கவிதை, கதைகளுடன் வாசகர் வட்ட ஆண்டுவிழா

வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா இம்மாதம் 17ஆம் தேதி மாலை உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்றது. கவிஞர் தேவதேவன், எழுத்தாளர்-கதைசொல்லி பவா செல்லத்துரை இருவரும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ஷா நவாஸ் வரவேற்புரை வழங்க, வாசகர் வட்டத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை சிவானந்தம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், சித்ரா ரமேஷின் ‘ஒரு கோப்பை நிலா’ என்ற கவிதை நூல், எம்.கே.குமாரின் ‘ஓந்தி’ என்ற சிறுகதை நூல், அழகுநிலாவின் ‘பா அங் பாவ்’ என்ற சிறுவர் பாடல்கள் நூல் மற்றும் ஷா நவாஸின் “Not Unto the Taste” என்ற கவிதை மொழிபெயர்ப்பு நூல் ஆகியன வெளியீடு கண்டன.

காலமும் இடமும் அற்று கவிதையாய் வாழ்தல் குறித்து சிற்றுரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன். தன் சிறப்புரையில் பல்வேறு சிறுகதைகளைத் தொட்டு வாழ்வின் உன்னதங்களை எடுத்துச்சொன்னார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. 

அடுத்தநாள், ஆகஸ்டு 18, காலை 10 மணி முதல் தேசிய நூலகத்தின் பாசிபிலிட்டி அறையில் கவிதை குறித்த ரசனைப்பயிலரங்கு கவிஞர் தேவதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கவிஞர்களுக்குப் பிடித்த தேவதேவனின் கவிதைகளை, அவர்கள் வாசித்து, அதுதரும் அனுபவங்கள் குறித்துப்பகிர்ந்துகொண்டனர். 

நீ கற்றது கவிதையெனில் கல்லாதது ஏதுமில்லை என்றும்,  கவிதையாய் வாழும்போது கவிதையைச் செய்வது அவசியமில்லை என்றும் கவிஞர் தேவதேவன் கூறினார். மேலும், தன்னுடைய கவிதைகள் இயல்பாக தான் வாழும் சூழலிருந்து எழுந்தவை என்றும் கவிதையில் முன்முடிவுகள் ஏதுமற்று அதனை எதிர்கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேவதேவன் என்ற புனைபெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் தனது சொந்தப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய “தேவதேவன் கவிதைகள்” தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவரது முதல் கவிதைத் தொகுப்பு குளித்துக் கரையேறாத கோபியர்கள் 1982ல் வெளிவந்தது. அடுத்து வெளிவந்த ‘மின்னற்பொழுதே தூரம்’, ‘மாற்றப்படாத வீடு’ ஆகிய தொகுப்புகள் பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தன. கவிதையின் ரசனையை அறிந்துகொள்ளவும், கவிதையை உணர்ந்து எழுதவும் கவிதையாய் வாழ்தல் குறித்தும் இச்சந்திப்பில் அறிந்துகொண்டதாக பங்குபெற்றவர்கள் கருத்துரைத்தனர். 

நிகழ்ச்சியை பாரதி மூர்த்தியப்பன் மற்றும் எம்.கே.குமார் இணைந்து வழங்க, பவா செல்லத்துரை மற்றும் தேவதேவனுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. அன்று மாலை, 6 மணி அளவில், பீஷான் நூலகத்தில், ‘மாயா இலக்கிய வட்டம்’ சார்பில், எழுத்தாளர் ‘அஸ்வகோஷ்’ (இராஜேந்திர சோழன்) குறித்த ஆவணப்  படம் வெளியிடப்பட்டது.