உயர்நிலை தமிழில் சங்க இலக்கியப் பாடம்

வைதேகி ஆறுமுகம் 

வரும் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்புக்கு வரவுள்ள உயர்நிலைப் பள்ளி பாடத்திட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, உயர்நிலைப்பள்ளி தமிழ் மாணவர்களுக்குச் சங்க இலக்கியத்தின் சில அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படும். 

புதிய பாடத்திட்டம் நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கல்விக்கான மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த தாய்மொழிகளுக்கான எட்டாவது கருத்தரங்கில் அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்தார். 

முதல் அம்சமாக, கலாசாரத்தைப் பற்றி அதிகமாக கற்றுக்கொடுக்கப்படுவதோடு அவற்றைப்  பறைசாற்றவும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

நமது கலாசாரம், விழுமியங்கள், மரபுடைமை ஆகியவற்றுடன் இணைவதற்குத் தாய் மொழிக் கல்வி முக்கியம் என்ற அமைச்சர், மொழியைக் கற்பதற்கும் அப்பாற்பட்டு, தாய்மொழியில் ஒன்றோடு ஒன்றாகக் பின்னிப் பிணைந்திருக்கும் கலாசாரத்தின் மூலம் மாணவர்கள் உலகைப் பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

தாய்மொழிக் கற்றலுக்கு உதவும் வண்ணம் நடப்பு, செய்தித்துறைச் சார்ந்த வளங்களை வழங்குவது இரண்டாவது அம்சம்.

மாணவர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் உலகம் எந்த அளவுக்கு தாய்மொழியுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை உணரஇது உதவும் என்றும் அமைச்சர் சுட்டினார். 

“நமது பாரம்பரிய தமிழ்க் கிராமிய இசையிலும் சங்க இலக்கியத்திலும் கலாசாரமும் மனித விழுமியங்களும் பெரும் அளவில் பொதிந்துள்ளன. அது நமது பாடத்திட்டத்தின் முக்கியமான அம்சம். அவற்றை மாணவர்களிடையே கொண்டு செல்ல பலவகையான அணுகுமுறைகளைக் கையாளவேண்டும்,” என்று அமைச்சர் கூறினார். 

எடுத்துக்காட்டாக, “யாயும் ஞாயும் யாராகியரோ’ எனும் சங்க இலக்கிய நூலான குறுந்தொகையில் உள்ள பாடல், கிட்டத்தட்ட கி.மு. 300ல் எழுதப்பட்ட ஒரு பாடல். அது அண்மையில் ஒரு தமிழ்த் திரைப்படத்தில் பாடலாக வந்தவுடன் நமது இளையர்கள் பலரும் அதைப் பற்றி தெரிந்துகொண்டனர்,” என்று விவரித்தார் அமைச்சர். இந்தப் பாடல் உள்ளூர் இசையமைப்பாளர் ‌‌ஷபிர் இசையமைத்த பாடல்.

மூன்றாவது அம்சமாக, உயர்நிலை தாய்மொழிப் பாடத்திட்டத்தில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பாக, சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் வரிகள் மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 

நான்காவதாக, தாய்மொழி வகுப்புகளில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு கற்றலுடன் இன்னும் அதிகமாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இரு மொழிக் கல்வி என்பது சிங்கப்பூர் கல்விக் கட்டமைப்பின் ஒரு முக்கிய மைல்கல் என்று கூறிய அமைச்சர், அது நமது ஒழுக்கத்தையும் சிங்கப்பூரர்கள் என்ற முறையில் நமது பண்புகளையும் வடிவமைக்கிறது என்றார். 

நமது தாய்மொழிகள் நமது பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதுடன் புதிய வாய்ப்புகளையும் கதவுகளையும் திறந்துவிடுபவையாகவும் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

குழந்தைப் பருவத்திலேயே இருமொழிக் கற்றலை வளர்ப்பதில் கல்வி அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது என்ற குறிப்பிட்ட அமைச்சர், அதன் வெற்றிக்குப் பாலர் பள்ளி ஆசிரியர்களின் தரம்தான் காரணம் என்றும் தெரிவித்தார்.

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்று தமிழில் குறிப்பிட்ட அவர், அந்தத் தமிழ்ச் செய்யுளுக்கு ஏற்ப இதனால்தான் ஆசிரியர்கள் உயர்ந்த நிலையில் போற்றப்படுகிறார்கள் என்றார்.

சன்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடந்த கண்காட்சி இவ்வாண்டு ‘களிப்பூட்டும் கண்டுபிடிப்புக்கான பூந்தோட்டம்’ எனும் கருப்பொருளைக் கொண்டிருந்தது.  அதில் கிட்டத்தட்ட 40 அமைப்புகள் கண்காட்சிக் கூடங்களை அமைத்திருந்தன. 

தமிழ் முரசின் கூடத்தில் மாணவர்கள் வண்ணம் தீட்டுவதுடன் தமிழில் எளிய நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

அதேபோல, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, தேசிய நூலகம் போன்ற அமைப்புகளும்  பிசிஎஃப் பாலர் பள்ளி, கேலாங் மெத்தடிஸ்ட் பள்ளி,  சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளும் கல்வி சார்ந்த அமைப்புகளும் மாணவர்களைத் தாய்மொழியில் ஈடுபடுத்தும் பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தமது 5 வயது மகளுடன் கண்காட்சிக்கு வந்திருந்த திருமதி நித்யா, இந்தத் தாய்மொழிகள் கருத்தரங்கு தனக்கும் தனது மகளுக்கும் பயனுள்ளதாக அமைந்தது என்றார்.

தாய்மொழிக் கற்றலை விரும்பும் வகையிலும் எளிமையாகவும் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள், தாய்மொழியில் பிள்ளைகளை ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் பலவற்றை வீட்டிலேயே பின்பற்றலாம் என்றும் அவர் கூறினார்.

“வீட்டில் தமிழ் பேசினாலும் தமிழ் மொழி மீதான ஆர்வத்தைத் தொடர்ந்து அதிகரிக்க இங்கு நான் கண்ட பல நடவடிக்கைகள் உதவும். சிங்கப்பூரில் தமிழ் மொழி கல்விக்கும் கற்றலுக்கும் பாலர் பள்ளியிலேயே கவனம் செலுத்துவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது,” என்று திருமதி பாண்டியன் சரண்யா தெரிவித்தார்.