வயதாக ஆக தசைகள் பலவீனம் அடைவது இயல்பு. முதியவர்கள் தளர்ச்சி காரணமாகக் கீழே விழும் சாத்தியமும் இதனால் அதிகரிக்கிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாகும் முதியோருக்கென ஈசூனில் உள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம், புதிய உடற் பயிற்சிக் கூடம் ஒன்றை அமைத்துள்ளது.
ஸ்ரீ நாராயண மிஷன் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று அதன் 'சதயம் விழா'வைக் கொண்டாடியபோது அதில் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், இல்லத்தின் பணிகளைப் பாராட்டியதுடன் மேம்படுத்தப்பட்ட கூடத்தைத் திறந்தும் வைத்தார். இக்கூடத்தில் கை, கால், முதுகு தசைகளை வலுப்படுத்தும் வகையில் ஏழு அதிநவீன உடற் பயிற்சிக் கருவிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரசித்திபெற்ற 'ஹெல்சிங்கி' (Helsinki) பல்கலைக்கழக ஆய்வு நிறுவனம், முதியோர் பராமரிப்புக்கென இந்தக் கருவிகளை வடிவமைத்துள்ளது.
இவற்றில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கருவிகளைப் பயன்படுத்தும் முதியவர்களுக்குச் சிறப்பு அட்டைகள் வழங்கப்படும். முதியவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் தீவிரம் போன்ற தகவல்கள் இந்த அட்டைகளில் சேகரிக்கப்படும். பின்னர், கணினி மென்பொருளின் உதவியுடன் இந்தத் தகவல்கள் ஆராயப்பட்டு தகுந்த உடற்பயிற்சி திட்டம் உருவாக்கப்படும்.
இவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லவாசிகள், தசை பலவீனத்தால் கீழே விழும் சாத்தியத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று இல்லத்தின் மூத்த இயன் மருத்துவ நிபுணர் திருமதி பீ.சத்தியா கூறினார்.
வாரத்தில் இரு முறை இல்ல வாசிகள் இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் இருக்கும் வெவ்வேறு கருவிகளில் உடற்பயிற்சியை மேற்கொள்வர். ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு இந்த உடற்பயிற்சி நீடிக்கும்.
''எங்களிடம் இதுவரையில் அடிப்படை உடற்பயிற்சிக் கருவிகள் மட்டுமே இருந்தன. இதனால் இல்லவாசிகளின் உடல் ஆரோக்கியத்தில், குறிப்பாக தசைகளின் அசைவுகளில் முன்னேற்றம் உள்ளதா என்பதைக் கண்காணிக்கச் சற்று கடினமாக இருந்தது.
"ஆனால் இந்தப் புதிய உடற் பயிற்சி கருவிகளின் உதவியால் முதியோரின் அசைவுகளில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது,'' என்று தெரிவித்தார் ஸ்ரீ நாராயண மிஷன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ்.தேவேந்திரன். அத்துடன் அரசாங்கம் வழங்கும் 'சில்வர் டிரஸ்ட்' சமூக நிதி ஆதரவுடன் இந்தப் புதிய கருவிகளை வாங்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகால பராமரிப்புத் தேவைகளை மேம்படுத்தும் செலவுகள், தொண்டூழியச் சமூக அமைப்புகளுக்கு ஏற்படுவது வழக்கம். இந்த நிதி ஆதரவு வழி, அச்செலவுகளுக்கு ஈடான தொகையை அரசாங்கம் திரட்டித் தருகிறது.

