சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்

புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, இம்மாதம் 7ஆம் தேதி மாலை புக்கிட் மேரா சமூக மன்றத்தில் பட்டிமன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஆடல், பாடல் அங்கங்களுடன் தொடங்கியது நிகழ்ச்சி.

அவற்றை அடுத்து ‘ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துகின்றனவா நெரிக்கின்றனவா?’ என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

மனம் விட்டு சிரிக்கவும் சிறந்த கருத்துக்களைப் பற்றி சிந்திக்கவும் வைத்தது பட்டிமன்றம். 

இதில் முன்னாள் வானொலி மூத்த செய்தியாசிரியரும் தயாரிப்பாளருமான திரு செ. ப. பன்னீர்செல்வம் நடுவராகப் பணியாற்றினார்.

‘ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துகின்றன’ என்ற அணியினர், ஊடகங்களின் உன்னத நிலையைப் பற்றியும் இளையர்களிடையே ஊடகங்கள் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பற்றியும் உண்மைச் சம்பவங்கள் மூலம் மேற்கோள் காட்டி வாதிட்டனர்.

‘ஊடகங்கள் இளையர்களை நெரிக்கின்றன’ என்ற அணியில் இருந்தோர், பத்திரிகை செய்திகள், கதைகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றை எடுத்துச் சொல்லித் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். 

ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துகின்றன என்று சமுதாயத்திற்கு ஏற்ற நல்லதொரு தீர்ப்பை வழங்கினார் நடுவர். 

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் பட்டிமன்ற நிகழ்வு, வட்டாரத்தில் வாழும் இந்தியர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவருமான திருமதி கவிதா கருத்துரைத்தார். 

இவ்வாறு குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில்  உள்ள சமூக மன்றங்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பட்டிமன்ற நிகழ்ச்சியில் பலர் தங்கள் குடும்பங்களுடன் கலந்துகொண்டனர்.