானிய தூதரகத்தில் பணிபுரிந்தார். வடஇந்தியாவிலிருந்து அவர் இங்கு வந்தார். அவருடைய சந்ததியினரைச் சேர்ந்தவர் குமாரி நட‌‌‌ஷா லத்தீஃப், 31. 

“உலகின் பல பகுதிகளிலிருந்தும் நமது மூதாதையர் இங்கு வந்தனர். அவர்களின் கதைகளை நாம் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்கூறினால் மட்டுமே நாட்டு நிர்மாணத்திற்கு உதவிய முன்னோடிகளைப் பற்றியும் அவர்கள் நமது நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் பற்றியும் நன்கு தெரிந்துகொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

நாகூர் தர்கா நிலையத்தில் இடம்பெறும் இந்தப் புகைப்படக் கண்காட்சி இவ்வாண்டு மார்ச் 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. 

இவ்வாண்டு இறுதி வரை அது நடைபெறும். கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.